ஜெயலலிதா VS ஸ்டாலின்.. யார் ஆளுமை? பேஸ்புக்கில் விவாதம் - திடீரென வந்த திமுக எம்பி அப்துல்லா கமெண்ட்
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த அறிவுரையோடு ஜெயலலிதாவின் செயல்பாட்டை ஒப்பிட்டு விமர்சனம் செய்த நபருக்கு திமுக எம்.பி. முகநூலிலேயே பதிலளித்து இருக்கிறார்.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மேடையில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அனைவரும் சேர்ந்து திமுகவை வலிமைப்படுத்த வேண்டும். தனி மனிதரை விட கட்சி பெரிது. எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம். நாம் அடைந்த வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும்.

ஸ்டாலின் பேச்சு
மழை அதிகமாக பெய்தாலும், மழையே பெய்யாவிட்டாலும் என்னையே குறை சொல்வார்கள். பல முனைகளில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மத்தளத்தில் இரு பக்கமும் அடி என்பதைபோல் எனது நிலைமை இருக்கிறது. இந்த சூழலில் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் நான் யாரிடம் சொல்வது?" என்று பேசினார்.

பேஸ்புக் பதிவு
முதலமைச்சரின் இந்த பேச்சு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் பேஸ்புக்கில் அரவிந்த் கண்ணையன் என்ற நபர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை திறனை ஒப்பிட்டு ஒரு படத்தை பகிர்ந்து இருந்தார்.

ஜெயலலிதா ஸ்டாலின் ஒப்பீடு
"அதில் பொழுது விடியும்போது நாம் அமைச்சர் பதவியில் இருக்கிறோமோ இல்லையோ என்று அமைச்சர்களை கதறவிட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பொழுது எப்படி விடியுமோ? நம் அமைச்சர்கள் எதை பேசி என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்று இரவு தூக்கம் இல்லாமல் ஒரு பயத்துடன் எழுந்திருக்கும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

எம்.எம்.அப்துல்லா விளக்கம்
இப்பதிவுக்கு கீழே பலரும் கருத்திட்டு வரும் நிலையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லாவும் கருத்திட்டு வருகிறார். அதில், "இந்த கட்சி குடும்பம் போன்ற உணர்வை கொண்டது. நான் கூட சில தவறுகளை செய்யலாம். தனது மகன் தவறு செய்ததாகவே அவர் கருதுகிறார். செய்த தவறுகளை திருத்திக்கொள்ளுமாறு அவர் ஆலோசனை வழங்குவார். காரணம், ஒவ்வொரு உறுப்பினரும் குடும்ப உறுப்பினரை போன்றவராவார். எளிதில் அவர்களை தூக்கி வீசிவிட முடியாது. ஜெயலலிதாவுக்கு குடும்பம் கிடையாது. மேலும் தன்னுடைய கட்சியினரை குடும்பமாக அவர் பார்க்கவில்லை." என்று பதிலளித்துள்ளார்.

செல்போன்
இதற்கு மற்றொரு பதிவர், "குடும்பம் மீதான குறையை ஏன் பொது இடத்தில் பேச வேண்டும். தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டியதுதானே." என்று கேள்வி எழுப்ப, "அது பொதுமேடை அல்ல கட்சியின் பொதுக்குழு கூட்டம். மூடிய அரங்கில் நடந்தது. அதே உள்ளரங்கில் பேசும் போதும் 'இன்றைக்கு நாம் தனியா இருக்கும் இடம் என்று உலகில் ஒன்று கூட இல்லை. மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துவிட்டது' என்றும் முதலமைச்சரே பேசினார்." என்றார்.


Click it and Unblock the Notifications
