"கொரோனா பிளாட்.." தமிழ்நாட்டில் இப்போது லாக்டவுன் தேவையில்லை! டேட்டா நிபுணர் விஜயானந்த் ஹேப்பி தகவல்
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இரு தினங்கள் முன்பு கூறியது. அதில், சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் பெரிய அளவுக்கு எழுச்சி காணாத நிலையில், இப்படியான ஒரு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது நிறைய கேள்விகளை எழுப்பியது.
அடுத்த மாதம் முதல் உயர் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசித்து வரும் நிலையில், அது நடக்குமா, அல்லது மீண்டும் லாக்டவுனை நோக்கி தமிழகம் செல்லுமா என்ற பல சந்தேகங்களை இந்த எச்சரிக்கை ஏற்படுத்தியது.

கொரோனா டேட்டா நிபுணர்
எனவேதான், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை நீண்ட நாட்களாகவே உன்னிப்பாக கவனித்து பகுப்பாய்வு செய்து வரும் டேட்டா நிபுணர், விஜயானந்திடம் (Vijayanand) "ஒன்இந்தியா தமிழ்" சார்பில் பேசினோம். முதல் கேள்வியாக.. சென்னையில் கொரோனா ஏறுமுகத்தில் உள்ளதா என்பதை முன் வைத்தோம். அதற்கு பதில் அளித்த விஜயானந்த், "உண்மையை சொன்னால், "பிளாட்" என்ற நிலையில்தான் கேஸ்கள் உள்ளன. 180 அல்லது 200 அந்த அளவுக்குதான் சென்னையில் கேஸ் பதிவாகிறது. லேசான கேஸ் ஏற்றம் இருந்தது. ஆனால் இப்போது தட்டையாகத்தான் இருக்கிறது என்றார் அவர்.

கொரோனா பரவல் தட்டையாக உள்ளது
மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை குறித்து விஜயானந்த்திடம் கேட்டபோது, ஒரு வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை வைத்து அவ்வாறு கூறியிருப்பார்கள் என நினைக்கிறேன். 150 கேஸ்கள் 200 என்ற அளவுக்கு லேசாக கேஸ்கள் கூடிய மாவட்டங்களை பற்றி மட்டும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்திருக்கலாம். 10 நாட்களுக்கு முன்பைவிட இப்போது சற்று கேஸ்கள் அதிகரித்துள்ளன. ஆனாலும் இது, பெரிய அளவுக்கான அதிகரிப்பு இல்லை. 7 மாவட்டங்களிலுமே, பிளாட் என்ற நிலையில்தான் உள்ளது. சென்னையில் 0.7 என்ற அளவுக்குதான் டெஸ்ட் பாசிட்டிவ் ரேட் உள்ளது. அதாவது 100 பேருக்கு டெஸ்ட் எடுத்தால் ஒருவருக்கு கூட பாசிட்டிவ் ஆகவில்லை என்பதை இது குறிக்கிறது என்ற அவர், மேலும் தொடர்ந்தார்.

லாக்டவுன் தளர்வு காரணம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளனர். ஆனாலும் அங்கு பெரிய அளவுக்கு கேஸ் அதிகரிக்கவில்லை. இதை பெரிய ஏற்றம் என்று சொல்ல முடியாது. கேஸ்கள் ஏறுவதும் தொடர்ந்து நடைபெறவில்லை. லேசான ஏற்றத்திற்கு பிறகு அப்படியே, நின்று விடுகிறது. லாக்டவுனை முடித்து, 1 மாதம் ஆகியுள்ளது. எனவே மக்கள் நெருங்கி பழகுகிறார்கள். இதனால் லேசான கேஸ் ஏற்றம் இருந்தது. ஆனால் அது தொடர்ந்து அதிகரிக்கவில்லை என்பதுதான் மகிழ்ச்சியான தகவல்.

மீண்டும் லாக்டவுன் தேவையில்லை
தமிழகத்தில் மறுபடி லாக்டவுன் தேவைப்படும் என்று யோசிக்கும் அளவுக்கு நிலைமை இல்லை. அதற்கான அவசியம் இல்லை. அனைத்து மாவட்டங்களிலுமே 2.5 சதவீதத்திற்கு கீழேதான், டெஸ்ட் பாசிட்டிவ் ரேட் உள்ளது. டெஸ்ட் பாசிட்டிவ் ரேட் 5க்கு மேல் போனால்தான், லாக்டவுன் போன்ற நடவடிக்கை தேவைப்படும். சென்னையில் 0.7 சதவீதம் என்ற அளவுக்கு டெஸ்ட் பாசிட்டிவ் ரேட் இருப்பதை வைத்து பார்த்தால், நோய் பரவல், ரொம்பவே, கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழகத்தில் 57 சதவீதம் என்ற அளவுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்று சர்வே கூறுகிறது. லாக்டவுன் போட்டதால், கொரோனா பரவுவதற்கு பிரேக் போடப்பட்டுள்ளது. அதன் பலனைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

லாக்டவுனால் பலன்
இன்னும் 20 சதவீதம் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. இப்போது கொரோனா செயின் பிரேக் செய்யப்பட்டுள்ளது. அது பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது. நாம் இன்னும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை. எனவே நாம் முழுமையாக ஆபத்தை கடந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. கொங்கு மண்டலத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 50 சதவீதத்திற்கும் கீழ்தான் இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதேநேரம் சென்னையில் 80 சதவீதத்திற்கும் மேல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
Recommended Video

3வது அலை இப்போதைக்கு வராது
டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் அது தற்போது பிற உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிரது. நாம் ஏற்கனவே டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதால், 3வது அலை இப்போதைக்கு வர வாய்ப்பு இல்லை. அதேநேரம், சிறு அளவுக்கு ஸ்பீட் பிரேக்கர் மாதிரியான கேஸ் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நமது நாட்டில் 2020ம் ஆண்டு, ஜூலை மாதம், முதல் அலை வந்தது. பிறகு, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், லேசான ஏற்றங்கள் (Bump) ஏற்பட்டது. பொதுவாக ஒரு அலை வந்து சென்ற பிறகு 3 மாதங்களுக்குள் இப்படியான லேசான ஏற்றங்கள் ஏற்படுகின்றன. 2வது அலை இந்தியா முழுக்க முடிந்து விட்டது என்று சொல்ல முடியவில்லை. கேரளாவில் இன்னும் கூட கேஸ்கள் அதிகமாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தளவில் நாம் கட்டுப்படுத்தி விட்டோம் என்று உறுதியாக சொல்லலாம் என்றார் விஜய்ஆனந்த்.












Click it and Unblock the Notifications