2028-ல் சட்டசபைக்குள் நுழைய சசிகலா வியூகம்.. உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளில் 'சம்பவம்' ரெடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா திமுகவில் கலகக் குரல்கள் எழுந்து அடங்கிக் கொண்டிருக்கின்றன; இன்னொரு பக்கம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் குரல் கொடுக்கின்றனர்; தேர்தல் ஆணையமோ அதிமுகவின் இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க இருக்கிறது.. இத்தனை களேபரங்களுக்கு நடுவே வரும் 24-ந் தேதி உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளை ஆதரவாளர்களை வரவழைத்து பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார் சசிகலா.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஒவ்வொரு நகர்வாக முதல்வர் பதவியை நோக்கி நகர்ந்தார். ஆனால் சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தார்.

sasikala aiadmk tamilnadu

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு விடிய விடிய வரவேற்பு கொடுத்து அவரது ஆதரவாளர்கள் அசத்தினர். சசிகலா விடுதலைக்குப் பின்னர் அதிமுகவில் பிரளயமே வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவுமே நடக்காமல் புஸ் வானமாகிப் போனதுதான் மிச்சமானது.

ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் அதிமுக ஒன்றாக இணையும்; நிச்சயம் அதிமுக ஆட்சி அமையும் என்றெல்லாம் சசிகலா கூறினாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது அதிமுகவில் மீண்டும் செங்கோட்டையன் மூலம் கலகக் குரல் வெடித்து அடங்கி இருக்கிறது. இன்னொரு பக்கம், அதிமுகவின் இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருக்கிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே, வரும் 24-ந் தேதி உசிலம்பட்டியில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சசிகலா தரப்பு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்தும் சசிகலாவை இன்னமும் நம்பும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் உசிலம்பட்டிக்கு வர வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளதாம்.

sasikala aiadmk tamilnadu

இது தொடர்பாக சசிகலா ஆதரவு வட்டாரங்களில் நாம் விசாரித்த போது,
2026-ம் ஆண்டு தேர்தலில் 'ஒருங்கிணைந்த அதிமுகவை' ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காகவே சசிகலா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்; திரைமறைவில் அனைத்து காய்களையும் நகர்த்தியும் வருகிறார். சசிகலாவைப் பொறுத்தவரையில் தேர்தலுக்கு முன்னர் அதிமுக ஒன்றிணையும் என்கிற நம்பிக்கையில் உறுதியாகவும் இருக்கிறார்.

அத்துடன் 2028-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழையவும் திட்டமிட்டிருக்கிறார் சசிகலா. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் 2027-ம் ஆண்டு வரை சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாது. 2028-க்குப் பின்னர் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியும்.

இதற்கான அடிப்படை செயல் திட்டங்களைத்தான் ஜெயலலிதா பிறந்த நாளில் இருந்து தொடங்குகிறார் சசிகலா. உசிலம்பட்டி தொகுதியை குறிவைத்துதான் சசிகலாவின் நடவடிக்கைகள் இருக்கும். 2026 தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் 2028-ல் சசிகலாவுக்காக விட்டுக் கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகும். உசிலம்பட்டி தொகுதியில் 2028-ல் சசிகலா போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைவார் என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர்.

உசிலம்பட்டி தொகுதி நிலவரம் என்ன?

1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு சென்னை மாகாணமாக இருந்த போது சுயேட்சையாகவும் பார்வார்டு பிளாக் வேட்பாளராகவும் போட்டியிட்ட பிகே மூக்கையா தேவர் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். 1971, 1977 தேர்தல்களிலும் மூக்கையா தேவரே வென்றார். மொத்தம் 5 முறை இந்த தொகுதியில் மூக்கையா தேவர் வெற்றி பெற்றார்.

1980-ல் எஸ். ஆண்டி தேவர், பார்வார்டு பிளாக் வேட்பாளராகவும்1984-ல் பிகேஎம் முத்துராமலிங்கம் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வென்றனர்.

1989-ல் பி.என். வல்லரசு, திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். உசிலம்பட்டி தொகுதியில் திமுக வென்றது ஒரே ஒருமுறைதான். இதன் பின்னர் அதிமுக, பார்வார்டு பிளாக் ஆகியவை மாறி மாறி வென்றுள்ளன.

1991ல் அதிமுக பாண்டியம்மாள், 1996-ல் பார்வார்டு பிளாக் பிஎன் வல்லரசு,
2001-ல் பார்வார்டு பிளாக் எல். சந்தானம், 2006-ல் அதிமுக மகேந்திரன், 2011-ல் அகில இந்திய பார்வார்டு பிளாக் பிவி கதிரவன், 2016-ல் அதிமுக பி. நீதிபதி,
2021-ல் அதிமுக பி.ஐயப்பன் இந்த தொகுதியில் வென்றனர்.

தேவர் ஜாதி வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதி உசிலம்பட்டி. இதனால் இந்த தொகுதியில் போட்டியிட்டு எளிதாக வெல்ல முடியும் என்பது சசிகலாவின் கணக்கு. இந்த கணக்கின் அடிப்படையில்தான் சசிகலா, உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளில் இருந்து தனது 'தேர்தல்' வியூகத்தை தொடங்க இருக்கிறார் என்கின்றன அவரது ஆதரவு வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+