சுவாதியை சந்தித்த கோகுல்ராஜ் கொலை..பிறழ் சாட்சியத்திற்கான காரணத்தை கூற வேண்டும்.. நீதிபதிகள் சாடல்
மதுரை: சுவாதியை சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.. சத்தியப் பிரமாணம் செய்த பின் தவறான தகவலை அளிப்பவர் எளிதாக கடந்து சென்று விட முடியாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிறழ் சாட்சியான சுவாதி அதற்கான காரணத்தையாவது குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் இரண்டு வாரங்களில் சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தார் கோகுல்ராஜ். அவருடன் அவரது தோழியும் சென்றிருந்தார். அப்போது சிலர் அந்த பெண்ணை விரட்டி விட்டு கோகுல்ராஜை கடத்தி சென்றனர்.
உறவினர்களும் பெற்றோர்களும் கோகுல்ராஜை தேடிய நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்பாதை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுவாதி ஆஜரானார்.

சுவாதி பிறழ் சாட்சியம்
அப்போது, பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, 'புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள்' என நீதிபதிகள் கூறினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது. ஞாபகம் இல்லை என்று கூறினார். போலீசார் கூறியதால் சொன்னேன். எழுதிக் கொடுத்தேன்' என்றும் சுவாதி பதிலளித்தார்.

அது நான் இல்லை
வீடியோவில் உள்ளது கோகுல்ராஜ் தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை என்று கூறினார். அப்போது நீதிபதிகள், ''உங்களை, உங்களுக்கே அடையாளம் தெரியவில்லையா? எதையும் மறைக்காமல் உண்மையை கூற வேண்டும். உண்மைகளை கூறாவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறினாலும் மீண்டும், மீண்டும் குறுக்கு விசாரணை நடந்து கொண்டே இருக்கும் என்று கூறினார். இதையடுத்து, சுவாதியை வரும் 30ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம், அன்றைய தினம் சுவாதி ஆஜராக வேண்டும். அப்போதும் இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.

நீதிபதிகள் எச்சரிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த முறை கூறிய சாட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினர். இதையடுத்து நீதிபதிகள், "சுவாதி உண்மையை சொல்லாமல் மறுத்துவிட்டார். சிசிடிவி உள்ள பெண் அவராக இருந்தும் அதனை ஏற்காமல் சுவாதி மறுத்துவிட்டார். சுவாதி யாராலும் அழுத்தத்திற்கு ஆளாகி யாரையோ காப்பாற்ற இவ்வாறு கூறுகிறாரோ என நினைக்கிறோம்.

கோகுல்ராஜ் கொலைக்கு காரணம்
சாட்சிகள் உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகவே சத்தியப்பிரமாணம் பெறப்படுகிறது. சுவாதியின் சாட்சி இந்த வழக்கில் முக்கியம். அவரே சந்தித்ததாலேயே கோகுல்ராஜ் கொல்லப்பட்டார். சத்தியப் பிரமாணம் செய்த பின் தவறான தகவலை அளிப்பவர் எளிதாக கடந்து சென்று விட முடியாது. நீதித்துறையை மாசுபடாமல் இருக்க தவறான தகவலை தருவோர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். பிறழ் சாட்சியான சுவாதி அதற்கான காரணத்தையாவது குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்ற கருத்து கூறியதோடு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் சுவாதியை ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications