ஒவைசி கொடுத்த ஐடியா.. உடனே செய்யும் சந்திரசேகர் ராவ் - மத்திய அரசுக்கு போட்டியாக அதேநாளில் நிகழ்ச்சி
ஐதராபாத்: செப்டம்பர் 16 முதல் 18 ஆம் தேதி வரை தெலுங்கானா தேசிய ஒருமைப்பாடு தினத்தை கொண்டாட இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்து இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே கடுமையாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவரது மகன் கே.டி.ராமாராவ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானா வரும் சமயங்களில் மரபுபடி அவரை வரவேற்க செல்லாமல் தவிர்த்து வருகிறார் சந்திரசேகர் ராவ். அதற்கு ஏற்றார்போல் பாஜகவினரும் டிஆர்எஸ் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டமும் சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடைபெற்றது.
கரையும் காங்.! ஒரே ஆப்ஷன் பாஜக தான்.. தென் மாநிலங்களுக்கு பாஜகவின் சூப்பர் திட்டம்! அமித் ஷா சூசகம்

இடைத்தேர்தல்
அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக ஆட்சியை பிடிப்பதற்கான வேலைகளை செய்யும் என்று கூறி ஆபரேசன் சவுத் திட்டத்தை அறிவித்து சென்றார். இந்த நிலையில் விரைவில் ஐதராபாத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஐதராபாத் வரும் பாஜக தலைவர்கள்
இதனை குறிவைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. கடந்த மாதம் உள்துறை அமைச்சர் ஐதராபாத் வந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினார். அடுத்த சில நாட்களில் பாஜக தேசிய செயலாளர் ஜே.பி.நட்டா ஐதராபாத் வந்து நடிகர் நிதின், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரை சந்தித்து சென்றார்.

நிர்மலா சீதாராமன்
கடந்த 2 நாட்களுக்கு முன் தெலுங்கானா வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள ஒரு மாவட்டத்தில் ரேசன் கடைக்கு ஆய்வுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாததை கண்டு மாவட்ட ஆட்சியரை அழைத்து சாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஆர்எஸ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஒட்டி விலையையும் போட்டு பதிலடி கொடுத்தது டி.ஆர்.எஸ். இது நேற்று முழுவதும் விவாதப்பொருளாக மாறியது. இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.

மத்திய அரசு நிகழ்ச்சி
மத்திய அரசு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதியை ஐதாராபாத் விடுதலை தினமாக கொண்டாட இருப்பதாக அறிவித்தது. இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆண்டு முழுவதும் இதை கொண்டாட இருப்பதாகவும், இதன் தொடக்க விழாவில் அமித்ஷா கலந்துகொள்வார் எனவும், இதில் தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவைசி கடிதம்
இந்த நிலையில், ஐதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், செப்டம்பர் 17 ஆம் தேதியை ஐதாராபாத் விடுதலை தினமாக கொண்டாடுவதற்கு பதிலாக தெலுங்கானா தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தெலுங்கானா அரசு நிகழ்ச்சி
காலனி ஆதிக்கம், நிலப்பிரபுத்துவம் மற்றும் எதேச்சதிகாரத்திற்கு எதிராக அப்போதைய ஐதராபாத் மாநில மக்களின் நடத்திய போராட்டங்களை நிலத்துக்கான விடுதலையாக பார்க்காமல் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக பார்க்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் ஒவைசியின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்படும் என்று சந்திரசேகர் ராவ் அறிவித்து இருக்கிறார்.