For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: ரூ. 5 கோடி கேட்டு தொழிலதிபர் மகன் கடத்தல்... மிஸ்டுகால் காதலால் நிகழ்ந்த விபரீதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில், தொழிலதிபர் மகனுக்கு மிஸ்டு கால் கொடுத்து காதல் வலையில் விழ வைத்து கடத்தியுள்ளது ஒரு கும்பல். ஐந்து கோடி ரூபாய் கேட்டு, மிரட்டிய அந்த கும்பலை, போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு கைது செய்ததோடு இளைஞரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடத்தலுக்காக மகளை காதலிப்பதுபோல் நடிக்க வைத்தேன் என்று தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கில் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். செல்போன் வந்த பின்னர் வாட்ஸ்அப் மூலம் காதல்கள் எளிதாக வளர்கின்றன. மிஸ்டுகால் மூலம் காதல் எளிதாக பிக் அப் ஆகிறது. அப்படித்தான் தனக்கு வந்த மிஸ்ட் கால் ஒன்றுக்கு பேசப்போய் காதல் வலையில் விழுந்து கடத்தப்பட்டு மீண்டுள்ளார் 19 வயது வாலிபர் அபிஷேக்.

Chennai: 19-year-old kidnapped for Rs 5 crore ransom rescued by police

கோடீஸ்வரர் மகன்

சென்னை போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசுந்தரம். இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மூலிகை அழகு சாதன பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை முக்கிய தொழிலாக இவர் செய்து வருகிறார். இவரது செல்ல மகன் அபிஷேக், 19 காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அபிஷேக் கடந்த சனிக்கிழமையன்று இரவு 10.30 மணி அளவில் தனது நண்பனின் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது தாயாரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. அபிஷேக்கை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடிய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அபிஷேக்கின் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

ரூ.5 கோடி

போனில் பேசிய மர்ம நபர், அபிஷேக்கை கடத்தி சிறை வைத்துள்ளோம். ரூ.5 கோடி பணத்தை கொடுத்தால் அபிஷேக்கை பத்திரமாக திருப்பி அனுப்புவோம் என்றும், போலீசில் புகார் கொடுத்தால் அபிஷேக்கின் உடல்தான் பார்சலில் வரும் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரவிசுந்தரம் சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடன் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

காரில் வலம் வந்த குற்றவாளிகள்

அத்துடன், தனிப்படை போலீசார், ரவிசுந்தரத்திடம் மொபைல் போன் மூலம், மர்ம நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்படியும், காசிமேட்டில் எந்த இடத்திற்கு வர வேண்டும்' என, கேட்கும்படியும் கூறினர். அதன்படி ரவிசுந்தரமும் தொடர்பு கொள்ள, மர்ம நபர் எரிச்சல் அடைந்தான். ஒரு மணி நேரம் மொபைல் போனை, சுவிட்ச் ஆப் செய்து இருந்த அவன், மீண்டும் ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்டான். அப்போது, கோயம்பேடு வரும்படி கூறினான். இதற்கிடையில் தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மர்ம நபர் மடிப்பாக்கம், கீழ்கட்டளை அருகே பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.

போலீஸ் தேடுதல் வேட்டை

இதனால், அந்தப் பகுதி முழுவதையும், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சாலைகளில் தடுப்பு அமைத்து, வாகன சோதனையை கடுமையாக்கினர். இதற்கிடையில், ரவிசுந்தரத்தை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், பாடி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான். பின், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவுக்கு வரும்படி தெரிவித்துள்ளான். இந்தப் பேச்சின் அடிப்படையில், மர்ம நபர், காரில் பயணித்தபடியே பேசுவதை போலீசார் உறுதி செய்தனர்.அவனது, செல்போன் டவர் இருந்த பகுதி பல்லாவரம், ரேடியல் சாலை பகுதியை காட்டியது. உடன் போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல், ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், பல்லாவரம் வரும்படி கூறியுள்ளான்.

சினிமா பாணியில் வளைப்பு

பணத்துடன் ரவிசுந்தரம் அந்த பகுதிக்கு செல்ல, போலீசாரும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் வேன் ஓட்டுனர்கள் போல், பின் தொடர்ந்து சென்றனர். ரவிசுந்தரத்தின் கார், பல்லாவரம் ரேடியல் சாலையை அடைந்ததும், அவரது காரை, இரண்டு இண்டிகா கார்கள் பின் தொடர்ந்தன. அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், திடீர் தடுப்பு அமைத்து, அந்தக் கார்களை நிறுத்த முயன்றனர்.

சிக்கிய நபர்கள்

போலீசார் தங்களை சுற்றி வளைத்து விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை வேகமாக ஓட்டினர். போலீசாரும் துரத்தியதால், தடுப்பு கம்பியில் மோதி, ஒரு கார் தலைகீழாக உருண்டது.

இதையடுத்து, லேசான காயத்துடன் காரில் இருந்து தப்பிக்க முயன்ற, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அடுத்த, கேமளாபாத்தைச் சேர்ந்த, சதாம் உசேன், அகமது பெகாத், ரிஸ்வான், ஆகியோரை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் மீட்பு

மற்றொரு காரை போலீசார் தொடர்ந்து துரத்தியபோது, பல்லாவரம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஒருவன் தப்பித்து விட்டான். காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த, அபிஷேக் மீட்கப்பட்டார். அந்தக் காரில், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, குர்சித், என்ற பெண்ணும் இருந்தாள்.அவளிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த கடத்தல் சம்பவத்திற்கு, அவளது கள்ளக்காதலன் மதன், மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குர்சித்தை போலீசார் கைது செய்தனர். அபிஷேக், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடத்தல் நாடகம்

மேலும், தப்பி ஓடிய மதன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வரும் போலீசார், ''மதன் சென்னையை அடுத்த தொழுதூரைச் சேர்ந்தவர். அவர் முதலில் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்த குர்ஷித்துடன் நெருங்கி பழகி இருக்கிறார். அந்த பழக்கத்தில் புனிதமான காதலை கடத்தலுக்கு பயன்படுத்தியது மட்டும் அல்லாமல், அபிஷேக் மீது பாலியல் புகாரும் கூறி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

காதல் நாடகம்

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள குர்ஷித், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நாங்கள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக ஆசைப்பட்டோம். அப்போது, என் முதலாளி ரவிசுந்தரம் பெரிய கோடீஸ்வரர். அவரது, இரண்டாவது மகன் அபிஷேக் வீட்டில் சும்மா தான் இருக்கிறான். அவனை கடத்தினால், ஐந்து கோடி ரூபாய் தேறும் என, மதன் கூறினான்.

நானும், மதனும் சேர்ந்து, சதி திட்டம் தீட்டினோம். என் மகளின் மொபைல் போனில் இருந்து, அபிஷேக்கின் மொபைல் போனுக்கு, மிஸ்டு கால் கொடுக்க சொன்னோம். அதன்படி என் மகளும் செய்தாள். அடுத்த நொடியே அபிஷேக் தொடர்பு கொண்டார்.பின், அடிக்கடி தொடர்பு கொண்டு, என் மகள் காதல் வலை வீசினாள்; அதில் அபிஷேக் விழுந்தார்.

முகம் பார்க்காமல் காதல்

எனது மகளை அபிஷேக்கை காதலிப்பதுபோல செல்போனில் பேசி நடிக்க வைத்தோம். கடந்த, 3ம் தேதி, நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு, இரவு விருந்துக்கு செல்வதாக என் மகளிடம் அபிஷேக் தெரிவித்தார். எனது மகளை அபிஷேக்கிடம் பேச வைத்து, கோட்டூர்புரம் வரவழைத்தோம். அங்கு நான், எனது மகள் மற்றும் மதன் அவருடைய கூட்டாளிகள் மற்றும் எனது ஊர்க்காரர்கள் 3 பேர் 2 கார்களில் காத்திருந்தோம். எனது மகளை அபிஷேக் நேரில் பார்த்ததில்லை. நாங்களும் அவரை பார்த்ததில்லை.

கண்ணை கட்டி கடத்தல்

அபிஷேக் கோட்டூர்புரம் வந்ததும், அவரை மதன்தான் அடையாளம் காட்டினார். அபிஷேக் அருகில் வந்தவுடன் மதன் காரில் வற்புறுத்தி ஏற வைத்தார். அந்த காரில் மதன், அவருடைய கூட்டாளிகள் மற்றும் நான், எனது மகள் இருந்தோம். அபிஷேக்கை கண்ணை கட்டி ஊரப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். எனது வீட்டில் உள்ள ஒரு இருட்டு அறையில் தங்க வைத்தோம். கொன்று விடுவோம் என்று மதன் மிரட்டியதால் அபிஷேக் சத்தம் போடவில்லை. பின், கீழ்கட்டளை, பல்லாவரத்திற்கு கொண்டு சென்றோம். அபிஷேக் எங்களை திட்டியதால் அவரை அடித்தோம்; அவர் மயங்கி விட்டார். ரவிசுந்தரத்திடம் பேசி வந்த சதாம் உசேன் சொதப்பி விட்டான்; அதனால் மாட்டிக் கொண்டோம்.

சிக்கியது தெரியாது

அபிஷேக்கை கடத்தியவுடன், எனது மகளை பஸ்சில் ஏற்றி திருச்சியில் உள்ள எனது தாயார் வீட்டுக்கு போகும்படி அனுப்பிவிட்டேன். அவளும் திருச்சி சென்று விட்டாள்" என்று தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கில் குர்ஷித்தின் மகள் பானுவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் திருச்சிக்கு விரைந்துள்ளனர்.

மதன் எங்கே?

இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட மதன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். அதனால், அவர்கள் மூலம், மதனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் பணத்திற்காக தொழிலதிபர்களின் வாரிசுகள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடத்தப்பட்டவர்களில் சிலர் சாமர்த்தியமாக மீட்கப்பட்டு விட்டாலும், சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 19-year-old son of a businessman was kidnapped on Monday for Rs 5 crore ransom. The police successfully rescued Abhishek in eight hours from the time they started the operation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X