For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது செம... கொரோனாவிடமிருந்து தப்பிய வடகிழக்கு மாநிலங்கள்.. காரணம் சூப்பர் கட்டுப்பாடுகள்!

Google Oneindia Tamil News

குவஹாத்தி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக உச்சமாக இருந்து வரும் நிலையிலும் வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வடகிழக்கு இனக் குழுக்கள் இன்னமும் கட்டுக்குலையாமல் காப்பாற்றி வரும் சமூகக் கட்டமைப்பும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மொத்த கொரோனா நோயாளிகளில் வடகிழக்கு மாநிலங்களின் பங்கு என்பது வெறும் 0.26%தான். இத்தனைக்கும் சீனாவுக்கு கூப்பிடும் தொலைவில்தான் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன.

சீனாவின் உணவு பழக்கங்களுக்கு இணையான அத்தனை உணவுமுறைகளையும் வடகிழக்கில் காண முடியும். இன்னமும் சொல்லப் போனால் சீனாவின் கொரோனா வைரஸ் முதலில் வடகிழக்கைத் தாக்கிவிட்டுதான் இந்தியாவுக்குள்ளேயே நுழைந்திருக்கவும் முடியும். ஆனால் கொரோனா விவகாரத்தில் அத்தனையும் தலைகீழாக இருக்கிறது. மத்திய இந்தியாவான மகாராஷ்டிராவும் மத்திய பிரதேசமும் கொரோனாவால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வடகிழக்கு இந்தியாவில் பாதிப்பு சொற்பம்தான்.

கிராமப்புற கட்டுப்பாடுகள்

கிராமப்புற கட்டுப்பாடுகள்

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை 200-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வசிக்கின்றன. அதுவும் கிராமங்களில் குறிப்பிட்ட இனக்குழுவினர்தான் அதிகம் வசிக்கின்றனர். அவர்களது அனுமதி இல்லாமல் மற்றொரு இனக்குழுவைச் சேர்ந்தவர் அந்த கிராமத்தில் உள்ளே நுழையவும் முடியாது. கிராமத்தின் தலைவர் பிறப்பிக்கும் கட்டளைகளை யாரும் மீறவும் முடியாது. இப்படியான ஒரு கட்டுப்பாடு இந்தியாவின் பிற மாநில கிராமங்களில் இப்போது வழக்கொழிந்த ஒன்றாகிவிட்டது. இந்த அடிப்படை சமூகக் கட்டுப்பாடும் கொரோனா பரவலில் இருந்து இந்த மக்களைப் பாதுகாத்திருக்கிறது.

ஆக்கப்பூர்வமான இளைஞர் குழுக்கள்

ஆக்கப்பூர்வமான இளைஞர் குழுக்கள்

கிராமப்புறங்களில் மது, போதைப் பொருட்கள் ஆகியவற்றை இளைஞர்கள் பயன்படுத்தி சீரழிவதைத் தடுத்து நிறுத்த பல்வேறு உள்ளூர் சமூக அமைப்புகள் செயல்படுகின்றன. நாகா இனக்குழுவினரிடையே Naga Hoho, மணிப்பூரில் Young Mizo Association போன்ற பல அமைப்புகள் இளைஞர்களின் வழிகாட்டிகளாக செயல்படுகின்றன. தமிழகத்தில் திராவிடர் இயக்கம் வாக்கு அரசியலை நோக்கி பயணித்த போது கிராமங்கள் தோறும் இளைஞர் அமைப்புகளை உருவாக்கின. இந்த இளைஞர் அமைப்புகள் தன்னிச்சையாக அடுத்த தலைமுறைகளின் கைகளுக்கும் சென்றது. இவர்கள் ஒழுக்கக் கோட்பாடுகளை பின்பற்றினர். இப்போது தமிழகத்தில் இந்த போக்கு இல்லை. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக தற்போதைய கொரோனா காலத்தில் இத்தகைய இளைஞர் இயக்கங்கள், அமைப்புகள் சமூக ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதில் முன்னணி வகிக்கின்றன. இதுவும் கொரோனா பரவல் குறைவுக்கு காரணமாக சொல்லலாம்.

பின்பற்றப்படும் தடுப்பு நடவடிக்கைகள்

பின்பற்றப்படும் தடுப்பு நடவடிக்கைகள்

லாக்டவுன் காலங்களில் நமது கிராமங்கள் சீட்டு விளையாட்டுகளிலும் தாயம் ஆடுதல்களிலும் மூழ்கிக் கிடக்கிறது. இதே லாக்டவுன் காலத்தில் வடகிழக்கு கிராமங்கள் கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. சமூக இடைவெளிகள் உள்ளிட்டவற்றை பின்பற்றி இத்தகைய நிகழ்வுகளை நடத்துகின்றனர். நமது கிராமப்புறங்களில் கோவில்களில் அரசுக்கும் போலீசுக்கும் தெரியாமல் நிகழ்ச்சிகள் இப்போதும் நடத்தப்படுகின்றன. ஆனால் எந்த ஒரு தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாட்டு அம்சங்களை பற்றி நாம் கவலைப்படாதவர்களாக இருக்கிறோம். அதனால்தான் கொரோனா நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

உள்ளூர் நிர்வாக அமைப்புகள்

உள்ளூர் நிர்வாக அமைப்புகள்

மிசோரம் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாக அமைப்புகள் முழு வீச்சில் முன்னெடுத்தன. மிசோரம் மாநில அரசால் பல்வேறு உள்ளூர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த குழுக்கள் முழு வீச்சில் மக்களுக்கு தேவையான உதவிகள், சமூக கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தி தற்காத்துக் கொள்வதில் அக்கறை காட்டியது. பல்வேறு இனக்குழுக்கள் இருந்தபோதும் கிராம எல்லைகளில் இந்த குழுவினர் இணைந்து அன்னியர் நடமாட்டங்களை ஒரு போர்க்காலம் போல கருதி தடுத்து செயற்பட்டனர். இதுவும் கொரோனா பாதித்தவர்கள் அந்த கிராமங்களை தொட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது.

பரிசோதனைகள், சுகாதார வசதிகள்

பரிசோதனைகள், சுகாதார வசதிகள்

இவைகள் அல்லாமல் வேறு ஒரு கோணத்திலும் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சில புரிதல்கள் வைக்கப்படுகின்றன. அடிப்படையில் வடகிழக்கு மாநிலங்களுக்கான பொதுப் போக்குவரத்து என்பது இந்தியாவின் பிற நிலப்பரப்பில் இருப்பது போல இல்லை. மலைத்தொடர்களினூடே அமைந்திருக்கும் மாநிலங்கள் என்கிற இயற்கையான புவியியல் அமைப்பு முறை பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. இன்னொரு வடகிழக்கு மாநிலங்களில் இன்னமும் அடிப்படை சுகாதார வசதிகளே இல்லை. அப்படியான நிலையில் கொரோனா பரிசோதனை போன்ற நடவடிக்கைகள் எந்த அளவு மேற்கொள்ளப்பட்டன? என்பது போன்ற இன்னொரு பக்க கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. இருந்த போதும் சமூக கட்டுப்பாடுகளை தொடர்ந்து பேணி காப்பாற்றுவதன் மூலம் பிணிகள் அற்ற சமூகமாக வாழ முடியும் என்பதற்கு வடகிழக்கு இந்தியா முன்னுதாரணமாக வழிகாட்டியாக திகழ்கிறது.

English summary
Here the story on North East State''s fighting against the Novel Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X