For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அபராதம் கட்டியது ஏன்?... எல்லோரின் மனத்திலும் எழுந்துள்ள அய்யப்பாடு!: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: நீதிமன்ற தண்டனையிலிருந்து தப்பிக்கவே, அதிமுக பொது செயலர் ஜெயலலிதா தரப்பினர் அபராத தொகையை கட்டியிருக்கின்றனர் என்றால், தாங்கள் செய்த குற்றத்தை அவர்களே, ஒப்புக் கொண்டு விட்டனர் என்று தான் பொருள் எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கை:

''1991 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை உதவி ஆணையாளர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்து தற்போது ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எய்தியுள்ளது. அந்த வழக்கின் விவரம் பற்றி நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றை இங்கே விளக்கிட விரும்புகிறேன்.

Karunanidhi accuses Modi government

இது குறித்த வழக்கு 21-8-1997 அன்று முதன் முதலாகத் தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித் துறையினர் குறிப்பிட்டுள்ள அந்தக் கால கட்டத்தில், தனக்கு வருமானம் இல்லை எனவும், அதனால் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனவும் ஜெயலலிதா தரப்பிலே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை வருமான வரித் துறையினர் ஏற்றுக் கொள்ளவில்லை. வருமான வரிச் சட்டப்படி, வருமான வரி செலுத்துபவர்கள், வருமானம் இல்லாத காலத்திற்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்பதுதான் சட்டம்.

ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1993-94ஆம் ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதது பற்றிய வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார்.

நீதிபதிகள் கூறியது:

அப்போது நீதிபதிகள் கூறியது என்ன தெரியுமா? "நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் என்ன பதில் மனுவை உங்களால் தாக்கல் செய்ய முடியும்? (ஜெயலலிதாவின் வழக்கறிஞரைப் பார்த்து) உங்கள் கட்சிக்காரர் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று நாங்கள் இன்றைக்கே ஆணை பிறப்பிக்க விரும்புகிறோம்."

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று கீழ்க் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பினர் முறையீடு செய்ததை, 14-6-2006 அன்று நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

வேண்டுமென்றே தாமதம் :

ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்களை இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரி மனுக்களைத் தாக்கல் செய்து விட்டு, அதனை நடத்தாமல் காலம் கடத்தியதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை; உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 4-9-2006 அன்று உச்ச நீதிமன்றம் நான்கு வாரக் காலத்திற்குள் விசாரணை நீதி மன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களை விடுவிக்க வேண்டுமென்று தொடுத்த வழக்கை முடிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அதன்படி சென்னை முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் அவர்கள் விசாரித்து ஜெயலலிதாவின் மனுவினைத் தள்ளுபடி செய்தார். அதாவது 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாண்டு களுக்குப் பிறகு தங்களை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று குற்றஞ் சாட்டப்பட்ட வர்கள் மனு தாக்கல் செய்து, அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பிறகு ஜெயலலிதா தரப்பினர் உயர் நீதிமன் றத்தில் "அப்பீல்" செய்து, அதுவும் 2-12-2006 அன்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த "அப்பீல்", உச்ச நீதிமன்றத்தால் 30-1-2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தள்ளுபடி செய்த தோடு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வருமான வரி வழக்கை ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டு மென்றும், இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்றும் 2014ஆம் ஆண்டு ஜனவரி யில் ஆணை பிறப்பித்தார்கள். மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "வருமான வரி செலுத்த வேண்டிய வர்கள் தவறாமல் வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அப்படித் தாக்கல் செய்யாததே குற்றம் ஆகும். வருமான வரித் துறையினர் வழங்கும் ஒவ்வொரு உத்தரவும் மேல் முறையீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அப்படி மேல் முறையீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வுகள் குறித்த விவரங்கள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு இந்த வழக்கில் வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. எனவே இனி அனைத்து நீதிமன்றங்களும் குற்றம் செய்பவர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளைத் தாமதப்படுத்துவதற்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்" என்று தங்கள் தீர்ப்பில் தெரிவித் திருந்தார்கள்.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில், "குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டிய வருமான வரித் துறையின் மீதா அல்லது குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதா என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். இந்த வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, உள்நோக்கம் இருந்திருப்பதை யூகிக்க முடிகிறது என்பதால், குற்றஞ்சாட்டப் பட்டவர்கள்தான்; தாங்கள் எவ்வித அய்யப்பாட்டிற்கும் இடமின்றி நிரபராதிகள் என்பதை நிரூபிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எத்தகைய சூழலில் தாங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும்தான் உள்ளது என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டது 1997ஆம் ஆண்டு. மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அது 2006ஆம் ஆண்டு அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 2-12-2006. அதை எதிர்த்து ஜெயலலிதா 2006ஆம் ஆண்டு செய்து கொண்ட அப்பீலை, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதி மன்றம் கடந்த 30-1-2014இல் தள்ளுபடி செய்ததோடு, நான்கே மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்குமாறு ஆணை பிறப்பித்தது.

அவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பத்து மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் விசாரணை முடிந்து விட்டதா என்றால் இல்லை. உச்ச நீதிமன்றம் இப்படியெல்லாம் எழுதி; நான்கே மாதங்களில் இந்த வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்த அந்த வழக்கில்தான்; அதே உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் 3 மாதங்களுக்கு விசாரணையை தள்ளி வைத்ததுடன், (அப்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் முடிவடைய நான்கு நாட்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது) விசாரணை நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறாமல் ஆஜராக வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பாவது மதிக்கப்பட்டதா? ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறாமல் விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்ட நாளில் ஆஜரானார்களா?

20-3-2014 அன்று இந்த வழக்கு எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.தெட்சிணாமூர்த்தி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டியிருப்பதால், ஏப்ரல் 3ஆம் தேதி ஜெயலலிதாவும் சசிகலாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஏப்ரல் 3ஆம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் நேரில் ஆஜராக வில்லை. அவர்களுடைய வழக்கறிஞர், ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாகவும், சசிகலா வுக்கு முதுகுவலி மற்றும் சர்க்கரை நோய் என்றும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டு மென்றும் கோரினார். அப்போது வருமான வரித் துறை வழக்கறிஞர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த நிலையில் மாஜிஸ்திரேட் அவர்கள், ஜெயலலிதாவும், சசிகலாவும் ஏப்ரல் 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார். ஆனால் அன்றும் அவர்கள் ஆஜராகவில்லை. மே 19ஆம் தேதி அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போதும் ஜெயாவும் சசியும் ஆஜராகவில்லை.

ஜூன் 3ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு ஜூன் 3ஆம் தேதியன்று இந்த வழக்கு, விசார ணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி 9-6-2014 அன்று ஜெயலலிதாவும் சசிகலாவும் நீதிமன்றம் வர வேண்டுமென்று உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. நீதிபதி தெட்சிணாமூர்த்தி அவர்கள் ஜூன் 30ஆம் தேதி ஜெயலலிதாவும் சசிகலாவும் கண்டிப்பாக விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார்.

அலட்சியம்:

அந்த உத்தரவாவது நடைமுறைக்கு வந்ததா என்றால் இல்லை. இப்படியெல்லாம் நீதிமன்ற உத்தரவுகளை அலட்சி யப்படுத்தியவர்தான் ஜெயலலிதா. 30-6-2014 அன்று எழும்பூர் 1வது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர் பிரைசஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு வருமான வரித் துறையிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அது வருமான வரித் துறையில் நிலுவையில் உள்ளதாகவும், எனவே விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்றும் கோரினார்கள். வழக்கு விசார ணையை ஜூலை 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த வழக்கு பற்றி மேலும் ஒரு தகவலைக் கூறவேண்டுமேயானால், 1998ஆம் ஆண்டிலேயே, அப்போது மத்திய அரசிலே பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆட்சியில் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க. தலைவி, இந்த வருமான வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சி மேற்கொண்டது பற்றி, 15-7-1998 அன்றே "ஸ்டேட்ஸ்மேன்" நாளேடு வெளியிட்ட ஒரு செய்தியில், "மத்திய அரசுடன் ஜெயலலிதா செய்து கொண்டுள்ள தற்காலிக சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து, அவர்மீது உள்ள வருமான வரி மற்றும் இதர வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க பா.ஜ.க. அரசு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை மேற்பார்வை யிட்டு வந்த ஆணையாளர் எஸ்.சி. ஜாதவ் மும்பையில் சிறந்த பதவி எனக் கருதப்படும் ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய பதவியை கே. கோபாலன் என்பவர் ஏற்றுக் கொண்டார்.

நேர்மையுடன் செயல்படக் கூடியவரான பி.கே. ஸ்ரீதரன் வேறு ஒரு முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு என்.பி. திரிபாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாறுதல்கள் மூலம் ஜெயலலிதாவும், சசிகலாவும் அவருடைய உறவினர்களும் ஒரு தற்காலிக விடுதலையை அடையக்கூடும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஜெயலலிதாவை சமாதானப்படுத்தியதன் மூலம் பா.ஜ.க. அரசு தனக்குத் தேவையான ஆதரவைப் பெற்றது. அதற்குப் பதிலாக தமிழ்நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளனர்" என்று எழுதியிருந்தது.

சுதேசி சீர்திருத்தவாதியின் வாக்குமூலம்:

இன்னும் சொல்லப்போனால், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து, மத்திய ஆட்சியில் இருந்த போது, நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா அவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தின் பெயர் "சுதேசி சீர்திருத்தவாதியின் வாக்குமூலம்''.

அந்த நூலில் பக்கம் 226இல், "சென்னையில் காலையில் என்னுடைய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், நான் ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றேன். நல்லவேளையாக அங்கே எந்த புகைப்படக்காரரும் காத்திருக்க வில்லை. ஜெயலலிதா இருந்த அறைக்கு நான் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவு அருந்தினோம். மூன்று பேர் மட்டுமே சாப்பிட்டோம் - ஜெயலலிதா, திலிப் ரே (நிலக்கரித் துறை இணை அமைச்சர்), நான். சாப்பாடு நன்றாக இருந்தது.

நான் புறப்படும்போது என்னிடம் ஜெயலலிதா ஒரு கவரைக் கொடுத்தார். பிறகு நான் அதனைத் திறந்து பார்த்த போது அவருடைய வருமான வரி வழக்குகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. சில நாட்கள் கழித்து நான் பிரதமரைச் சந்தித்தேன்.

சென்னையில் ஜெயலலிதாவுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் ஜெயலலிதா கொடுத்த கவர் பற்றி சொல்ல மறந்து விட்டேன். அப்போது பிரதமர் (வாஜ்பாய்) "ஜெயலலிதா கொடுத்த கவரில் என்ன விஷயங்கள் இருந்தன?" என்றார்.

நான் திடுக்கிட்டுப் போனேன். நாட்டில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள பிரதமர் நினைத்தால் அது முடியுமென்பதை நான் அறிந்துகொண்டேன்." இவ்வாறு யஷ்வந்த் சின்கா, முன்னாள் மத்திய நிதியமைச்சர், தான் எழுதிய நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.

இது 1998இல் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணியில் அங்கம் வகித்த போது நடைபெற்ற ஒரு சம்பவம். அதுவும் வருமான வரி வழக்கு குறித்த சம்பவம். அப்போது மத்திய நிதி அமைச்சரை ஜெயலலிதா அவருடைய வீட்டிற்கே அழைத்து உணவளித்து பரிந்துரை கவரையும் கொடுத்தார் என்பதை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களே தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி ஆட்சியில்...

தற்போது என்ன நிலை? இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த போது,அவரை வரவேற்கச் செல்லாத தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்கிறார், வழி அனுப்புகிறார். பதினைந்து நிமிடம் தனித்து உரையாடுகிறார். அதற்குப் பிறகுதான் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு கொடுத்து, அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

வருமான வரித்துறை வழக்கறிஞரும் அதற்கு எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பேட்டி அளிக்கிறார்.

இப்படியெல்லாம் 17 ஆண்டுகாலம் பயணம் செய்த இந்த வழக்கில்தான் - தற்போது வருமான வரி சட்ட விதிகளின்படி, தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி கட்டணத்தை அபராதத்துடன் சேர்த்து செலுத்துவதற்கு தயாராக உள்ளதாக வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரலுக்கு ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் மனு கொடுக்கப்பட்டு, அந்த மனுவைப் பரிசீலித்து வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரல் அதை ஏற்றுக் கொண்டு விட்டாராம்.

இந்த வழக்கு 1ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி என்ன காரணத்தாலோ (?) விடுப்பு எடுத்துள்ளதால், அவர் வரவில்லையாம். அப்போது ஜெயலலிதா தரப்பினரின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில், "ஜெயலலிதா, சசிகலா, சசி எண்டர் பிரைசஸ் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 1990-91ஆம் ஆண்டுகளுக்கு 75 இலட்சத்து 33 ஆயிரத்து 330 ரூபாயும், 1992-93ஆம் ஆண்டு களுக்கு 65 இலட்சத்து 67 ஆயிரத்து 872 ரூபாயும் அபராதத்துடன் வருமான வரிக் கட்டணத்தைச் செலுத்தி விட்டது. அதுபோல் ஜெயலலிதா 30 இலட்சத்து 83 ஆயிரத்து 887 ரூபாயும், சசிகலா 28 இலட்சத்து 7 ஆயிரத்து 972 ரூபாயும் செலுத்தி விட்டார்கள். ஆக மொத்தம் 1 கோடியே 44 இலட்சத்து 43 ஆயிரத்து 61 ரூபாயும் செலுத்தப்பட் டுள்ளது. இதற்கான இறுதி உத்தரவினை வருமான வரித்துறை பிறப்பிக்கவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராகத் தேவையில்லை. இந்த வழக்கை 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறே வழக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடிவடையப் போவதாக ஏடுகள் எல்லாம் எழுதியுள்ளன. இந்த நேரத்தில் நமக்கும் - நாட்டு மக்களுக்கும் இந்த வழக்கு பற்றி எழுந்துள்ள சில கேள்விகள் - 17 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று; அதற்காக பல்வேறு நீதிமன்றங்களும், நீதியரசர்களும், அரசும்,வழக்கறிஞர்களும், நீதிமன்ற அலுவலர்களும் பல மணி நேரத்தை இந்த வழக்குக்காகச் செலவிட்ட தற்கு யார் பொறுப்பாளி? அவ்வாறு இவர்களது நேரத்தை வீணடித்தவர்களுக்கு தண்டனை வெறும் அபராதம்தானா? காசு உள்ளவர்கள் அதைச் செலுத்தி விட்டால் அவர்கள் செய்த குற்றம் எல்லாம் மறக்கப்பட்டுவிடுமா? தற்போது அபராதத்துடன் செலுத்திய தொகையை 17 ஆண்டுகளுக்கு முன்பே செலுத்தியிருந்தால், இத்தனை பேருடைய உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்காது அல்லவா? இந்த வழக்கில் இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் என்னவாயிற்று?

இந்த வழக்கிற்காக பல்வேறு பத்திரிகையாளர்கள் செலவிட்ட நேரம் எவ்வளவு? 1998ஆம் ஆண்டில் மத்தியில் இதே பா.ஜ.க. அரசு நடைபெற்ற போது, இந்த வருமான வரி வழக்கினைத் திரும்பப் பெறச் செய்ய முயற்சி நடைபெற்றதாக ஏடுகளிலே செய்தி வந்ததே, அதுபோன்ற நடவடிக்கை இப்போதும் எடுக்கப்பட்ட தாக பலரும் கருதினால் அது தவறா? இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க ஜெயலலிதா தரப்பினர் கீழ் கோர்ட்டிலும், பிறகு உயர் நீதிமன்றத் திலும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து மனுக்களைத் தாக்கல் செய்தனரே, அதற்குப் பதிலாக அப்போதே வருமான வரித் துறையினரிடம் அபராதத் தொகையை கட்டுவதாக கூறியிருக்கலாம் அல்லவா?

நீதிபதி பல முறை, நீதிமன்றத்திலே ஜெயலலிதா ஆஜர் ஆக வேண்டுமென்று வலியுறுத்திய போதிலும், அவர் ஆஜராகாமல் இருந்தது பற்றி, தே.மு.தி.க. தலைவர் குடியரசுத் தலைவருக்கும்,பிரதமருக்கும் - சராசரி இந்தியக் குடிமகன் ஒருவர் இவ்வாறு செயல்பட்டிருக்க முடியுமா என்றும், ஜெயலலிதா வருமான வரித் துறைக்கு இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு விடுத்துள்ள வேண்டுகோளை வருமான வரித் துறை ஏற்கலாமா என்றும் கடிதம் எழுதியிருந்தாரே, அந்தக்கடிதங்கள் என்னவாயின? இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்ற வேண்டுகோளை நீதிமன்றங்கள் 2006ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த போதே, ஜெயலலிதா

வருமான வரித் துறையோடு சமரசம் செய்து கொள்வதற்கு மனு செய்திருக்கலாம் அல்லவா? அப்போது மத்தியிலே அவருடைய கோரிக்கையைக் கேட்கின்ற அரசு இல்லை என்ற காரணத்தால், அப்போது இந்த வேண்டுகோளை வைக்கவில்லையா?

17 ஆண்டு கால வழக்கு:

ஜெயலலிதா தரப்பினர் இப்போது அபராதத் தொகையைக் கட்டியிருக்கிறார்கள் என்றால், தாங்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர் என்றுதானே பொருள்! ஜெயலலிதாவைப்போல வேறு யாராவது 17 ஆண்டுக் காலம் வழக்கை நடத்தி தீர்ப்பு வெளியிடப்படவுள்ள நேரத்தில், தப்பிக்க வேறு வழியில்லாமல், அபராதத் தொகையை தானே கட்டி விடுவதாகக் கூறினால், அதனை வருமான வரித் துறை ஏற்றுக் கொள்ளுமா?

ஜெயலலிதா சமாதானமாகச் செல்லாமல் நீதிமன்றம் தண்டனை விதித்திருக்குமானால், வரி ஏய்ப்புத் தொகை ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அபராதத்துடன் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள், அதிகப்பட்சம் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்கவே ஜெயலலிதா தரப்பினர் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து வருமான வரித் துறையுடன் சமரசம் கண்டு விட்டாரோ என்றும் கூறுகிறார்கள். எப்படியோ வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஏற்கப்படாத வேண்டுகோள், மோடி பிரதமராக இருக்கும்போது ஏற்கப்பட்டு விட்டதோ என்ற அய்யப்பாடு எல்லோரின் மனத்திலும் எழுந்துள்ளது!''

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has accused central government for accepting Jayalalitha's demands in income tax case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X