“திமுக அமைச்சர்கள் பீதியில இருக்காங்க.. ராமதாஸே மிரண்டுட்டாரே..” - வேலூர் இப்ராஹிம் பரபர பேட்டி!
திண்டுக்கல் : ஊழல் பட்டியலில் யார் பெயர் வரப்போகிறதோ என தி.மு.க அமைச்சர்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் இருவரின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனச் சொன்னதால் தி.மு.க அமைச்சர்கள் மிரண்டு போய்க் கிடப்பதாக பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை எச்சரிக்கை
தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட 100 கோடி மற்றும் 120 கோடி ரூபாய் ஊழல் குறித்து, அடுத்த ஒரு வாரத்தில் ஆதாரத்தை வெளியிட உள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்தார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் குறித்த பட்டியலை வரும் 5ஆம் தேதி மதுரையில் வெளியிட உள்ளோம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த எச்சரிக்கை அரசியல் அரங்கை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

வேலூர் இப்ராஹிம்
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் பேசிய பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், "மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க அரசு மோசடி ஆட்சி நடத்துகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாவட்ட வாரியாக போராட்டங்களையும், திருச்சியில் பேரணியையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.

திமுக செய்யவில்லை
மேலும் பேசிய அவர், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது 16 சதவீதம் மட்டுமே இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இரண்டு கட்டமாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் 9 கோடி மக்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க அரசு சொன்னபடி காஸ் சிலிண்டருக்கு ரூ.100 கூட குறைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

மன்னராட்சி திமுக
தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க அரசை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் குற்றவாளிகள் பெருகி வருகின்றனர். கூலிப்படைகள், கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பதற்காகவே கடந்த காலங்களைப் போல் தி.மு.க ஆட்சி கலைக்கப்படலாம். மக்களாட்சியில் இருந்து மீண்டும் மன்னராட்சியாக தி.மு.கவினரின் குடும்ப ஆட்சி நடக்கிறது எனச் சாடியுள்ளார்.

அமைச்சர்கள் பீதி
மேலும், தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. பா.ஜ.க வெளியிட உள்ள ஊழல் பட்டியலில் யார் பெயர் வரப்போகிறதோ என தி.மு.க அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர். இளைஞர்கள் எல்லாம் பா.ஜ.கவிற்கு சென்று விடுவார்களோ என தி.மு.க.வினர் மட்டுமின்றி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூட பயப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார் வேலூர் இப்ராஹிம்.












Click it and Unblock the Notifications