குழந்தைகள் குடிக்கும் பாலில் யூரியா! மனிதத்தன்மையற்ற செயல் இது! பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்!
சென்னை : தமிழகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தனியார் பால் நிறுவனத்தின் பாலில் கலப்படம் செய்வது மனிதத்தன்மையற்ற செயல் என தமிழக பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தனியார் பால் நிறுவனத்தின் டேங்கர் லாரியை தமிழக கேரளா எல்லையில் தடுத்து நிறுத்தி பாலக்காடு மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த டேங்கர் லாரியில் இருந்த சுமார் 12750லிட்டர் பாலில் கொழுப்பு சத்தை அதிகரித்து காட்டுவதற்காக யூரியா கலப்படம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

பாலில் கலப்படம்
மற்றொரு புறம் ஆரணியில் இருந்து சென்னை ஆவின் பால் பண்ணைக்கு அனுப்பப்பட்டு வந்த பாலில் நீண்டகாலமாகவே தண்ணீர் கலப்படம் செய்து முறைகேடுகள் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம், காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் 11பேர் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கூடுதல் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ரசாயனங்கள்
ஏனெனில் இந்தியா முழுவதும் பாலின் தரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுநல வழக்கில் மத்திய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பாதுகாப்பான, தரமான பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது. அதே சமயம் உயிருக்கு தீங்கிழைக்கும் வகையிலான ரசாயனங்கள் வடமாநிலங்களில் தான் அதிகளவில் கலப்படம் செய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

கடும் கண்டனம்
குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் ஆவினோ, தனியார் நிறுவனங்களோ தண்ணீரையோ அல்லது உயிருக்கு தீங்கிழைக்கும் வகையிலான ரசாயனங்களையோ கலப்படம் செய்வதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. பணத்தாசை கொண்டு செயல்பட்ட மனிதத்தன்மையற்ற இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒடுக்க வேண்டும்
இது போன்ற தவறுகளை செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் பாலில் நடைபெறும் கலப்படங்களை தடுக்க உணவுப் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறையை உள்ளடக்கிய அதிரடிப்படை குழுவை அமைத்து தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் நிலையங்கள், பால் உற்பத்தி நிலையங்களை தீவிரமாக கண்காணித்து அங்கே அடிக்கடி அதிரடி சோதனைகளை நடத்தி தரமான பால் மக்களுக்கு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நீண்டகாலமாகவே வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications