• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோட்டு அறிவிப்புக்கு பிறகும் பாஜகவுக்கு நல்ல ரூட்டு.. 3 தொகுதிகளிலும் "முரசை" வெட்டிய "தாமரை"

By Veera Kumar
|

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலுமே, அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே, 3வது இடத்தில் பாஜக முன்னிலை பெற்றது.

விஜயகாந்த் போட்டியிட திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலும், தேமுதிகவை பாஜக வீழ்த்தி முன்னேறியதுதான், முரசு கட்சியினருக்கு கிடைத்த அதிகபட்ச அதிர்ச்சி.

இந்த நிலைமையை, பாஜகவின் வளர்ச்சியாக பார்ப்பதா, அல்லது தேமுதிகவின் தேய்பிறையாக பார்ப்பதா என்பதில் அரசியல் பார்வையாளர்களுக்கு இருவேறு கருத்துக்கள் உள்ளன.

முடங்கிய முரசு

முடங்கிய முரசு

தேமுதிகவை பொறுத்தளவில் கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற அதிர்ச்சியால் தலைவர்கள் அனைவருமே சோர்ந்து போய் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர். இடைத்தேர்தல்களின்போதுதான் பிரேமலதாவை வெளியே பார்க்க முடிந்தது. மக்கள் மன்றத்தில் இருந்து கிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தேமுதிகவை மக்களும் மீண்டும் புறக்கணித்துள்ளனர்.

பாஜகவின் செயல்பாடு

பாஜகவின் செயல்பாடு

பாஜகவை பொறுத்தளவில், அக்கட்சி களப்பணி ஆற்றியதோ இல்லையோ, மத்தியில் ஆட்சியில் இருப்பதால், அதன் இருப்பு என்பது அழியவில்லை. அக்கட்சி தலைவர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர். மோடி எனும் பிம்மபமும், தாமரை சின்னத்தை மக்கள் மத்தியில் பதிய வைத்துள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் ரொம்பவே பிசியான கட்சியாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது பாஜக.

வளர்ந்து வருகிறதே

வளர்ந்து வருகிறதே

பாஜகவை பொறுத்தளவில் அது தமிழகத்தில் மெல்ல, மெல்ல வளர்ந்து கொண்டே வருவதை அதன் பொதுத்தேர்தல் செயல்பாட்டில் இருந்து கூட பார்க்கலாம். லோக்சபா தேர்தலில், பெரிய கட்சியான, திமுகவால் ஒரு தொகுதியையும் வெல்ல முடியாத நிலையில் கூட, பாஜக கன்னியாகுமரி தொகுதியை வென்று அசத்தியது. கடந்த சட்டசபை தேர்தலின்போதும், கன்னியாகுமரி, கோவை மண்டலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவானதை அதன் வாக்கு சதவீதம் உணர்த்தியது.

பாஜகவின் கொள்கை ஈர்ப்பு

பாஜகவின் கொள்கை ஈர்ப்பு

திமுகவின் திராவிட கொள்கை போலவே, பாஜகவுக்கு தேசிய கொள்கை முதன்மையானது. இந்துத்துவா ஆதரவு, பாகிஸ்தான் எதிர்ப்பு, சிறுபான்மையினருக்கான சலுகைகள் எதிர்ப்பு என, சரியோ, தவறோ பாஜகவுக்கு என்று ஏகப்பட்ட அடிப்படை கொள்கைகள், கோட்பாடுகள் உண்டு. திமுக எப்படி தனது அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கையில் அதில் மக்கள் இணைந்தனரோ, அதேபோல பாஜக கொள்கையில் ஈடுபாடு கொண்டோரும் அக்கட்சியில் இணைவது தொடருகிறது. ஆனால் தேமுதிக கொள்கை என்று எதைச்சொல்லும்? இப்படிப்பட்ட நிலையில் விஜயகாந்த் மீதான ஈர்ப்பு குறைந்ததும் இயல்பாகவே தேமுதிக தேய்பிறையாவதும் நடக்கவே செய்கிறது.

வலைத்தளம், மீடியா பங்களிப்பு

வலைத்தளம், மீடியா பங்களிப்பு

அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக, சமூக வலைத்தளங்களில் பாஜகவின் தாக்கம் அதிகமாக உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில் பாமக இதில் தீவிரமாக இருந்தபோதிலும், இப்போது அதன் சமூக வலைத்தள செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக இதில் பூஜ்யமே. அக்கட்சி சமூக வலைத்தளங்களில் அடிபட்டாலும் அது கேலிக்கானதாகவே இருக்கிறதே தவிர, ஆதரவான பதிவுகள் வருவதில்லை. மக்களிடம் சமூக தளங்கள் வழியாக மட்டுமின்றி, செய்தி ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகள் மூலமாகவும், பாஜக தொடர்ந்து தொடர்பில் இருப்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. தேமுதிக சார்பில் டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க யாருக்குமே அனுமதி தரப்படவில்லை.

ரூபாய் நோட்டு அறிவிப்பு

ரூபாய் நோட்டு அறிவிப்பு

ரூபாய் நோட்டு குறித்த மோடியின் அறிவிப்பு மக்களிடம் கோபத்தை உருவாக்கி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துமா? இந்த தேர்தல் மோடி அறிவிப்பின் கைநாடியாக பிரதிபலிக்குமா? என்ற கோணத்தில் அரசியல் பார்வையாளர்கள் அணுகினர். ஆனால் 3 தொகுதி இடைத்தேர்தல், வாக்கு அடிப்படையில் தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று பாஜக பெயர் வாங்கிவிட்டது. இது மோடியின் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதையும், பெரிய அளவில் கோபம் இல்லை என்பதையும் பிரதிபலிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Here is the reasons why BJP gets more vote than Vijayakanth's DMDK in the by election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X