மதுரை சித்திரை திருவிழா.. அழகரின் ரூட்டை டிராக் செய்ய புதிய செயலி.. என்ன பயன்கள்?
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் இருப்பிடத்தை அறிய டிராக் அழகர் செயலியை பயன்படுத்துவது எப்படி என்பதை மாவட்ட போலீஸ் எஸ்பி பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நகருக்குள் வந்துவிட்டு திரும்பி செல்லும் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். எனவே கள்ளழகர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பக்தர்கள் அறிந்து கொண்டால் இங்கு அங்கு என வீண் அலைச்சல் இல்லாமல் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் என காவல் துறை திட்டமிட்டது.
அதன்படி டிராக் அழகர் என்ற செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் மதுரை மாவட்ட மக்களின் பாதுகாப்பு வசதிக்காக மதுரை காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

காவலன் செயலி
அந்த காவலன் செயலி மூலம் சித்திரை திருவிழாவை எவ்வித சிரமமின்றி கண்டுகளிக்க புதிய வசதி ஏற்படுத்தியுள்ளோம். அதன்படி மதுரை மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் டிராக் அழகர் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிராக் அழகர்
இதன் மூலம் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் வருகிற 14-ஆம் தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை, அவர் எந்த வழித்தடத்தின் வழியாக செல்கிறார், எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தங்கள் செல்போனில் மதுரை காவலன் என்ற செயலில் டிராக் அழகர் (Track Alagar) என்ற லிங்க் மூலம் வரும் வரைபடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
சிரமத்தை தவிர்ப்பதற்காகவே இது போல் ஒரு வசதியை ஏற்படுத்தியுள்ளோம். பக்தர்கள் தங்களின் ஆன்டிராய்டு செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் இலவசமாக மதுரை காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே அந்த செயலியை வைத்திருப்பவர்கள் அதனை அப்டேட் செய்த பின்னால் மதுரை காவலன் செயலில் உள்ள டிராக் அழகர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2 ஜி
இந்த வசதியானது 2 ஜிசெல்போனிலும் தமிழ் மற்றும் ஆங்கில குறுஞ்செய்தி மூலம் கள்ளழகர் வருகையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இந்த செயலியை இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி மூலம் 600 புகார்கள் வந்துள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications