பிரம்மதேசம் பிருஹத்நாயகி உடனாய கைலாச நாதர் திருக்கல்யாணம் - பக்தர்கள் தரிசனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் கைலாசநாதர் ஸ்ரீபிரஹந்நாயகி ஆலயத்தில் ஐப்பசி உத்திர திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரம்ம தேசத்தில் ஸ்ரீபிரஹந்நாயகி ஆம்பாளுடன் ஸ்ரீகைலாசநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை உடையது இத்திருக்கோயில்.

ஏழு நிலைகளுடன் திகழும் கம்பீரமான வானுயர்ந்த ராஜகோபுரத்துடன் காண்போரின் மனதில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் கலைநயமிக்கதாக இக்கோவில் அமைந்துள்ளது.

சுயம்பு மூர்த்தி

சுயம்பு மூர்த்தி

சிவசைல மலையில் வாழ்ந்துவந்த அத்ரி முனிவரிடம் தான் பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் சிவசைலம் ஆகிய திருத்தலங்களில் சுயம்புவாக அருள்பாலிப்பதாக சிவபெருமான் கூறினார் என பிரமாண்டப் புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.

தோஷ நிவர்த்தி தலம்

தோஷ நிவர்த்தி தலம்

இத்திருக்கோயிலின் ஆதிமூல லிங்கம் எனக்கூறப்படும் ஸ்ரீபதரிவனேஸ்வரர் என்ற சுயம்புலிங்கம் இலந்தை மரத்தடியில் உள்ள மிகப் பழமையானது. பிரம்மாவின் பேரன் ரோமஸ மஹரிஷியால் பூஜிக்கப்பட்ட இந்த இலந்தையடி நாதரையும் இலந்தை மரத்தையும் பிரதட்சணம் செய்வதால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு

பிரம்மதேசத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ கைலாச நாதரை சூரிய பகவான் உத்தராயணம், தக்ஷிணாயனம் ஆகிய இரண்டு காலங்களிலும் கருவறை வரையில் வழிபடும் ஆனந்தக் காட்சியை அனுதினமும் காணலாம்.

சூரியன் தலம்

சூரியன் தலம்

பிரம்மதேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஸ்ரீ கைலாச நாதரை வலம் வருவதால் காசிக்குச் சென்று சிவதரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தென்மாவட்ட நவக்கிரஹ ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இத்திருக்கோயில்.

சிவபெருமான் சிலை

சிவபெருமான் சிலை

பிட்சாடனர் சபை மண்டபத்தில் சிவபெருமான் கங்காளநாதராக சகல தேவதைகளுடன் அருள்பாலிக்கிறார். சுமார் 7 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலைக்குப் பாதத்தின் பிடியைத் தவிர எந்தப் பிடிமானமும் இல்லாதிருப்பது வியக்க வைக்கிறது. புவியீர்ப்பு மையம் செயல்படும் போக்கைக் கணித்துப் பிடிமானமில்லாமல் சிலை அமைத்திருக்கின்றனர் அந்தக் கால அற்புதச் சிற்பிகள்.

கல்வி சிறக்கும்

கல்வி சிறக்கும்

கால்மாற்றி, தனக்குத்தானே உபதேசம் செய்து அருளும் ஸ்ரீஆத்ம வியாக்கிய தக்ஷிணாமூர்த்தி சப்த கன்னிகள் அருகில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றுக் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பிரம்மதேசம். இதை சதுர்வேதிமங்கலம் என்றும் சொல்வர். இந்த ஆண்டு ஐப்பசி உத்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூப்பல்லக்கில் எழுந்தருளிய அம்மை, அப்பனை ஏராளமானோர் மெய்சிலிர்க்க வழிபட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirukalyanam of Lord Kailashanathar with Goddess BiruhathNayagi and the Poopallaku at Brahamadesham near Tirunelvely.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற