தண்டவாளத்துக்கு நடுவுல மின்கம்பம்.. இந்த காண்ட்ராக்டருக்கு நிச்சயம் சிலை வைக்கணும்!
மின்கம்பத்தை சேர்த்து ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்தியப்பிரதேசத்தில் மின்கம்பத்தை நடுவில் வைத்து ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
"உலகத்துல இருக்கற அறிவாளிங்க பூரா நம்ம ஊர்ல தான் இருக்காங்க.." என சிங்கம்புலி ஒரு படத்தில் வேடிக்கையாகக் கூறுவார். ஆனால் அது காமெடியல்ல.. நிஜம்தான் என்பது போல அவ்வப்போது ஏதாவது ஒரு வேடிக்கையான சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி விடுகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் சாலை போடப்பட்ட போது, அடி பம்புகள், வாகனங்கள் போன்றவற்றையும் அப்படியே வைத்து கான்கிரீட் போடப்பட்டது விமர்சனங்களில் சிக்கியது. தற்போது இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், மத்தியப்பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வீடியோ பதிவு
மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள இஷாவர் ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பினா-சாகர்-கத்னி ஆகிய பகுதிகளுக்கு மூன்று வழி ரயில்பாதை அமைக்கும் போது, அதன் காண்ட்ராக்டர் அங்கிருந்த மின்கம்பத்தையும் அப்படியே சேர்த்து பாதை அமைத்திருக்கிறார். இந்தத் தரமான சம்பவத்தை ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

இது முதன்முறை
புகைப்படமாக இருந்தால் அதனை போட்டோஷாப் என்று சொல்ல வாய்ப்பு அதிகம் என்பதால், அந்நபர் புத்திசாலித்தனமாக வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். கூடவே அந்தப் பதிவில், "சாலையோரங்கள் மின்கம்பங்களைப் பார்த்திருப்போம். முதன்முறையாக இப்போதுதான் ரயில் தண்டவாளங்களுக்கு நடுவில் மின்கம்பத்தைப் பார்க்கிறேன்" என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

யார் தவறு?
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. என்ன யோசனையில் இப்படி அந்த காண்ட்ராக்டர் செய்தார் எனத் தெரியவில்லை. நிச்சயம் இது தனிப்பட்ட ஒருவரின் தவறாக மட்டும் இருக்காது. ஆனாலும் எப்படி இந்தளவிற்கு யோசிக்காமல் வேலை பார்த்தார்கள் எனத் தெரியவில்லை.

அதிர்ச்சி
ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்ற வேடிக்கையான வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர தருகிறது. வழக்கம் போலவே, 'இந்த காண்ட்ராக்டர் யார்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பா..' என இந்த வீடியோவைப் பகிர்ந்து கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications