For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோராபுதீன் மனைவியை கற்பழித்து ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துக் கொன்றனர்-சோரபுதீன் சகோதரர் வக்கீல் தகவல்

By Chakra
Google Oneindia Tamil News

Kausarbi and Sorabudeen
அகமதாபாத்: சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் கொலை செய்த குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், அவரது மனைவி கெளசர் பீயை கொடூரமாக கற்பழித்து பின்னர் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்ததாக சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீனின் வக்கீல் முகுல் சின்ஹா குஜராத் உயர்நீதி்மன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சோராபுதீன், கெளசர் பீ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அமீத் ஷா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆர்.எச்.சுக்லா முன்பு ஆஜராகி முகுல் சின்ஹா பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சோராபுதீனின் மனைவி கெளசர் பீ ஒரு பண்ணை வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை. மாறாக அவரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர். அதுவும் அமீத் ஷாவுக்கு தெரிவித்த பிறகே கொன்றுள்ளனர்.

கெளசர் பீ குறித்து அனைத்து புலனாய்வு அமைப்புகளும் அவர் காணவில்லை என்றும் மர்மமான சூழ்நிலையில் அவர் மாயமாகி விட்டார் என்றும்தான் கூறியிருந்தன.

ஆனால் உண்மையில் கெளசர் பீயை ஏடிஎஸ் அலுவலகத்தில் வைத்துதான் கொன்றுள்ளனர்.

2005ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி சோராபுதீனும், அவரது மனைவியும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் ஆந்திராவில் வைத்து பிடிக்கப்பட்டு ஹைதராபாத்-சங்க்லி இடையிலான பஸ்சில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அவர்களை அகமதாபாத் கொண்டு வந்தனர். காந்தி நகர் புறநகர்ப் பகுதியில் உள்ள திஷா பண்ணை இல்லத்தில் அடைத்து வைத்தனர்.

சோராபுதீனை முதலில் கொன்றனர்:

பின்னர் நவம்பர் 26ம் தேதி அதிகாலையில், சோராபுதீனை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பண்ணை இல்லத்திற்கு வெளியே கொண்டு சென்று சுட்டுக் கொன்றனர். நரோல் என்ற இடத்தில் இந்த போலி என்கவுன்டர் நடந்துள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு கெளசர் பீயை அர்ஹாம் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பண்ணை இடத்தில் அடைத்து வைத்தனர். அதன் உரிமையாளர் ராஜேந்திர ஜிரவாலா என்பவர் ஆவார். அங்கு சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா செளபே என்பவரின் காவலில் மூன்று நாட்கள் வைத்திருந்தனர்.

சித்திரவதை செய்யப்பட்ட கெளசர் பீ:

அங்கு வைத்து அவரை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்துள்ளனர். நவம்பர் 29ம் தேதி காலை கெளசர் பீயை செளபே ஏடிஎஸ் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டு வந்து ஏடிஎஸ் தலைவர் வன்சாரா முன்பு ஆஜர்படுத்தினார்.

அப்போது கெளசர் பீயை தீர்த்துக் கட்டம் எண்ணம் போலீஸாரிடம் இல்லை. அவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு அனுப்பி விடவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் போக மறுத்து விட்டார். அப்போதுதான் வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கெளசர் பீயை வெளியே விட்டால் ஆபத்து என்று புரிந்திருக்கிறது. இதையடுத்து அவரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.

மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்ட கெளசர் பீ:

அதன்படி மாலை 4.30 மணிக்கு டிஎஸ்பி நரேந்திர அமீன் (இவர் ஒரு டாக்டர்) ஏடிஎஸ் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். வன்சாராவின் உத்தரவின் பேரில், கெளசர் பீக்கு, பென்டோதால் என்ற மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தினார் அமீன். இதனால் மாலை 5 மணியளவில் உயிரிழந்தார் கெளசர் பீ.

இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் கிட்டத்தட்ட 15 முறை அமீத் ஷாவிடமிருந்து அமீனுக்குப் போன் வந்துள்ளது. ஒரு ஜூனியர் அமைச்சரான ஷா, எதற்காக டிஎஸ்பிக்கு இத்தனை முறை போன் செய்ய வேண்டும்.

அப்போது குறுக்கிட்ட அமீத் ஷாவின் வக்கீல் - இந்த நேரத்தில் காந்தி நகரில் ஒரு நான்கு வயது சிறுவன் மர்மமான காணாமல் போய் விட்டான். அது குறித்து விசாரிக்கவே அமீனைத் தொடர்பு கொண்டார் ஷா என்றார்.

சின்ஹா தொடர்ந்து வாதிடுகையில், கெளசர் பீ இறந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டதும், அவரது உடலை எரிக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு இன்ஸ்பெக்டர் வி.ஏ. ரத்தோட் என்பவரை கேட்டுக் கொண்டார் வன்ஸாரா. ரத்தோடும் மோத்திரா கிராமத்திலிருந்து விறகுகளை வாங்கினார். அதை போலீஸ் வேனில் நாத்துபாய் என்ற போலீஸ்காரர் கொண்டு வந்தார்.

அவரும், இன்ஸ்பெக்டரும், சபர்கந்தா மாவட்டம் பிரான்டிஜ் கிராஸ் சாலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அமீன், செளபே ஆகியோர் ஒரு நீல நிற ஜீப்பில் கெளசர் பீயின் உடலைக் கொண்டு வந்தனர். இன்னொரு வாகனத்தில் வன்ஸாராவும், ஐபிஎஸ் அதிகாரியான ராஜ்குமார் பாண்டியன் அங்கு வந்து சேர்ந்தனர்.

வன்ஸாராவின் ஊரில் வைத்து உடல் எரிப்பு

மூன்று போலீஸ் வாகனங்களும் அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றுள்ளன. பின்னர் வன்ஸாராவின் சொந்த ஊரான இல்லாலுக்கு வந்து சேர்ந்தனர். அஹ்கு வைத்து ஒரு ஆற்றங்கரையில் கெளசர் பீயின் உடலை எரித்தனர். இந்த நிகழ்ச்சி நவம்பர் 29-30க்கு இடைப்பட்ட நள்ளிரவில் நடந்துள்ளது.

கெளசர் பீயைக் கற்பழித்த சப் இன்ஸ்பெக்டர்:

இதற்கிடையே கெளசர் பீயை ஏடிஎஸ் காவலில் வைத்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் கற்பழித்த சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் இதுகுறித்து சிபிஐ விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

சோரபாபுதீன் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்ட நாளில் ஏடிஎஸ் அலுவலகத்தி்ல் பணியில் இருந்தவரான சப் இன்ஸ்பெக்டர் செளபேதான் இந்த அக்கிரமத்தைச் செய்துள்ளார்.

இதுகுறித்து ரவீந்திர மக்வானா என்ற உதவி சப் இன்ஸ்பெக்டர் (தற்போது ரயில்வே போலீஸில் உள்ளார்) சிபிஐயிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது...

அப்போது செளபே சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரது பொறுப்பில்தான் 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார் கெளசர் பீ. அதைப் பயன்படுத்தி மூன்று நாட்களும் கெளசர் பீயைக் கற்பழித்து பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தினார் செளபே

சோராபுதீன் பிடிபட்டதற்குப் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று போலீஸ் அதிகாரிகளான அஜய் பர்மார், சாந்தாராம் சர்மா ஆகியோரிடம் கேட்டேன்.

அப்போது பர்மார் கூறுகையில், நான், ராஜ்குமார் பாண்டியன், தாபி, செளபே, செளகான் ஆகியோர் ஹைதராபாத் சென்று சோராபுதீனையும், கெளசர் பீயையும் பிடித்து சங்க்லி செல்லும் பஸ்சில் கூட்டி வந்ததாகவும், பின்னர் அகமதாபாத் கொண்டு சென்றதாகவும், அர்ஹாம் பண்ணை இல்லத்திற்குக் கூட்டிச் சென்றதாகவும் கூறினார்.

அங்கு வைத்து சோராபுதீனை வன்ஸாராவும், பாண்டியனும் விசாரித்ததாகவும் கூறினார் பர்மார்.

அப்போது பர்மாரிடம் நான், செளபே, கெளசர் பீயை கற்பழித்த விவரத்தைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் மக்வானா.

தற்போது மக்வானாவின் வாக்குமூலத்தை கூடுதல் குற்றப்பத்திரிக்கையாக சிபிஐ சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.

கெளசர் பீ கொல்லப்படுவதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமீத் ஷாவுக்கு ஜாமீன் கிடைத்தது:

இந்த நிலையில் இன்று அமீத் ஷாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரூ. 1 லட்சம் ரொக்க ஜாமீனில் அமீத் ஷாவை விடுதலை செய்யலாம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

கடந்த ஜூலை 26ம் தேதி கைது செய்யப்பட்டார் ஷா. ஜாமீன் கோரி அவர் சிபிஐ கோர்ட்டை முதலில் நாடினார். ஆனால் அங்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஷா.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் இதுவரை ஐபிஎஸ் அதிகாரிகளான வன்ஸாரா, ராஜ் குமார் பாண்டியன், திணேஷ், அபய் செளடாஸ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை முன்பு விசாரித்தவரான ஐபிஎஸ் அதிகாரி கீதா ஜோஹ்ரியின் பங்கு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X