For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர்க்குற்றவாளியாக இலங்கை அறிவிப்பு-காப்பாற்றுவாரா மன்மோகன் சிங்?

Google Oneindia Tamil News

கொழும்பு: போர்க்குற்றத்தை இலங்கை இழைத்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தீர்மானமாக கூறியுள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோரை மிகக் குறுகலான இடத்திற்குள் முடக்கி தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், ரசாயண ஆயுதங்களையும் பயன்படுத்தி கிட்டத்தட்ட 40,000 பேரைக் கொன்று குவித்தது இலங்கை ராணுவம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இலங்கையை ஒரு போர்க்குற்றவாளி என ஐ.நா அறிவித்துள்ள நிலையில் அந்த நாட்டை இந்தியாவும், அதன் பிரதமர் மன்மோகன் சிங்கும் காப்பாற்றுவார்கள் என்று இலங்கைத் தரப்பில் பெரும் நம்பிக்கையுடன் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை இன்று வாஷிங்டனில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளியிட்டார். அப்போது இலங்கை செய்துள்ளது போர்க்குற்றம். எனவே அதுகுறித்து விசாரிக்கப்படும் என்றும் மூன் கூறினார்.

இதனால் இலங்கை அரசுக்கு மிகப் பெரிய சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இலங்கையை ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத் தடைகள் சரமாரியாக பாயப் போகின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் வேகம் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இலங்கைக்கு சாதகமான தொணியிலேயே பேசி வந்த, டபுள் கேம் ஆடி வந்த பான் கி மூனின் தற்போதைய பேச்சு இலங்கைக்கு எதிரானதாக கருதப்படுகிறது. எனவே இலங்கை பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவித்து தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி அடுக்கடுக்காக சோதனைகளை சந்திக்கவுள்ள இலங்கை அதிலிருந்து தப்ப இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. இதில் சீனா, இலங்கைக்கு முழுமையாக உதவும் என்று தெரிகிறது. இந்தியா சொன்னால் ரஷ்யாவும், இலங்கைக்கு உதவும். அதேசமயம், இந்தியா எந்த வகையில் உதவப் போகிறது என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இலங்கை போர்க்குற்றவாளி என்று ஐ.நா. நிபுணர் குழு பச்சையாகவே கூறி விட்டது. அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று பான் கி மூனும் கூறி விட்டார். எனவே இலங்கையைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இந்தியா இறங்கினால், அதன் அடிப்படைத் தத்துவத்தை அதுவே குண்டு வைத்துத் தகர்ப்பது போலாகி விடும் என்பதால் முள் மீது கிடக்கும் துணியை பத்திரமாக எடுக்கும் நிலையில் இந்தியா தற்போது தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற பெரும் நம்பிக்கையில் இலங்கை உள்ளதாம்.

இதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கைக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவிக்கு வந்திருக்கிறார்.

இலங்கையுடனான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மற்றவர்களைவிட அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும் ஜெனீவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது, எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் 2009-ல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்துக் காப்பாற்றியது இந்தியாதான்.

இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா பேசியதால் அது கைவிடப்பட்டது.

பொருளாதார நிலைமை காரணமாக வெளிநாட்டு வர்த்தகப் பற்று-வரவில் பற்றாக்குறையால் இலங்கை அரசு தத்தளித்துக் கொண்டிருந்தபோது மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) இழுத்தடித்துக் கொண்டிருந்தபோது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாகப் பரிந்துரைத்து வாங்கித் தந்தது.

சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் டுனா கமிஷன் கூட்டத்தில் பிரிட்டனுக்குச் சொந்தமான கடல்பரப்பில் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக மீன் பிடித்ததற்காகக் கடுமையாகக் கண்டிக்கப்படவிருந்த தருணத்திலும் இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகப்பேசி மீட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவும் ரஷியாவும் நிரந்தர உறுப்பு நாடுகள். வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் உள்ள சக்திவாய்ந்த நாடுகள். ஆனால் மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் வரும்போது இலங்கைக்கு ஆதரவாக அந்த இரண்டும் செயல்படும் என்று நம்ப முடியாது.

இந்தியா இப்போது தற்காலிக உறுப்பு நாடாக சுழற்சி அடிப்படையில் இடம் பெற்றிருக்கிறது. ரத்து அதிகாரம் இல்லாவிட்டாலும் அது இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஆதரிக்காமல் ஒதுங்கியிருந்தாலே இலங்கை காப்பாற்றப்படும்.

ஈரான், சூடான், லிபியா ஆகிய நாடுகளையும் இதே போல மனித உரிமை மீறலுக்காகக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது சீனாவும் ரஷியாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்துவிட்டன. எங்கள் விவகாரத்திலும் அப்படிச் செய்யக்கூடும்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் எங்களைக் கண்டிக்கத் தீவிரம் காட்டுகின்றன. அமெரிக்கா கூட தனது நிலையை இறுதியில் மாற்றிக் கொள்ளலாம். ஐரோப்பிய நாடுகளால்தான் பிரச்னை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு எங்களைக் காப்பாற்றும் என்றார் அந்த அதிகாரி.

போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு விட்ட, அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோரை அநியாயமாக கொன்று குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையை, இந்தியா காப்பாற்றுமா அல்லது கைவிடுமா என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

ஐ.நாவின் அறிக்கை முழு விவரம்

English summary
Sri Lanka is hoping that India and PM Manmohan Singh will save it from the warcrime crisis. The report of UN expert panel on Sri Lanka's human rigths violations during the Eelam war has been released. The panel has charged Sri Lankan army for killing of 40,000 innocent people during the final phase of the Eelam war. And it has dubbed Sri Lankas has committed war crimes. So now Sri Lanka's only hope is India and its Prime Minister Manmohan Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X