For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் தினம் கலாட்டா: பொதுமக்கள் காயம்- கல்லூரி மாணவர்கள் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பஸ் தினம்' கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ் மீது சரமாரியாக கல்வீசி வன்முறையில் ஈடுபட்டனர் இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். ரகளை செய்த கல்லூரி மாணவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.

பஸ் தின ஊர்வலம்

சென்னையில் பஸ் தினம் கொண்டாட போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் 150 ஆண்டுகால பாரம்பரியமிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பஸ் தினம் கொண்டாடுவதற்காக நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பஸ்சில் ஏற அனுமதிக்கவில்லை. மேலும், பஸ் தினம்' கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கலைந்து செல்லும்படி கூறினார்கள்.

இருப்பினும் போலீஸ் தடையையும் மீறி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக கூடுதல் போலீசார் ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் கோஷம் போட்டபடி ஊர்வலம் சென்றனர்.

மாணவர்கள் கல்வீச்சு

ஊர்வலம் அமைந்தகரை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, ஊர்வலத்தில் இருந்த சில மாணவர்கள் அங்கு இருந்த 2 மாடி கட்டிடத்தின் மீது கற்களை எறிந்தனர். இதில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே ஊர்வலம் பச்சையப்பன் கல்லூரியை அடைந்ததும் மாணவர்களும் கல்லூரிக்குள் சென்றனர்.

இறுதி வரை வந்த போலீசார் மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் சென்றபின்பு, கல்லூரி முன்பு கூடியிருந்தனர். அப்போது திடீரென கல்லூரி வளாகத்தில் இருந்து மாணவர்கள் பெரிய பெரிய செங்கற்களை எடுத்து போலீசாரை நோக்கியும், சாலையில் சென்ற வாகனங்களை குறிபார்த்தும் சரமாரியாக வீசினார்கள். இதில் 2 போலீசாரின் மீது கற்கள் விழுந்ததில் அவர்கள் காயம் அடைந்தனர்.

மாணவர்கள் கல்லூரி வாயிலில் கூடிநின்று சாலையில் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி சரமாரியாக தாக்கினார்கள். இதில் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு சென்ற 15பி என்ற அரசு பஸ் மாணவர்களின் தாக்குதலுக்கு இலக்கானது. கல்வீச்சால் பதறிய பயணிகள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஜன்னல் வழியாக வெளியே குதித்து ஓடினார்கள். இதில் குழந்தைகளும், பெரியவர் ஒருவரும் காயமடைந்தனர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தலையிலும் கற்கள் விழுந்ததால் காயம் அடைந்தனர். போலீஸ் ஜீப் ஒன்றின் கண்ணாடியும் நொறுக்கப்பட்டது.

மாணவர்கள் மீது நடவடிக்கை

மாணவர்களின் ரகளையை அடுத்து கூடுதல் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் கல்லூரி வளாகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய மாணவர்கள் சிலரை விரட்டி பிடித்து அவர்களை கைது செய்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இணை கமிஷனர் சேஷசாயி, "தொடர்ச்சியாக இதுபோன்ற அசம்பாவிதங்களில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாணவர்களும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட சிலர்தான் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்றார்.

இதனிடையே மாணவர்களை மேலும் பிரச்சினையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமையன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
About 200 students of Pachaiyappa’s College took out a procession from Koyambedu to their college on Poonamallee High Road on Thursday. They entered the college and started pelting stones at the public after they were refused permission to celebrate what was supposed to be their ‘bus day’.Six policemen and 20 others were injured in the stone-pelting incident. The Kilpauk police arrested 14 students from the college, which declared a holiday on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X