For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகம் அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தமிழக அரசின் சார்பில் அடுத்த ஆண்டு நடத்தப்படவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக, ஓவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் தூதர் தலைமையிலான 10 நாடுகளின் பிரதிநிதிகள் சுற்றுப்பயணம் ந‌டத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சென்னை வந்துள்ள இவர்கள், வரும் 11ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

EU representative met O.Panneerselvam

இக்குழுவினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவிலேயே தொழில வளர்ச்சி மிக்க மூன்று பிரதான மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இதனை மேலும் சிறப்பானதாகக் கொண்டு செல்ல "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' என்ற அம்சத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பல்வேறு சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநிலத்தில் மிகப்பெரிய சொத்தாக சிறந்த மனிதவளம் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், திறன்படைத்த தொழிலாளர்கள் இருப்பதையும்,தொழில் தொடங்குவதற்கான அமைதியான சூழல் மாநிலத்தில் நிலவுவதால் தமிழகம் முதலீட்டுக்கு ஏற்ற பகுதியாக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகள் திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்குவதாகவும், அதுகுறித்த அம்சங்களை தமிழகம் கற்றுக் கொள்ள விருப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார். பொறியியல், வேளாண் பதப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் ஐரோப்பிய யூனியனும், தமிழகமும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். மேலும், தமிழகம் சமூக கட்டமைப்பிலும், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழகம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் மாநாடு :

தமிழக அரசின் சார்பில், சென்னையில் அடுத்த ஆண்டு மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலளித்த இந்தியாவுக்கான ஐரோப்பிய நாடுகளின் தூதர் ஜோயோ க்ராவின்ஹோ, "மக்கள் தொகையிலும்,பொருளாதாரத்திலும் மிக முக்கிய மாநிலமாக தமிழகம் விளங்குவதால் இங்கு வந்துள்ளோம்.

இந்தியாவில் மிக முக்கிய வணிக கூட்டாளியாக ஐரோப்பிய யூனியன் விளங்குகிறது. மேலும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது, இந்தியாவில் தனது பணியைத் தொடரவுள்ளது. அதன்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்தொடரமைப்பு போன்ற பசுமை உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதன்மூலம், தமிழகத்தில் மேலும் முதலீடுகள் பெருகும்' என்றார்.

இந்தச் சந்திப்பின் போது, ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், செக், ஸ்லோவாக்கியா, போலந்து, லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், தொழில் துறை செயலாளர் சி.வி.சங்கர், நிதித் துறை செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The representatives of European union countries yesterday met Tamilnadu chief minister O.Panneerselvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X