For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் காகித அட்டை ஆலை… தொழில் தொடங்க சிறப்பு சலுகை: ஜெ அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையை ஒட்டிய மொண்டிப்பட்டி கிராமத்தில் அடுக்கு காகித அட்டை தயாரிக்கும் ஆலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகை அளித்து முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

சட்டப் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வரும் அரசு, தொழில் முனைவோரை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்க உள்ள சிறப்புச் சலுகைத் தொகுப்பினை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்படும் வேளாண் சார் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு, அவற்றின் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் மொத்த மதிப்பில் 15 விழுக்காடு என்ற அளவில் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் இனி 25 விழுக்காடாக அதிகரித்து வழங்கப்படும். வழங்கப்படும் மானியத்தின் உச்ச வரம்பு 30 லட்சம் ரூபாய் என இருக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழிற் பேட்டைகளை அமைக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக சுமார் 2000 ஏக்கர் பரப்பிலான நில வங்கி படிப்படியாக உருவாக்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்களின் அருகில் அமையும் வாய்ப்பை பெற்று ஒருங்கிணைந்த பயன் பெறும் வகையில், பெரிய நிறுவனங்களுக்காக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்படும் தொழிற் பேட்டைகளில் உள்ள மொத்த நிலப் பரப்பில் குறைந்த பட்சம் 20 விழுக்காடு நிலம் ஒரே தொகுப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு உரிய நிலக் கிரய விலையில் வழங்கப்படும். இவ்வாறு பெறப்படும் நிலத்தை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேம்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும். இது மட்டுமல்லாமல், சிறு தொழில் முனைவோர் விரைவாக தொழில் துவங்கும் வகையில், 5,000 சதுர அடிக்கு மேற்பட்ட தொழிற் கூடங்களை ஒதுக்கீடு செய்ய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி, 50 சென்ட் வரையிலான தொழிற் கூடங்களை ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படும்.

நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழிற் கூடங்கள் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு மாசுகளை ஏற்படுத்துகின்றன. நகர்ப் புறத்தில் உள்ள இட நெருக்கடி காரணமாக தொழிற் கூடங்களை விரிவுபடுத்தவும் இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், தொழிற் கூடங்களை விரிவுபடுத்தும் நோக்கிலும், ஏற்கெனவே, நகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே அமைந்துள்ள தொழிற் கூடங்களை மாற்றி அமைத்து நகருக்கு வெளியே தொழிற் குழுமம் மற்றும் தொழிற் பேட்டைகளை உருவாக்க தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள் முன் வரும் பட்சத்தில், மின் இணைப்பு வழங்குதல், நீர் வழங்குதல், காட்சி, கருத்தரங்க கூடங்கள், விற்பனை வசதி மையங்கள் முதலிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொது வசதிகளை ஏற்படுத்த அரசு மானியம் 75 விழுக்காடு என்ற அளவில் அதிக பட்சமாக 15 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். இதே போல், தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள் புதிய தொழில் நிறுவனங்களுக்கென புதிய தொழிற் குழுமம் மற்றும் தொழிற்பேட்டை அமைக்க முன் வரும் பட்சத்தில் அரசு மானியம் 50 விழுக்காடு என்ற அளவில் அதிக பட்சமாக 10 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நடைமுறையில் உள்ள நில விலை நிர்ணய முறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த வகையில் சீரானதாகவும் நிலையானதாகவும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள "முழு விலை விற்பனை" மற்றும் "தவணை முறை விற்பனை" ஆகியவற்றை மாற்றி அமைத்து தொழில் வளர்ச்சிக்கு உகந்த லாப நோக்கமற்ற விலை நிர்ணயக் கொள்கை உருவாக்கப்படும். அரசு மற்றும் சிட்கோ தொழிற் பேட்டைகளில் தொழில் மனைகள் மற்றும் தொழிற் கூடங்களை 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்கிடவும், 30 ஆண்டு கால முடிவில் தொழில் முனைவோருக்கு முழு கிரய விலையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படும்.

புதிய தொழிற் பேட்டைகளை அமைப்பதில் தகுதியான தனியார் மற்றும் அரசு நிலங்களை தேர்வு செய்து பெறுவதிலிருந்து நில வரை படம் ஒப்புதல் பெற்று ஒதுக்கீடு செய்யும் வரை உள்ள பல்வேறு நிலைகளில், பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து தடையின்மைச் சான்று மற்றும் ஒப்புதல்களை பெற வேண்டியுள்ளதால் ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு, தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான ஒற்றைச் சாளர தீர்வுக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாக கொண்டு பல்வேறு இடங்களில் தொழிற் பேட்டைகளை உருவாக்குதல், மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தனது சொந்த நிதி மட்டுமல்லாமல் மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி வருகிறது. சிட்கோ நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை மேலும் பலப்படுத்தி சிறு தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிட்கோ நிறுவனத்திற்கு கூடுதலாக 16 கோடி ரூபாய் அரசின் பங்கு மூலதனமாக வழங்கப்படும்.

சென்னைப் பெருநகரை ஒட்டியுள்ள பகுதிகளில், நிலத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருவதாலும், தொழிற் பேட்டைகள் துவங்க போதுமான காலி இடங்கள் இல்லாததாலும், தற்போதுள்ள தொழிற் பேட்டைகளை விரிவுபடுத்த போதிய இடம் இல்லாததாலும், சிறு தொழில் முனைவோர், தொழிற் கூடங்களை அமைக்க உதவும் வகையில், அடுக்கு மாடி தொழில் வளாகங்களை அமைத்துத் தர அரசு முடிவு செய்துள்ளது. முதற் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் சிறு தொழில் முனைவோருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் குறுந்தொழில் கூடங்களை ஒதுக்கும் பொருட்டு 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ஒன்று சிட்கோ நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் தொலை நோக்குப் பார்வை 2023-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கினை எய்தும் வகையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலும், தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முனைவு மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை பல்வேறு தொழில் குழுமங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சுயதொழில் நடத்தி வரும் மகளிர் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மகளிர்க்கென சிறப்பு பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இந்தப் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்த நடப்பாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படும்.

கூட்டு முயற்சியினை ஊக்குவிக்கும் வகையில், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க முன் வந்தால், சிட்கோ நிறுவனம் அவற்றுடன் இணைந்து 10 விழுக்காடு வரை மூலதனத்தைச் செலுத்தி புதிய தொழிற் பேட்டைகளை உருவாக்கும்.

மேற்காணும் நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பயன் பெறவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் வழி வகுக்கும்.

இவ்வாறு ஜெயலலிதா வாசித்த அறிக்கையில் தெரிவித்தார்.

English summary
Chief Minister Jayalalitha has offered various special consessions to entrepreneurs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X