For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’பொன்னியின் செல்வி’ ஆட்சியில் அமர்ந்தார், குறுவை சாகுபடி பொய்த்தது: கருணாநிதி கிண்டல்

Google Oneindia Tamil News

Karunanithi
சென்னை: தி.மு.கழக ஆட்சியில் ஐந்தாண்டுகளும் குறுவைப் பயிரும், சம்பாப் பயிரும் பொய்த்ததில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டதா?

கேள்வி:- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்ததையெல்லாம் நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் பேரவையில் தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் "58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசுப் பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்" என்று சொன்னார்களே, ஆட்சிக்கு வந்து மூன்று நிதி நிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்து விட்டார்களே; முதியோர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுவிட்டதா? அதுமாத்திர மல்ல; முதலமைச்சர் 100க்கு மேற்பட்ட அறிக்கைகளை 110வது விதியின் கீழ் படித்ததைப் பற்றி, "செஞ்சுரி" அடித்து விட்டார் என்றெல்லாம் பேரவையிலே பாராட்டினார்களே, அந்த 100 அறிக்கைகளில் ஒன்றிலாவது இந்த முதியோர் இலவச பஸ் பாஸ் பற்றி அறிவித்தாரா? அதிலும் இல்லை என்பதுதான் பதில்.

வினாத்தாள் வெளியான விவரம்...

கேள்வி:- டி.என்.பி.எஸ்.சி. நடத்திய "குரூப் - 2" தேர்வில் வினாத்தாள் வெளியானது பற்றி நடந்த விசாரணை என்ன ஆயிற்று?

பதில்:- வினாத்தாள் வெளியானபோது டி.என்.பி.எஸ்.சி.யின் தலைவராக இருந்தவர், பதவிக் காலம் முடிவுற்று, இந்த ஆட்சியின் சாதனைகள் பற்றி தற்போது ஏடுகளில் கட்டுரைகள் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் வினாத்தாள் வெளியானது பற்றிய வழக்கு மட்டும் நீடித்துக் கொண்டிருக்கின்றது.

2012, ஆகஸ்ட் 12ஆம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த 3,631 பணி இடங்களுக்கு நடந்த குரூப் - 2 தேர்வில் 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். அப்போது ஈரோடு, தர்மபுரி, அரூர் போன்ற இடங்களில் வினாத்தாள் வெளியானது. அதன் காரணமாக தேர்வே ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற "குரூப் - 2" தேர்வில், 6,695 காலிப் பணி இடங்களுக்குத் தேர்வு நடந்ததாகவும், 4.60 லட்சம் பேர் தேர்வு எழுதிய தாகவும், அப்போது கடலூர் புரோக்கர்கள் மூலம் வெளியான வினாத்தாளை வாங்கி எழுதி தேர்வு பெற்றதாக ஒருவரை தற்போது கைது செய்திருக்கிறார்கள். இதுதான் நடைபெற்ற விசாரணையின் விவரம்.

இலவச வண்ணத்தொலைக்காட்சி என்னானது...

கேள்வி:- அ.தி.மு.க. அரசு, ஏற்கனவே இருந்த தி.மு.கழக ஆட்சியின்போது வழங்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டத்தை கிடப்பிலே போட்டு விட்டதா?

பதில்:- திட்டத்தை மட்டும் கிடப்பிலே அவர்கள் போடவில்லை. திராவிட முன்னேற்றக் கழக அரசு, ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்தது. அதற்காக சட்டப் பேரவையிலே உள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றையும் அமைத்து அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

2006 முதல் 2011 வரையிலான காலத்தில் "எல்காட்" நிறுவனத்திடமிருந்து 3,907 கோடி ரூபாயில், ஒரு கோடியே 65 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருவாய்த் துறை மூலமாக விநியோகிக்கப்பட்டன. 2011ஆம் ஆண்டு மார்ச் திங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்ட காரணத்தால், கொள்முதல் செய்யப்பட்ட 1.27 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படாமல் மிச்சப்பட்டன. அவைகள் பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அனாதை இல்லங்களுக்கு வழங்கப்போவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்து, அதற்கான அரசாணையையும் பிறப்பித்தது. ஆனால் 95,725 தொலைக்காட்சிப் பெட்டிகளை விநியோகிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவை அப்படியே இன்றளவும் முடங்கிக் கிடக்கின்றன என்றும், அதன் மதிப்பு 22.82 கோடி ரூபாய் என்றும் அண்மையில் பேரவையில் வைக்கப்பட்ட தணிக்கைத் துறை அறிக்கையிலே வெளி வந்துள்ளது.

'பொன்னியின் செல்வி' பட்டம்...

கேள்வி:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தி, "பொன்னியின் செல்வி" என்றெல்லாம் பட்டம் சூட்டி, டெல்டா மாவட்டங்களுக்கெல்லாம் காவேரி தண்ணீரே வந்ததைப் போல நிகழ்ச்சி நடத்திக் கொண்டார்களே, இந்த ஆண்டாவது குறுவைக்கு தண்ணீர் கிடைக்குமா?

பதில்:- தி.மு.கழக ஆட்சி நடைபெற்ற 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளும் குறுவைப் பயிரும், சம்பாப் பயிரும் பொய்த்ததில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களோ பிரதமருக்கு காவேரி வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென்று கடிதம் எழுதியதோடு தங்கள் பணி முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK leader Karunanithi said that In the last 2 years of ADMK regime the samba and kuruvai cultivation has been spoiled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X