டெல்லி பலாத்காரம்... லோக்சபாவில் சுஷ்மா ஆவேசம், கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jaya bachan
டெல்லி: டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார். ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அவையே உருக்கமான சூழ்நிலைக்கு மாறியது.

லோக்சபாவில் இன்று டெல்லியில் இளம் மருத்துவ மாணவியை ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்த கொடும் செயல் குறித்த விவாதம் இன்று நடந்தது. அப்போது பேசிய உறுப்பினர்கள் அனைவரும் கடும் ஆவேசத்துடன் பேசினர்.

பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது.

சம்பந்தப்பட்ட மாணவிக்கு மிகப் பெரிய கொடுமை நடந்துள்ளது. உடல் ரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடலிலிருந்து சில பகுதிகளை எடுக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாக இருந்துள்ளது என்றார் சுஷ்மா ஆவேசமாக.

கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன்

ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் பேசுகையில், கண்ணீர் விட்டு அழுதார். அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலைத் தெரிவித்ததா, வருத்தம் தெரிவித்ததா. இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?.

அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வருமே...ஆறாத வடுவாக அது கூடவே இருக்குமே... மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அழுதார் ஜெயா.

பின்னர் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்களது தந்தைகளாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிக் கொண்டுள்ளனர். நாட்டுக்கு இது மிகப் பெரிய அவமானமாகும். இந்த உலகுக்கு உங்களைக் கொண்டு வந்த பெண்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா.. அவர்களுக்கு பாதுகாப்பே கிடையாதா... என்றார் ஆவேசமாக.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Capital punishment was the only deterrent that prevent brutal rapes like the one which took place in a moving bus here two days ago, said agitated lawmakers in parliament today. BJP's Sushma Swaraj, the Leader of Opposition in the Lok Sabha, led the discussion on the gang-rape of a paramedical student battling for life in the Safdarjang Hospital and demanded death for rapists.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற