அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியா? இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்!
சென்னை: அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது என கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக சினிமா நிகழ்ச்சிகளை கடந்து பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் ஆர்வமுடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் செய்தியாளர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

ஆனந்த தீபாவளி
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி கொண்டாடிய இயக்குநர் கிருத்திகா உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அந்த நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு மத்தியில் செய்தியாளர் ஒருவர், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்வியை முன் வைத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், சிரித்துக்கொண்டே அதைப்பற்றியெல்லாம் யோசித்தது கூட கிடையாது என்றும் இப்படியெல்லாம் கேட்டால் தன்னிடம் பதில் இல்லை எனவும் கூறினார்.

பொது நிகழ்ச்சிகள்
வெறுமனே சினிமா நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதுமட்டுமல்லாமல் எதையும் மாற்றியோசிக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் குடும்பத் தலைவியாக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்தவர். இதனால் தான் நாளை அரசியல்வாதியாகவும் மாறக்கூடுமோ என்ற நோக்கில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் குடும்பம்
மாமனார் ஸ்டாலின் முதல்வர், கணவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் என மிகப்பெரும் அரசியல் பின்னணியை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் என்றுமே எளிமை விரும்பியாக இருந்து வருகிறார் கிருத்திகா. நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஆடம்பரமும் இல்லாமல் இயல்பாக தன் சினிமா பணிகளை அவர் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலினையே ஆரம்பத்தில் அரசியல் வேண்டாம் என்று சொன்னவர் பிறகு காலத்தின் தேவை கருதி கணவருக்கு கிரீன் சிக்னல் வழங்கினார்.

வெப் சீரிஸ்
கிருத்திகா உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை தற்போது வெப் சீரிஸ்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் இயக்கிய ஒன்றிரண்டு திரைப்படங்களும் அவருக்கு திரையுலகில் தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications