For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாட்டும் நானே! பாவமும் நானே!- மீது வைகோ பாய்ச்சல்

Google Oneindia Tamil News

Vaiko
மதுரை: பாட்டும் நானே! பாவமும் நானே! என்ற பாணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்து விட்டதாக கூறி மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றிடும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் கருணாநிதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் விடியல் வந்திட வேண்டும் என்பது மட்டுமே எமது அறிக்கையின் நோக்கம். வாழ்க்கையில் எல்லா நிலையிலும் போராடிக் கொண்டிருக்கும் சக மனிதர்களின் நிலையை எடுத்துச் சொல்வது ஒவ்வொருவரின் கடமை. பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்று அரசு ஆராய்வதற்குப் பதிலாகப் பிரச்சனையைக் கூறுபவர்கள், தங்களைத் தலைவர்கள் என்று கருதி அறிக்கை விடுவதாகப் பார்ப்பது மாண்புடையவர்க்கு அழகல்ல.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

என்ற குறள் கூறும் நற்செய்தியை குறளோவியம் எழுதியவர்க்கு நினைவூட்டுகிறேன்.

கேள்வியும் நானே, பதிலும் நானே என்று 03.12.2010 அன்று வெளியிட்ட முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தொலைநோக்குடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் என்று பூதக் கண்ணாடி கொண்டு அந்த அறிக்கையை படித்துவிட்டு மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் 5.1.2010 அன்று நடந்த கூட்டத்திற்கு பின் 27.3.2010 அன்று மாற்றுத் திறனாளிகளுக்காக தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு 22.4.2010 அன்று முதலமைச்சரே மாற்றுத் திறனாளிகளின் வாரியத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, மகள் கனிமொழி வாரியத்தின் ஆலோசகராகவும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வேண்டப்பட்டவர்களை வாரிய உறுப்பினர்களாக நியமித்தபின் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய கூட்டம் இந்நாள்வரை எத்தனை நடந்துள்ளது? கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என்பதை நாட்டு மக்கள் அறிய ஆவலாக உள்ளனர்.

இளைஞன் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னமே வருமானவரித் தொகை போக 45 லட்சம் ரூபாயைப் பெற்று மாற்றுத் திறனாளிகள் வாரியத்திற்காகச் செலவிட வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக வாரியத் தலைவராக இருக்கும் முதலமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். இது எப்படி இருக்கிறது என்றால், அறிவாலயத்தில் இயங்கி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்திற்கு அதன் தலைவராக இருக்கும் கருணாநிதி, மாதந்தோறும் வாடகைப் பணத்தை அறிவாலயத் தலைவராக இருக்கும் மு.கருணாநிதியிடம் வழங்கி வருவதைப் போன்று சினிமா வசனகர்த்தா கதையாசிரியர் கருணாநிதி, மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் தலைவர் மு.கருணாநிதியிடம் கதை வசனம் எழுதி கிடைத்த பணத்தை வாரியத்தின் கூட்டம் கூட்டப்படாமல் வாரியத்தின் ஒப்புதல் இல்லாமலே செலவு செய்யக் கொடுத்துள்ளது விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை.

மேலும், 4 1/2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியாயமாக கிடைக்கப்பட வேண்டிய மூன்று சதவிகித அரசுப்பணி வழங்கப்பட்டிருக்குமேயானால் 14 ஆயிரம் பேர் பயனடைந்திருக்க வேண்டும். ஆனால், பாட்டும் நானே, பாவமும் நானே என்று கேள்வி பதில் அறிக்கையில் 3,169 பேருக்கு மட்டும் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மூன்று சதவிகித பணி வழங்கப்படாததை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி இருக்கையில் அரசுத் துறைகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டினைக் கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளது, மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றிடும் கண்துடைப்பு நாடகமே தவிர வேறு என்ன?

அதே அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்காக 2010-2011 ஆம் ஆண்டு 113 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், 3.12.2010 அன்று மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சரும் சமூக நலத்துறை அமைச்சரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைப் பேசியுள்ளதிலிருந்து இந்த ஆட்சி மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனையை சமூக பிரச்சனையாக கனிவுடன் அணுகவில்லை என்பது தெரிகிறது. மாற்றுத் திறனாளிகள் கேட்பது சலுகைகள் அல்ல; உரிமையை கேட்கிறார்கள்; அதற்காகப் போராடுகிறார்கள்.

கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளைக்கு என்பதைப் போன்று வாரியத் தலைவரின் முரணான அறிக்கைக்குப் பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளே முன்வந்து அச்சம் இல்லாமல் சொன்னால் ஒழிய உண்மை உலகுக்குத் தெரியாது.

மாற்றுத் திறனாளிகளின் சாதனைப் பெண்மணி ஹெலன் கெல்லர் : “I can"t do everything but I will do something!" என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

அதைப் போன்று மாற்றுத் திறனாளிகளால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடினும் தேவைப்படும் காலத்தில் செய்ய வேண்டியதை செய்தே தீருவார்கள்.

இந்திய சிங்களப் பேரினவாத போர் வெறியால் ஈழத் தமிழர்கள் முடமாகி எண்ணற்ற மாற்றுத் திறனாளிகள் உருவாக காரணமாக இருந்துவிட்ட கருணாநிதி, பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளின் துயர் துடைக்க அறிக்கை விட்டால் தங்களைத் தலைவர்கள் என்று கருதி அறிக்கை விடுவதாக ஊதி ஊதி பிரச்சனையைத் திசை திருப்ப நினைக்கின்றார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தபோது, பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டு தலைவர் பதவியை தந்தை பெரியாருக்காக வைத்திருந்தார்.

அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின் தி.மு.கவில் சட்ட திருத்தம் செய்து தலைவர் பதவியில் அமர்ந்து கொண்டவர். தலைவர் என்றால் தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை, இருக்கக் கூடாது என்கின்ற மனநிலையில் உள்ளவர் கருணாநிதி என்பதை நாடும் நல்லவர்களும் நன்கு அறிவர்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை - (குறள்)

என்று தெரிவித்துள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X