வேற லெவல் கூட்டணி.. “எதிரெதிர் முனை.. ஆனா தமிழ்நாட்டுக்கு பிரச்சனைனா..” ஒரே குரலில் திமுக - அதிமுக!
சென்னை : திமுகவும் அதிமுகவும் எதிர் எதிர் துருவமாக நின்று மோதிக்கொண்டாலும், சில விஷயங்களில் ஒரே குரலை ஒலித்திருக்கின்றன. அந்தவகையில், திமுகவையும், அதிமுகவையும் மீண்டும் ஒரே குரலில் ஒலிக்க வைத்திருக்கிறது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு. தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியதற்கு, திமுக பொங்கி எழுந்த நிலையில், அதிமுகவும் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
அரசியல் களத்தில் திமுக - அதிமுக எதிரெதிராக நின்றாலும், திராவிடக் கட்சிகளாக, பங்காளிகள் என்கிற உணர்வில் உறுதியாக இருந்து வருகின்றன. அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சிகளே இரண்டும் என்பதால் பல நேரங்களில் ஒரே குரலை ஒலித்துள்ளன. இப்போதும் அதே குரல் ஒலித்திருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயர் குறித்து பேசிய விவகாரத்தில் திமுக கொதித்தெழுந்த நிலையில், தமிழ்நாடு என்பது வரலாறு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்
தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு கால அரசியலை வழிநடத்தி வரும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும். ஒன்று திமுக ஆட்சியில் இருக்கும், இல்லையென்றால் அதிமுக ஆட்சியில் இருக்கும். திமுகவில் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர் அதிமுகவை தலைமையேற்று நடத்தினாலும், அவரும் தலைவராக ஏற்றுக்கொண்டது பேரறிஞர் அண்ணாவைத்தான். எதிரெதிராக நின்று கள அரசியல் செய்தாலும், பல விஷயங்களில் இரண்டு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. மாநில சுயாட்சி கோஷங்களை இரு கட்சிகளுமே வலுவாக முன்வைத்து வந்திருக்கின்றன.

ஒரே வழியில்
திமுகவும் அதிமுகவும் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எதிர் எதிர் துருவ அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், இரண்டு கட்சிகளுமே திராவிடக் கட்சிகள் என்ற ஆதார நோக்கத்தை விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால், சமீபகாலமாக, அதாவது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த அதிமுக, பாஜகவின் முழு ஆதரவோடு இயங்கத் தொடங்கியது. இதனால், அதிமுக தங்கள் ஆதாரக் கொள்கையில் தளர்ந்து போய்விட்டதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. எனினும், தமிழ்நாடு, இந்தி திணிப்பு தொடர்பான விவகாரங்களில் அதிமுக தலைவர்கள் பாஜகவை எதிர்த்துப் பேசியே வருகின்றனர்.

ஆளுநர் கொளுத்திப்போட்ட வெடி
இந்நிலையில் தான், கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஒரே பாரதம் தான். அதில் நாம் எல்லோரும் அங்கம். இப்போது பாரதத்தைப் பற்றி பலரும் பேசுவது கிடையாது. தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

பொங்கி எழுந்த திமுக
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. திமுக பொருளாளர் டிஆர் பாலு, தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறார். அதனால்தான் 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு எரிகிறது. தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பாஜக தலைவராக செயல்பட வேண்டாம் எனக் கடுமையாகக் கண்டித்தார்.

திரண்ட கட்சிகள்
தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், "#தமிழ்நாடு வாழ்க!" எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். திமுகவினர் மட்டுமல்லாது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எனப் பலரும் ஆளுநரின் கருத்துக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். இதனால் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

அதிமுக கண்டனம்
அதிமுக மட்டும் சும்மா இருக்குமா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆளுநர் பேச்சுக்கு தனது கண்டத்தைத் தெரிவித்தார். "1963ல் நேரு பிரதமராக இருந்த போது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய அண்ணா கோரினார். பெயர் மாற்றம் மூலம் என்ன கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு அண்ணா, கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலமாகவும், நாடாளுமன்றம் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலமும் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்றார். தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பெயர். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது. நாங்கள் அண்ணாவின் வழி வந்தவர்கள். தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும்." என ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமமுக கண்டனம்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினார் என்றால், சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரத்திலேயே தமிழ்நாடு என்ற வார்த்தை இருக்கிறது. தமிழ்நாடு என்பதை தமிழகம் என நாம் சாதாரணமாகச் சொல்கிறோம். தமிழ்நாடு என்ற பெயரைக் கூட அவர் இப்படி பேசுவது, அவரது பதவிக்கு இது அழகாக இருக்கிறதா என்பது தெரியவில்லை.ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சர்ச்சை நாயகனாக உருவெடுத்து வருகிறார். ஆளுநர் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே அவர் பேசுவதை நிறுத்திவிடுவார்." எனத் தெரிவித்துள்ளார்.

ஒரே குரலில்
தேர்தல் அரசியலில் எதிரெதிர் முனைகளில் நின்றாலும், 'தமிழ்நாடு' என்ற விஷயத்தில் அண்ணாவின் குரலே ஓங்கி ஒலித்திருக்கின்றன ஆளுங்கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், பாஜகவுக்கு ஆதரவாகப் பேசி வரும் ஆளுநருக்கு எதிராக தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது அதிமுக. இதன் மூலம், தமிழ்நாடு உரிமை தொடர்பான விஷயத்தில் மற்றவர்கள் தலையிட்டால் நாங்கள் ஒன்றாக இணைந்து எதிர்ப்போம் என்பதையே உறுதிபடத் தெரிவித்திருக்கிறது அதிமுகவும், திமுகவும்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications