• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிக்கெட் சோதனை இல்லை-பாதுகாப்பு இல்லை-அலங்கோலத்தில் வைகை எக்ஸ்பிரஸ்

|

சென்னை: பயணிகளுக்கு முற்றிலும் பாதுகாப்பே இல்லாத நிலை சென்னை மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸில் ரயிலில் காணப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எந்தப் பெட்டியில் வேண்டுமானாலும் ஏறிப் பயணிக்கலாம் என்ற நிலையில் ரயில் உள்ளதால் பயணிகள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னையிலிருந்து மதுரை செல்ல பல ரயில்கள் உள்ளன. அதில் முதன்மையானது வைகை எக்ஸ்பிரஸ். இது பகல் நேர அதி விரைவு ரயிலாகும்.

இந்த ரயிலில் படுக்கை வசதி கிடையாது. அனைத்தும் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே.

இந்த ரயில் சென்னை எழும்பூரிலிருந்து தினசரி பிற்பகல் 12.40 மணிக்குக் கிளம்பி இரவு 8.35 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது. அதேபோல மதுரையிலிருந்து காலை 6.30 மணிக்குக் கிளம்பி, 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

இந்த ரயிலில் ஏகப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள். இதற்கு எப்போது நிவாரணம் என்று தெரியாமல் பயணிகள் படும் பாடு சொல்லி மாள முடியாது.

பிரச்சினைகளிலேயே பெரியது எது என்றால், டிக்கெட் பரிசோதகர்கள் யாரும் இந்த ரயிலில் வருவதில்லை என்பதுதான். இதனால் ரிசர்வேஷன் பெட்டிகளில் சாதாரண ஓபன் டிக்கெட் வைத்திருப்பவர்களும் ஏறி, இடம் இருந்தால் அமர்ந்து கொள்ளும் நிலை காணப்படுகிறது. அதில் கூட தவறில்லை. முறையாக டிக்கெட் எடுத்து, ரயிலில் ஏறுபவர்கள் இடம் இருந்தால் அமருவதில் தவறில்லைதான்.

ஆனால் பலர் டிக்கெட் எடுக்காமலேயே கூட ரயிலுக்குள் ஏறிக் கொள்ளும் சூழ்நிலை காணப்படுகிறது. இவர்களும் இரண்டாம் வகுப்பு ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறி நின்றபடியோ, தரையில் அமர்ந்தபடியோ பயணம் செய்வதை சாதாரணமாக பார்க்க முடிகிறது.

இப்படி யார் வேண்டுமானாலும் எந்தப் பெட்டியில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற நிலை இருப்பதால் சென்னை மின்சார ரயிலில் காணப்படுவதைப் போல அனைத்து 2ம் வகுப்பு ரிசர்வேஷன் பெட்டியிலும் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் முன்கூட்டியே ரிசர்வ் செய்து வரும் பயணிகளுக்கு பெரும் அவுசகரியங்கள் ஏற்படுகிறது.

அதேபோல பாதுகாப்பற்ற நிலை. இரவு நேர ரயில்களில் ரயில்வே போலீஸார் துப்பாக்கி சகிதம் அவ்வப்போது ரயிலுக்குள் உலா வருவது வழக்கம். இதனால் பயணிகள் நிம்மதியாக தூங்க முடியும், பயணிக்க முடியும். ஆனால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த போலீஸ் பாதுகாப்பை மிக மிக அரிதாகவே காண முடிகிறது. இதனால் பல சட்டவிரோத செயல்களும் ரயிலில் நடந்தேறுவதைக் காண முடிகிறது.

உதாரணத்திற்கு, அக்டோபர் 17ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த காட்சிகள் அப்பாவி பயணிகளை பெரும் கடுப்பேற்றின. அதாவது மதுரையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்திற்காக இந்த ரயிலில் ஏராளமான அதிமுகவினர் பயணம் செய்தனர். அனைவரும் முறைப்படி டிக்கெட் வாங்கி பயணம் செய்தனர்.

ஆனால் ரயில் தாம்பரத்தைத் தாண்டியதும் அவர்கள் மது அருந்த ஆரம்பித்த செயல்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொது இடமாயிற்றே, பெண்கள், குழந்தைகள் பயணிக்கிறார்களே என்ற நாகரீகமோ, உணர்வோ சிறிதும் இல்லாமல் பாட்டில்களை கையில் எடுத்து கூடவே கொண்டு வந்திருந்த டம்பளர்களில் (எவர்சில்வர் டம்பளர்கள்) ஊற்றி ஜூஸ் குடிப்பது போல குடித்தபடியே பயணித்தனர்.

அது போதாதென்று சிலர் கையில் அதிமுக கொடிகளை ஏந்திக் கொண்டு ஒவ்வொரு பெட்டியாக கோஷமிட்டபடி நடை போடவும் செய்தனர். இதனால் அப்பாவி பயணிகள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள்தான் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதுகுறித்து போலீஸில் புகார் செய்யலாம் என்றால் ஒரு போலீஸ்காரரைக் கூட பெட்டியில் காண முடியவில்லை.

வைகை எக்ஸ்பிரஸில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இருக்கைகளின் அசவுகரியம். மூன்று பேருக்கான சீட்தான் போட்டுள்ளனர். ஆனால் அதில் இரண்டுபேர்தான் சவுகரியமாக அமர முடியும். சற்று பருமனான நபர் வந்து விட்டால் அவ்வளவுதான், பிதுங்கிப் போய் திணறித் திண்டாட வேண்டியதுதான்.

குறைந்த கட்டணம், அதனால் அவுசகரியங்கள் கூடவே இருக்கும் என்று ரயில்வே கூறலாம். அதற்காக இப்படி சற்றும் பாதுகாப்பே இல்லாத வகையில் வைகை எக்ஸ்பிரஸ் இருப்பது பொதுமக்களுக்கு நிச்சயம் நல்லதல்ல. இத்தனைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கும் நிலையில் பயணிகளின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டியது ரயில்வேயின் கடமை என்பதை ரயில்வே அதிகாரிகள் மறக்கக் கூடாது.

வைகை எக்ஸ்பிரஸ் என்றில்லை, பகல் நேரங்களில் ஓடும் பல ரயில்களிலும் இதேதான் கதி என்கிறார்கள். ரயில்வே சற்று கவனம் எடுத்து செயல்பட்டால் நல்லது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X