For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் படிப்படியாக புதிய மோட்டார்கள்-தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் படிப்படியாக புதிய மோட்டார்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவி்த்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விவசாய மின் இணைப்புகளில் பயன்படுத்தப்படும் திறன் குறைந்த பழைய மின் பம்ப் செட்டுகளை மாற்றி திறன்மிக்க புதிய பம்ப் செட்டுகள் வழங்குவது பற்றி அரசின் விளக்கம்:
விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைச் சேமிக்கவும், பழைய திறன் குறைந்த பம்ப்செட்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மின் விரயத்தைக் குறைக்கவும்,

சிறு குறு விவசாயிகளுக்கு அத்தகைய பழைய திறன் குறைந்த பம்ப்செட்டுகளை மாற்றி புதிய திறன்கூடிய அதே குதிரைத்திறன் கொண்ட பம்ப்செட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் அறிவிப்பு முதல்வரால் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து ஓரிரு பத்திரிகைகள் இத்திட்டத்திற்கு கணிசமாக மானியத் தொகை ஆகும் என்றும், எனவே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்றும், இதனால் மின் சேமிப்பு ஏற்படுமா என்றும் சில ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளன.

இத்திட்டத்தைப் பற்றி முடிவு செய்யும்போதே, இத்திட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் என்றும், இதனால் ஏற்படும் மின் சேமிப்பை ஆய்வின் அடிப்ப டையில் தெரிந்து கொண்டும், அதன் அடிப்படையிலேயே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தை ஒரே ஆண்டில் செயல்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதை இந்த அரசும் அறியும்.
ஏனெனில், இதற்குத் தேவைப்படும் பம்ப்செட்டுகளை ஒரே ஆண்டில் உற்பத்தி செய்து தரும் திறன் தொழிற்சாலைகளுக்கு இல்லை.

எனவே, படிப்படியாக ஐந்து ஆண்டு காலத்தில் இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த அரசு உத்தேசித்துள்ளது.

மேலும், அந்தப் பத்திரிகைகள் குறிப்பிட்டதைப்போல, ஒரு பம்ப் செட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு என்பது- விவசாயத்தில் 7.5 குதிரைத்திறனுக்கு மேல் நீர்மூழ்கி மோட்டார்களின் விலையின் அடிப்படையில் அந்தப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஆனால், உண்மை நிலை என்னவென்றால், டெல்டா பகுதிகளில் மட்டுமே நீர்மூழ்கி மோட்டார்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, 3.5 முதல் 5 குதிரைத்திறன் கொண்ட பம்ப்செட்டுகளே சிறு குறு விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்து கின்றனர். உதாரணமாக தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 19 லட்சம் இணைப்புகளில், சுமார் 15 லட்சம் இணைப்புகள் 5 மற்றும் அதற்குக் குறைவான குதிரைத் திறனுள்ள பம்ப் செட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு குறு விவசாயிகள் அனைவரும் இந்தப் பிரிவுக்குள்தான் வந்து விடுவார்கள். இவற்றின் விலை சராசரியாக ரூ.20 ஆயிரம் ஆகும்.

மேலும், அதிக அளவில் சாதாரண மோட்டார்களே சிறு குறு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றின் விலை சுமார் ரூ.15 ஆயிரத்திற்குள்தான் இருக்கும்.

இத்திட்டத்தின் அறிவிப்பில் தெரிவித்தது போல், குறைந்தபட்சம் 20 சதவிகிதம் மின் சேமிப்பு இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இது அதிகபட்சம் 30 சதவிகிதம் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

புதிய பம்ப்செட்டுகள் வாங்கும்போது, இத்தகைய மின் சேமிப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ளனவா என்பதையும் பரிசோதித்து வாங்குவதுடன், அத்தகைய பம்ப் செட்களை வழங்கும் நிறுவனங்களே- அவற்றை பொருத்தி மின் சேமிப்பை செயல்முறையில் நிரூபித்துக் காட்டி, அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு அதற்கான தொகை வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படவுள்ளது.

மேலும், இதுவரை அரசு மானியத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக ஆண்டுக்குப் பத்தாயிரம் இணைப்புகள் என்ற முறையில், 50 சதவிகித மானியத்தில், புதிய மோட்டார்களைப் பொருத்தும் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, நிகரமாக உள்ள சுமார் 14 லட்சம் இணைப்புகள் ஒவ்வொன்றும் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் குறு சிறு விவசாயிகள், மற்ற விவசாயிகள் எண்ணிக்கை,

தற்போது அவர்கள் பயன்படுத்தி வரும் பம்ப் செட்டுகளினுடைய குதிரைத் திறன் மற்றும் நீர் இழுப்புத் திறன் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு, திறன் குறைந்த இணைப்புகள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அத்தகைய இணைப்புகளுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

அதனால், இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை ஒருமுறைக்குப் பலமுறை விவாதிக்கப்பட்டு, உரிய வழி முறைகள் வகுக்கப்பட்டு, அதனடிப்படையிலே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கும்போது, இது செயல்படுத்த முடியுமா என்பது போன்ற வினாக்களை மிகுந்த அக்கறையுடன் பத்திரிகைகள் எழுப்புவதும், அத்தகைய திட்டங்களைத் திறம்பட திட்டமிட்டு இந்த அரசு செயல்படுத்தும்போது, அதே பத்திரிகைகள் பாராட்டியுள்ளதையும் அனைவரும் அறிவர்.

அதேபோல், இந்தத் திட்டத்தையும், அறிவிப்பு வெளியிட்டவாறு சிறு குறு விவசாயிகள் பயன்படத்தக்க வகையிலும், மின் சேமிப்பு ஏற்படும் வகையிலும் இந்த அரசு உறுதியாக நிறைவேற்றும்.

விவசாயப் பயன்பாட்டிற்கென இணைப்பு பெற்று- பிற பயன்பாட்டிற்கு அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். அதையே ஒரு காரணமாகக் கொண்டு, விவசாயத்திற்கு இலவச மின் மோட்டார்களை வழங்கினால், விவசாயிகள் அதைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்றும், மின்சாரத்தை விரயம் செய்து நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள் என்பதும் ஒரு பொருத்தமான வாதமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

விவசாயிகள் பெரும்பாலும் தட்டுப்பாட்டோடு கிடைக்கின்ற நிலத்தடி நீரை, சிக்கனமாகப் பயன்படுத்துவார்களே தவிர, இலவசமாக மின்சாரம் கிடைக்கின்றதே என்ற காரணத்தினால், நீரையும், மின்சாரத்தையும் விரயமாக்குகின்ற முயற்சியில் ஈடுபட மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

பல்வேறு சிரமங்களுக்கிடையில் விவசாய உற்பத்தியைச் செய்கின்ற விவசாயிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் உதவிக்கரம் நீட்ட வேண்டுமோ- அந்த வகையில் எல்லாம் உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்தான், 7000 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயக் கடன் தள்ளுபடி, வட்டியில்லாத பயிர்க்கடன், மானிய விலையில் தரமான விதை விற்பனை, மானியத்துடன் கூடிய சொட்டு நீர்ப்பாசனம், மானியத்தில் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர் சாகுபடி,

மானியத்தில் உர விற்பனை என எண்ணற்ற சலுகைகளை விவசாயிகளின் நலன் கருதி செய்து வரும் இந்த அரசு, சிறு குறு விவசாயிகளால் கணிசமான தொகையை முதலீடு செய்து, இத்தகைய பழைய திறன் குறைந்த பம்ப்செட்டுகளை 50 சதவிகித மானியத்தில்கூட வாங்கி மாற்ற இயலாது என்பதை உணர்ந்து, இந்த நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளுக்கு மேலும் ஒரு சலுகையாக இந்தத் திட்டம் அமைய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் குறை கூறுபவர்கள் கூறினாலும், இதனால் பயன்பெறும் விவசாயிகள்- குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X