டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நபிகள் நாயகம் விவகாரம்- பற்றி எரியும் 9 மாநிலங்கள்-மவுனம் காக்கும் மோடி, அமித்ஷா:சீமான் கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்காக பாஜகவில் நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்ட நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும்; இந்த விவகாரத்துக்காக பாஜக தேசிய தலைமை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகிகளான நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரைக் கைதுசெய்யக்கோரி நாடெங்கிலும் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருவர் உயிரிழந்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 9 மாநிலங்களில் போராட்டம் பற்றியெரிகிறபோது நாட்டை ஆளக்கூடிய பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கள்ளமௌனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உபியில் தொடரும் பதற்றம்.. 255 முஸ்லிம்கள் கைது -நபிகள் நாயகம் அவதூறை கண்டித்து போராடியதால் நடவடிக்கைஉபியில் தொடரும் பதற்றம்.. 255 முஸ்லிம்கள் கைது -நபிகள் நாயகம் அவதூறை கண்டித்து போராடியதால் நடவடிக்கை

பன்மைத்துவம் எனும் பரந்துபட்டக் கோட்பாட்டுக்குப் பெயர்போன நாட்டில் இசுலாமிய மக்களுக்கெதிராக நடத்தப்படும் அவதூறுப்பரப்புரைகளும், மதவெறிச்செயல்பாடுகள், கோர வன்முறைகளும், அரசின் இனஒதுக்கல் கொள்கைகளும் இந்தியப்பெருநாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களது இறைத்தூதரெனப் போற்றிக்கொண்டாடி வரும் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளைக் கைதுசெய்யக்கோரி, ஒட்டுமொத்த இசுலாமியச்சமூகமும் ஒற்றைப்பெருங்குரலெடுத்துப் போராடி வருகிறது.

பயங்கரவாத உச்சம்

பயங்கரவாத உச்சம்

அவற்றிற்குச் செவிசாய்க்காது அவர்கள் மீது அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிடுவது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். அரபு நாடுகளும், இசுலாமிய நாடுகளும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து வரும் நிலையில், அந்நாடுகளில் வாழும் இந்திய நாட்டுக்குடிகளது இருப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வரும் பேராபத்து குறித்து துளியும் சிந்தித்திடாது இசுலாமிய மக்கள் மீது எதேச்சதிகாரப்போக்கை ஏவிவிடும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது.

அற்பத்தனம், இழிசெயல்

அற்பத்தனம், இழிசெயல்

இந்தியா என்கிற நாடு பிறப்பதற்கே முன்பிருந்தே, இந்நிலத்தில் நீடித்து நிலைத்து வாழ்ந்து வரும் இம்மண்ணின் பூர்வக்குடி மக்களை, அவர்கள் தழுவி நிற்கிற, 'இசுலாம்' எனும் மார்க்கத்தை வைத்தே அந்நியர்கள் போல சித்தரித்து வெறுத்து ஒதுக்குவதும், அவர்களுக்கெதிராக மதவெறியைத் தூண்டி நாடெங்கிலும் கலவரம் செய்வதும்தான் பிரதமர் மோடி உருவாக்க நினைத்த புதிய இந்தியாவா? சொந்த நாட்டுக்குடிகளை மதத்தால் துண்டாடி, வாக்குவேட்டைக்காக நாட்டைக் கூறுபோடுவதுதான் உங்களது தேசப்பக்தியா? இந்தியா என்கிற நாடு வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்நாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாத ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகள், அளப்பெரிய பங்களிப்பைச் செய்து நாட்டுக்காக ஈகம்செய்த இசுலாம் சமூகத்தைத் தேசவிரோதிக்கூட்டமென முத்திரைக் குத்துவது மோசடித்தனமில்லையா? கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் பெரும் மத நம்பிக்கைக்கூடமாக இருந்த பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தபோதும், நீதிமன்றமே அவ்வழக்கில் அநீதி இழைத்தபோதும் நாட்டையே நம்பி நிற்கிற இசுலாமிய மக்களை, பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டை விற்று, இலாபமீட்டத் துடிக்கும் பாஜக பழிசுமத்தி குறைகூறுவது இழிசெயல் இல்லையா? 8 ஆண்டுகால ஆட்சியில் சாதனையென்று சொல்ல எதுவுமின்றி, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கக்கூடத் துணிவின்றி, இசுலாமிய வெறுப்பை மட்டுமே மக்கள் மத்தியில் விதைத்து, உள்நாட்டுக்கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியதிகாரத்தைச் சுவைக்கத் துடிப்பது பாஜக அரசு செய்திடும் அற்பத்தனமில்லையா?

சந்தி சிரிப்புதான் சாதனையா?

சந்தி சிரிப்புதான் சாதனையா?

ஒன்றியத்தை ஆளும் ஆட்சியாளர் பெருமக்களே! உளச்சான்று என ஒன்று உங்களிடமிருக்கிறதா? பாபர் மசூதியை இடித்தீர்கள்! அப்பாவி அப்சல் குருவைத் தூக்கிலிட்டீர்கள்! முத்தலாக்கைக் கொண்டு வந்து மதவுரிமையில் தலையிட்டீர்கள்! நாடெங்கிலுமுள்ள மசூதிகளைக் குறிவைத்தீர்கள்! பாங்கு ஓதுவதையும் காற்று மாசுபாடெனக் கூறி, குற்றம் கூறினீர்கள்! உணவுரிமையில் தலையிட்டு, மாட்டிறைச்சி உண்ணவும் கெடுபிடி செய்தீர்கள்! இசுலாமியப்பெண்கள், ஹிஜாப் அணிவதற்கெதிராகக் கலவரம் செய்தீர்கள்! காஷ்மீரில் மாநிலத்தன்னுரிமையைப் பறித்து, மண்ணின் மக்களை அகதிகளாக்கினீர்கள்! குஜராத்தில் மூவாயிரம் இசுலாமியர்களைப் படுகொலைசெய்தீர்கள்! ஹஜ் மானியத்தை ரத்துசெய்தீர்கள்! தேசிய முகாமைச் சட்டத்தைக் கொண்டு வந்து, இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளெனக் கட்டமைத்து, கைதுசெய்தீர்கள்! கல்லெறிந்தார்கள் எனக்கூறி கையில்லா இசுலாமியர்களின் வீட்டையும் இடித்துத் தகர்த்தீர்கள்! குடியுரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்து அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்கினீர்கள்! இவ்வாறாக, எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு, எங்கள் உடன்பிறந்தார்களான இசுலாமியச்சொந்தங்களை பிரிவினைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் பழிசுமத்துகிறீர்கள்! வெட்கமாக இல்லையா? இசுலாமிய நாடுகளோடு நட்புறவு வேண்டும்; அந்நாட்டுப்பொருட்களும், பொருளாதாரமும் வேண்டும். இசுலாமிய மக்களின் வரி வேண்டும்; அவர்கள் செலுத்தும் வாக்கும் வேண்டும். ஆனால், அவர்களது உரிமையும், உணர்வும், வாழ்வும் வேண்டாமா? இது நாடா? இல்லை! சுடுகாடா? 70 ஆண்டுகால விடுதலை வரலாற்றில் பன்னாட்டுச்சமூகத்தின் முன்னே உலகரங்கில் இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாகக் காட்டி, சந்தி சிரிக்க வைத்ததைத் தவிர, நீங்கள் சாதித்தது என்ன நியாயமாரே?

Recommended Video

    அமித் ஷாவுக்கு என்ன கவலை? இந்து ஒட்டுதான் முக்கியம்.. ஒற்றுமை தேவை இல்லை - திருமா..!
    கைது செய்க- மன்னிப்பு கேளுங்க

    கைது செய்க- மன்னிப்பு கேளுங்க

    பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களைக் கொச்சைப்படுத்தி, இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளை நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும், இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த பாஜகவின் தேசியத்தலைமையானது வெளிப்படையாக மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    English summary
    Naam Tamilar Seeman has Condemned PM Modi, Amit Shah's silence on Violences in the Prophet Row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X