பெரம்பலூரில் தலித் பெண் மர்ம மரணம்.. கொலையாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள் விடிய விடிய போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் ஐஸ்வர்யா என்ற தலித் பெண் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் புது காலனியை சேர்ந்த தங்கவேல் மற்றும் மல்லிகா ஆகியோரின் மகள் 22 வயதான ஐஸ்வர்யா. தலித் பெண்ணான இவர், கடந்த 11ம் தேதி திடீரென மாயமானார்.
நேற்று முன்தினம் அருகில் உள்ள வயல் கிணறு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பெரம்பலூர் எஸ்பியிடம், ஐஸ்வர்யாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.

Dalit woman suspected death, kin staged protest

மரணத்தில் மர்மம்

அந்தப் புகாரில் நாவலூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபனும், ஐஸ்வர்யாவும் காதலித்தனர் என்றும் இதற்கு பார்த்திபனின் நண்பர் சரண்ராஜ் என்கிற சின்னசாமியும் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினால், ஐஸ்வர்யா மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உறவினர்கள் போராட்டம்

கைப்பற்றப்பட்ட ஐஸ்வர்யாவின் உடல் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் உறவினர் மருத்துவமனையில் ஒன்று கூடி குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

சாலை மறியல்

அவர்களோடு, பகுஜன் சமாஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள், மாதர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் அரசு மருத்துவமனை அருகே துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கொலை வழக்கு

அப்போது அங்கு வந்த ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார், டிஎஸ்பி கார்த்திக், தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளிடம், ஐஸ்வர்யா கொல்லப்பட்டுள்ளார் என்றும் குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

தலித் டாக்டர்கள் குழு

ஐஸ்வர்யாவின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படும் போது தலித் டாக்டர் ஒருவர் மருத்துவ குழுவில் இடம் பெற வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மீண்டும் மறியல்

ஆனால் மாலை வரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். மாலை 4 மணியளவில் காமராஜர் வளைவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெண்கள் கைது

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 117 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பாலக்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

ஆனால், கைதானவர்கள் யாரும் அங்கிருந்து வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் டிஎஸ்பி கார்த்திக், ஐஸ்வர்யாவை கொலை செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ள பார்த்திபன், சரண்ராஜ் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என எப்ஐஆர் நகலை காட்டினார். ஐஸ்வர்யா கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தால், கொலை வழக்காக மாற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதையடுத்து மாலை 5 மணியளவில் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம், இன்று அதிகாலையில் கைவிடப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Family members of a 22 year old dalit woman staged a protest to demand justice.
Please Wait while comments are loading...