For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவிலிருந்து சூப்பர் பக் பாக்டீரியா பரவுவதாக கூறுவது அபத்தமான செய்தி-இந்தியா

Google Oneindia Tamil News

Super Bug
டெல்லி: இந்தியாவிலிருந்து எந்த மருந்துக்கும் கட்டுப்படாத சூப்பர் பக் எனப்படும் பாக்டீரியா பரவுவதாக இங்கிலாந்து ஆய்வு கூறியிருப்பது அபத்தமான, இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

தி லேன்சட் என்ற இங்கிலாந்து இதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், இந்தியாவிலிருந்து நியூடெல்லி மெடல்லோ பீட்டா லேக்டமேஸ் என்ற பாக்டீரியா பரவி வருவதாகவும், இது எந்தவிதமான ஆன்டி பயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாது என்றும், உலகம் முழுவதும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த நோய் தாக்கினால் உடல் முழுவதும் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும் எனவும் அது கூறியுள்ளது.

ஆனால் இது மிகத் தவறான செய்தி என்றுமத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை கூறுகையில், இந்த செய்தி மிகத் தவறானது. இதுபோன்ற பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் இருக்கலாம். காரணம், சர்வதேச அளவில் சுற்றுலாக்கள், பயணங்கள் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதது. அதுபோன்ற தருணங்களில் இதுபோன்ற பாக்டீரியாக்கள் பரவுவது சகஜம்தான்.

ஆனால் இதை வைத்து இந்தியாவிலிருந்துதான் இது பரவியது. இந்தியாவுக்குப் போவது ஆபத்து, இந்திய மருத்துவமனைகளில் இதற்கு சிகிச்சைக்கான வசதிகள் இல்லை என்று கூறுவது அப்பட்டமான அபத்த செய்தியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் எழுப்பிய பாஜக தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா, சூப்பர் பக் இந்தியாவிலிருந்து பரவுவதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான சதியாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது. சில வெளிநாட்டு சக்திகள் இதற்குப் பின்னணியில் இருக்கலாம். இந்தியாவில் மருத்துவ சுற்றுலா வேகமாக வளர்ந்து வருவதால் அதைத் தடுக்கும் வகையில் இந்த வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள் என்றார்.

இந்தியாவில், பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகள், மிகக்குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகின்றன. வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்த முறையிலும், குறைந்த செலவிலும் சிகிச்சைக்கான வசதிகள் இந்தியாவில் நிறைய இருப்பதால் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் ஏராளமானோர் வந்தவண்ணம் உள்ளனர்.

இப்படி வருபவர்கள் மூலமாக இந்தியாவுக்கு ஆண்டுதோறும் ரூ. 1200 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் இப்படி ஒரு சூப்பர் பக் செய்தியை இங்கிலாந்து இதழ் வெளியிட்டுள்ளது.

அதை விட முக்கியமாக இந்தியாவுக்குப் போய் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு திரும்பியவர்கள் மூலமாகத்தான் இந்த பாக்டீரியா பரவி வருவதாவும் லேன்சட் இதழ் செய்தி தெரிவிக்கிறது.

இந்த பாக்டீரியாவுக்கு நியூடெல்லி என குதர்க்கமான பெயரையும் சூட்டியிருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி செயலாளர் வி.எம்.கடோச் இதுகுறித்துக் கூறுகையில், இதுபோன்ற பாக்டீரியாக்கள், இயற்கையிலேயே உள்ளன. இவை வெறும் உயிரியல் நிகழ்வு. சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பது. அதை யாரும் பரப்ப முடியாது.

அப்படி இருக்கையில், இந்த பாக்டீரியாவை ஒரு குறிப்பிட்ட நாட்டுடன், அதுவும் இந்தியாவுடன், தொடர்புபடுத்துவது பொருத்தமற்றது. இது உலகின் எந்த பகுதியில் இருந்தும் பரவி இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், தொற்று ஏற்படும் அபாயம் உண்டு என்று கூறுவது, முற்றிலும் சரியல்ல. இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தது, துரதிருஷ்டவசமானது.

இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆலோசனை நடத்த உள்ளது. அதன் அடிப்படையில், இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் குற்றச்சாட்டுக்கு இந்தியா தக்க பதில் அளிக்கும் என்றார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குநர் என்.கே.கங்குலி கூறுகையில், இது போன்ற பாக்டீரியாக்கள், கடந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. அங்கே அது பற்றி ஆராய்ச்சியும் நடைபெற்றது. எனவே, இந்தியா மீது பழிபோடுவது சரியல்ல என்றார்.

டெல்லி எய்ம்ஸ்' பல்கலைக்கழக பேராசிரியர் சர்மான்சிங் கூறுகையில், பல்வேறு மருந்துகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகளுக்கு கட்டுப்படாத எத்தனையோ பாக்டீரியாக்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால் அவற்றை மற்ற மருந்துகளை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். எனவே, இந்தியாவில் இருந்து இந்த பாக்டீரியா பரவியதாக கூறுவது சரியல்ல என்று தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X