For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி தர மறுக்கும் மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு போராட வேண்டும்: சீமான் கோரிக்கை

Google Oneindia Tamil News

மதுரை: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிமுக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், போதிய நிதி தர மறுக்கும் மத்திய அரசை எதிர்த்து மாநில அரசு போராட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசின் போக்குவரத்து துறையும், ஆவின் பால் நிறுவனமும் நட்டத்தில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி பேருந்து கட்டணத்தையும், பால் விலையையும் தமிழக அரசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கிவரும் சாதாரண பேருந்துகளின் கட்டணம் 50 சதவீதம் வரையும், புறநகர் பேருந்துக் கட்டணங்கள் 60 சதவீதம் வரையும் உயர்த்தப்பட்டிருப்பது அன்றாடங்காட்சிகளில் இருந்து தங்கள் பணிக்காக தினமும் இரு வேளை பேருந்தில் பயணம் செய்யும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எடுத்துக்காட்டாக, பெரம்பூரில் இருந்து சேத்துப்பட்டு வரை செல்வதற்கு இருந்த கட்டணம் ரூ.8ல் இருந்து ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இருமுறை சென்று வருவோருக்கு இது ரூ.10 கூடுதலாகும்.

இதேபோல் 200 கி.மீ. தூரமுள்ள திருவண்ணாமலை, நெய்வேலி போன்ற தூரம் குறைவாக உள்ள இடங்களுக்குச் செல்லும் பேருந்து கட்டணங்கள் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர் போன்ற நீண்ட தூர ஊர்களுக்குச் செல்லும் சாதாரண வேகப் பேருந்து கட்டணம் ரூ.60 முதல் ரூ.120 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் உணவுப் பொருட்களில் மிகவும் அத்தியாவசியமான பாலின் விலை லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்பட்டிருப்பது ஏற்கனவே மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் விலை உயர்வில் சிக்கித் தவிக்கும் மக்களை கடுமையாக வெறுப்பேற்றியுள்ளது.

இந்த அளவிற்கு பேருந்து கட்டணங்களையும், பால் விலையையும் உயர்த்துவதற்கு தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் ஆயிரம் இருப்பினும், ஒரே அடியாக இப்படி மிக அதிகமாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமை, நிதிச் சிக்கல் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு கடன் வழங்க முன்வராத காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று முதல்வர் கூறுகிறார். அப்படியானால் மத்திய அரசுக்கு எதிராகத்தான் போராட வேண்டுமே தவிர, நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த மாநில மக்களின் மீது அந்தச் சுமையை ஏற்றுவது நியாயமல்ல.

மத்திய அரசுக்கு எங்கிருந்து வருவாய் வருகிறது? சுங்கத் தீர்வை, உற்பத்தித் தீர்வை, சேவை வரி, நிறுவனங்கள் வருமான வரி, தனி நபர் வருமான வரி ஆகிய அனைத்தும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்துதானே வசூலிக்கப்பட்டது? அவ்வாறு இருக்கையில் கடுமையான நிதிச் சிக்கலைச் சந்திக்கும்போது, மாநில அரசுக்கு கடன் கொடுத்து உதவ வேண்டியது அதன் கடமையல்லவா? இதை மத்திய அரசு மறுக்கிறது என்றால் அதனை எதிர்த்து தமிழக முதல்வர் மக்களைத் திரட்டி போராட வேண்டும்.

இதற்கு முன் உதாரணம் உள்ளது. தமிழ்நாட்டிற்குத் தேவைப்படும் அளவிற்கு அரிசி அளவை உயர்த்தி மத்திய அரசு வழங்க மறுத்தபோது, அதனை எதிர்த்து அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். போராட்டத்தில் குதித்தார். உடனடியாக தேவையான அளவிற்கு அரிசியை உயர்த்தி அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

அதே போல் காவிரி நதியில் உடனடியாக தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தபோது, அதனை எதிர்த்து அன்றும் முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி பெறவில்லையா? அப்படி போராட வேண்டும். அப்படி முதல்வர் போராட முன்வந்தால் அந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாக பங்கேற்கும். அதை விட்டுவிட்டு மத்திய அரசு உதவாத காரணத்தைக் காட்டி மாநில மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவது சரியான நடவடிக்கை ஆகாது.

அதே நேரத்தில் மற்றொன்றையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். வரி வருவாயைக் கொண்டுதான் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். எனவே வருவாயைப் பெருக்க இப்படி கட்டண, விலை உயர்வு செய்யும்போது ஏழை, எளிய, சாதாரண மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது. அவர்களை அதில் இருந்து காக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, மாத வருவாய் ரூ.6,000 வரை உள்ளவர்களை இந்த விலை உயர்வுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். இதனை உணவுப் பொருள் வழங்கல் அட்டையின் அடிப்படையில் மிகச் சாதாரணமாக நிறைவேற்றலாம்.

அப்படிப்பட்ட வழிகளைக் கையாண்டு வசதி படைத்த, உயர் வருவாய் கொண்டவர்களிடமிருந்து வருவாய் பெற வழி செய்ய வேண்டும். இப்படிப்பட்ட வழிமுறையை மின் கட்டண உயர்வில் கடைபிடிக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக எல்லோர் தலையிலும் சுமையை ஏற்றும் பழைய நிர்வாக முறையை கைவிட வேண்டும்.

எனவே தற்போது உயர்த்தியுள்ள பேருந்து கட்டணங்களையும், பால் விலை உயர்வையும் தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு, அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, ஆலோசித்து மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar chief Seeman has asked the TN government to protest against the centre for not giving enough funds. Seeman wants ADMK government to withdraw the milk price and bus fare hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X