ரூபாய் நோட்டு செல்லாது… மேற்கு வங்கத்தில் ராணுவம்.. எதிர்க்கட்சியினர் அமளி… முடங்கியது நாடாளுமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இதுவரை ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சியினர், இன்று மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 13வது நாளாக முடக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பிரதமர் மோடி அவைக்கு வந்து ரூபாய் நோட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Demonetization and army deployed: Parliament adjourned

இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. தொடங்கிய சில நிமிடங்களிலேயே மேற்கு வங்கத்தில் ராணுவத்தை மத்திய அரசு நிறுத்தியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களுடன் காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது, மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டதற்கான விளக்கத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அளித்தார். மேலும், ராணுவத்தை நிறுத்துவது வழக்கமான ஒன்று என்றும் அதனை அரசியல் செய்ய வேண்டாம் என்றும் பாரிக்க கூறினார். இதனை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்தனர். இதனையடுத்து, லோக் சபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் கூடிய போது, ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் லோக் சபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், திங்கள் கிழமை வரை லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராஜ்ய சபாவிலும் இதே பிரச்சனை எதிரொலித்தது. காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2.30 மணி வரை ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ராஜ்ய சபா கூடிய போதும் எதிர்க்கட்சிகள் அதே பிரச்சனை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், தமிழகத்தில் உள்ள சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக் கூடாது என்று அதிமுக எம்பிக்களும் கோஷமிட்டனர். இதனால் ராஜ்ய சபாவில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபா திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Both Lok Sabha and Rajya Sabha were adjourned again amid opposition uproar over the issue of demonetisation and the army deployed in West Bengal.
Please Wait while comments are loading...