”உண்மைகளை சொல்லட்டுமா” ஓபிஎஸ் பற்றி மீண்டும் பேசினால்.. ஜெயக்குமாருக்கு கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை!
சென்னை: ஓபிஎஸ் பற்றி தொடர்ந்து தரக் குறைவாக பேசினால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றி ஏராளமான உண்மைகளை வெளியே சொல்ல வேண்டி வரும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் உச்சத்தில் இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏ ஐயப்பன், திடீரென ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்தார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்லுவார்கள்.
ஓபிஎஸ், சசிகலா, தினகரனிடம் கோடிக்கோடியாக பணம் குவிந்துள்ளது. அந்த பணம் மூலம் அதிமுக நிர்வாகிகளை பிடிக்கும் வேலையை செய்ய தொடங்கியுள்ளனர். உத்தமனை போல் பேசுவதற்கு ஓபிஎஸ் போல் ஒரு நடிகர் இருக்க முடியாது. அவர் நடிக்க வந்தால் ஆஸ்கர் விருதை கூட பெறுவார். ஒருவேளை சினிமா பக்கம் சென்றிருந்தால் நடிகர் ரஜினி, சிவாஜியையே தோற்கடித்திருப்பார் என்று விமர்சித்திருந்தார்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் தரக்குறைவான தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். இதனை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர் பாரம்பரிய அதிமுக தொண்டன் போல் பேசி வருகிறார். ஆனால் இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்தவர்.

ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு
மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்தபோது, அந்த நிவாரணத் தொகையில் 25 சதவிகிதத்தை மீனவர்களுக்கு கொடுத்துவிட்டு, 75 சதவிகிதத்தை ஜெயக்குமார் எடுத்துக்கொண்டார். அதிக மின்திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என மீனவர்கள் மறியல் செய்த போது, அவர்களை தரக் குறைவாக பேசியவர். அதன் வெளிப்பாடு தான் ஜெயக்குமார் தேர்தலில் தோல்வியடைந்தது.

ஓபிஎஸ் தான் காரணம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டம் படித்தது எப்படி என்பது போன்ற பல விஷயங்கள் மர்மமாக உள்ளன. அவர் தொடர்ந்து ஓபிஎஸ் பற்றி பேசி வந்தால் பல உண்மைகள் வெளிவரும். எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டு ஆட்சி செய்ததற்கு, முழுக்க முழுக்க ஓபிஎஸ் மட்டுமே காரணம்.

தொண்டர்கள் எங்கள் பக்கம்
11 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்றால் எப்போதோ ஆட்சி கவிழ்ந்திருக்கும். நீதிமன்றத்தில் மீண்டும் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். அப்போது தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications