கஞ்சா பழக்கத்தை கைவிட கூறிய மாமா.. அடித்துக்கொன்ற மைத்துனர் .. அதிர்ச்சியில் உறைந்த சேலம்!
சேலம்: கஞ்சா பழக்கத்தை கைவிட கூறிய அக்காள் கணவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த மைத்துனரை போலீசார் கைதுசெய்தனர். சேலம் சாமிநாதபுரம் அல்ராஜ் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது.

போதை பழக்கம்
இந்த நிலையில் பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகனுக்கு கஞ்சா போதை பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கோகுல்நாத்திடம் அக்கம்பக்கத்தினர் பாலமுருகனின் கஞ்சா பழக்கம் குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனால் கோபமுற்ற கோகுல்நாத் தனது மனைவியின் சகோதரர் பாலமுருகனிடம் கஞ்சா பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென கூறி திட்டியுள்ளார்.

படுகொலை
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை கோகுல்நாத் தூங்கிக் கொண்டிருக்கும் போது பாலமுருகன் சுத்தியலால் கோகுல்நாத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கோகுல்நாத் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

வீட்டில் சிறை வைத்தனர்
அப்போது அவரது மாமனார் சந்திரசேகர் கோகுல்நாத்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் கோகுல்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே சுத்தியலால் தாக்கிய பாலமுருகனை அவரது தாய், தந்தையரே பிடித்து அறையில் பூட்டி வைத்தனர். இது தொடர்பாக பள்ளப்பட்டி காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.

கைது செய்தனர்
அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீஸார் பாலமுருகனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பழக்கத்தை தட்டிக்கேட்ட மாமாவை மைத்துனர் சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications