ஒழுங்கா மாஸ்க் போடுங்க... இல்லனா மீண்டும் ஊரடங்கு தான்... எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே
மும்பை: கொரோனாவை கட்டுப்படுத்த அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், நாட்டிலுள்ள சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஒட்டுமொத்த இருக்கும் ஆக்டிவ் கேஸ்களில் 27% மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவை விட கூடுதலாக மகாராஷ்டிராவில் அதிக பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏழாவது நாளாக மகாராஷ்டிராவில் 3000 மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் மாநிலங்களில் வேகமெடுக்கும் கொரோனா... அதிகாரிகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி

மீண்டும் ஊரடங்கு
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, "சில கட்டுப்பாடுகளுடன் சுதந்திரமாக இருக்க வேண்டுமா அல்லது மீண்டும் ஊரடங்கு வேண்டுமா என்பதை மாநிலத்திலுள்ள மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பொதுமக்கள் மாஸ்க்குகளை அணிய வேண்டும், கூட்டங்களைத் தவித்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும்.

கடும் நடவடிக்கை
பொதுமக்கள் கொரோனாவை இப்போது மறந்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மறந்துவிடக் கூடாது. பொது இடங்களில் கிருமிநாசினி செலுத்தும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், பொது இடங்களில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கிரமங்களில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு வேன்களை இயக்க வேண்டும்" என்றார்.

விரைவுபடுத்த வேண்டும்
மாநிலத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தக் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும்பட்சத்தில், அவருடன் தொடர்பிலிருந்த குறைந்தபட்சம் 20 பேரைக் கண்டறிய வேண்டும் என்றும் மகாராஷ்டிர அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கும் பணிகளை அதிகாரிகள் விரைவு படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

தீவிர ஆலோசனை
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள கலெக்டர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் முறையாக உள்ளதா என்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வரை 20,71,306 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 51,591 பேர் உயிரிழந்துள்ளனர்.