அடேயப்பா.. தமிழக மக்களை கவர பக்காவா பிளான் போடும் பாஜக.. அடுத்த அதிரடி நம்மாழ்வாரை வச்சு!
சென்னை : தமிழக மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பாஜக, தமிழர்கள் கொண்டாடுபவர்களை கொண்டாடி, அதன் மூலம் வரவேற்பைப் பெறலாம் எனத் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி பதவி வழங்கிய நிலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு 'பாரத ரத்னா' வழங்கவேண்டும் என்று தமிழக பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திராவிடக் கட்சிகள் தவறவிடும் இடங்களை கச்சிதமாக பிடித்து தங்கள் கட்சிக்கு வலு சேர்க்க முழு முயற்சியில் ஈடுபடும் பாஜகவின் இந்த முயற்சிக்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாஜக திட்டம்
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது தமிழக பாஜக. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு நாள்தோறும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என பாஜகவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். பாஜகவை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர்.

இளையராஜா
அதுதான், தமிழக மக்களின் மதிப்புக்குரியவர்களை, கொண்டாடி அதன் மூலம் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெறும் திட்டம். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே, பெருவாரியான தமிழ் மக்கள் கொண்டாடும் இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி பதவி கொடுத்து கௌரவித்தது பாஜக. இதன் மூலம் இளையராஜாவை கொண்டாடும் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்கலாம் எனக் கணக்கு போட்டது.

பல்வேறு தலைவர்களையும்
அதேபோல, பண்டைய மன்னர்கள், சமூகத் தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது பிறந்தநாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது பாஜக. சமீபத்தில் கூட இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளுக்கு பெரிய அளவில் கூட்டம் ஒன்றையும் பாஜக சார்பில் நடத்தினர். இது உதாரணம் தான். இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவே செய்து வருகின்றனர்.

அடுத்த பிளான்
அந்த வகையில் தான், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளது தமிழக பாஜக. இதன் மூலம், தமிழகத்தில் இயற்கை வேளாண்மை மீது ஆர்வமுள்ளவர்களையும், நம்மாழ்வாரை பின்பற்றுபவர்களின் கவனத்தையும் பாஜகவை நோக்கி திருப்பலாம் என திட்டமிட்டுள்ளனர்.

பாஜக சிறப்பு தீர்மானம்
வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்மொழிய நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழிமொழிந்துள்ளார்.

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா
பாஜக கொண்டு வந்துள்ள சிறப்பு தீர்மானத்தில், உழவுத் தொழிலே சிறந்தது என்று கூறியவர் வள்ளுவர். அத்தகைய சிறப்பு மிக்க உழவுத்தொழில், அதன் மேன்மையை இழப்பது கண்டு பொங்கி எழுந்து நம் மண்ணைக் காத்தவர் நம்மாழ்வார். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். இந்தியா முழுக்க இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர். தனி மனிதராக, இயற்கை விவசாயத்திற்காக போராடிய இரும்பு மனிதர். தன்னலம் இன்றி தனி ஒரு மனிதராக இயற்கையை மீட்கப் போராடியதற்காகவும் தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம்மாழ்வாருக்கு பாரதத்தின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications