"வேற லெவல்".. இனி ஒரே ஒரு 'கால்' போதும்.. வீட்டுக்கே வந்து பார்சலை எடுத்து விடுவார் போஸ்ட் மேன்!
சென்னை: இனி யாருக்காவது பார்சலை அனுப்ப வேண்டும் என்றால் அதை சுமந்துகொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ, தபால் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒரே ஒரு போன் செய்தால், தபால்காரரே வீட்டிற்கு வந்து பார்சலை எடுத்துச் சென்று உரிய நபரிடம் ஒப்படைத்துவிடும் புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையும், ரயில்வே துறையும் இணைந்து செய்யும் இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

நவீனமாகும் தபால்துறை
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தபால்துறையின் பயன்பாடு வெகுவாக குறைந்து வந்தது. பெரிய அளவில் கடிதப் போக்குவரத்தும் இல்லாததால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு தபால்துறையே அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டது. ஆனால், காலமாற்றத்தை உணர்ந்து தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்ட தபால்துறை இன்று நவீனமயமாகி வருகிறது. கூரியர் சேவை, வங்கி சேவை, மின்கட்டணம் செலுத்தும் சேவை, அசத்தலான சேமிப்புத் திட்டங்கள் என மக்களை தபால் துறை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும், பல புதிய புதிய சேவைகளையும் தபால்துறை அறிமுகப்படுத்தி வருகிறது.

புதிய பார்சல் திட்டம்
அந்த வகையில், தற்போது வீட்டிற்கே வந்து பார்சலை எடுத்துச் சென்று உரியவரிடம் கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பார்சலை அனுப்பும் கூரியர் சேவையை தபால்துறை செய்து வரும் நிலையில், தற்போது இந்த புதிய பார்சல் சேவையையும் அத்துறை கையில் எடுத்துள்ளது. ரயில்வேவும், தபால்துறையும் இணைந்து இந்த புதிய பார்சல் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

வீட்டுக்கே வந்து கொண்டு செல்வர்
அதிக எடைக்கொண்ட பார்சல்களை எங்கேனும் அனுப்ப வேண்டும் என்றால் கூட அதை தூக்கிக் கொண்டு கூரியர் அலுவலகத்திற்கோ அல்லது தபால் அலுவலகத்திற்கு தான் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக ஒரு ஆட்டோ அல்லது வேறு ஏதேனும் வாடகைக்கு நாம் எடுத்தே தீர வேண்டும். இதனால் அலைச்சலுடன் சேர்ந்து செலவும் அதிகமாகிறது. மக்களின் இந்த கஷ்டத்தை புரிந்துகொண்ட தபால் துறை, தற்போது வீட்டிற்கே வந்து 35 கிலோவுக்கும் அதிகமாக எடைக்கொண்ட பார்சல்களை கொண்டு செல்லும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு 'போன்' போதும்..
அதன்படி, பார்சல்களை வீட்டிற்கு வந்து எடுக்கும் தபால் ஊழியர்கள், அதை ரயில் மூலம் எடுத்துச் சென்று குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். பின்னர், அந்த ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர் தபால் ஊழியர்கள் அந்த பார்சலை பெற்றுக்கொண்ட உரிய முகவரிக்கு கொண்டு சென்று அதை சேர்த்துவிடுவார்கள். இந்த சேவையை பெற விரும்புவோர், உதவி இயக்குநர் (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம் அல்லது 044 - 2859 4761, 2859 4762 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும் [email protected] என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications