For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் மக்கள் என்ன ஆனால் என்ன... தமிழக அரசுக்கு அக்கறையில்லை: மு.க.ஸ்டாலின் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ளத்தில் மக்கள் எப்படி போனால் என்ன என்று தமிழக அரசு அக்கறையின்மையோடு நடந்து கொள்ளும் வகையில், பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைக்க இரண்டு மாத கால அவகாசம் உயர்நீதிமன்றத்தில் கேட்டிருப்பது அதன் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

M.K. Stalin demands to form Advisory Panel for disaster management

தமிழக அரசு, "பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைக்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான முதல் அமர்வு, தாமாகவே முன் வந்து விசாரித்து, 15 தினங்களுக்குள் பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழுவை நியமியுங்கள் என்று பிறப்பித்த உத்தரவிற்கு அதிமுக அரசு இப்படி கால அவகாசம் கேட்டிருப்பது மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் கடமையிலிருந்து விலகிக் கொள்ளும் மனப்பான்மையைக் காட்டுகிறது.

2015 ஆம் வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும், காவேரி டெல்டா மாவட்டங்களும் கன மழையால் பாதிப்புக்குள்ளானது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1.12.2015 அன்று திடீரென்று தண்ணீர் திறந்து விட்டதால் சென்னை மாநகரம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பெருந் துயரத்தையும், துன்பத்தையும் சந்திக்க நேர்ந்தது. தமிழக அரசு அப்போது வெளியிட்ட புள்ளி விவரங்களின் படியே 3 லட்சத்து 82 ஆயிரத்து 768 ஹெக்டேர் நிலங்களில் உள்ள விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகள் சேதமடைந்தன. 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகள் மழை வெள்ள நீரால் சூழப்பட்டன.

டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரையிலான ஐந்து தினங்கள் சென்னை விமான நிலையமே மூடப்பட்டது. எண்ணற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 347-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். சென்ற வட கிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட இழப்பு என்று மத்திய அரசிடம் 25 ஆயிரத்து 912 ரூபாய் நிதியை தமிழக அரசு கேட்டது. கடந்த வருடம் மழை வெள்ளத்தால் பொதுமக்களுக்கும், மாநிலத்திற்கும் ஏற்பட்ட வரலாறு காணாத இழப்புகளையும், பாதிப்புகளையும் அதிமுக அரசும், முதலமைச்சரும் நிச்சயம் மறந்திருக்க முடியாது.

வட கிழக்கு பருவ மழை குறித்து வானிலை ஆய்வு மையம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியே முன்னறிவிப்பாக செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. இது போன்ற பருவ மழையின் போது ஏற்படும் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சமாளிக்கக் கூடிய வழிகாட்டுதல்கள் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படி ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி மாநில அளவில் முதலமைச்சர் தலைமையில் "மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்", மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் "மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்" ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இருக்கிறதா, அந்த ஆணையங்கள் எல்லாம் இந்த பருவ மழை குறித்து ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனவா என்பதே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கேள்விக்குறியாக இருக்கிறது.

மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள் தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்து விவாதிக்கக் கூட்டங்கள் நடைபெற்றதாக பத்திரிக்கைச் செய்திகள் கூட வெளியாகவில்லை. ஆகவே தமிழகத்தைப் பொறுத்தவரை, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மட்டுமல்ல- மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையமும் செயலிழந்து விட்ட அவலம் தான் நீடிக்கிறது.

அவ்வப்போது ஏற்படும் இயற்கை பேரிடர்களை சமாளிக்க, "தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2016", ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான "மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை திட்டம்" இன்னும் தயாரிக்கப்படவும் இல்லை, அதை வெளியிடவும் இல்லை. இத்தனைக்கும் "பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு", அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாமல், கூடுதலாக இரண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்கும் அதிமுக அரசின் அலட்சியமான போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பதுதான் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னறிவிப்பு. அப்படி இருக்கையில் இந்த ஆலோசனைக் குழுவை அமைக்க அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்கள், கால அவகாசம் கோரியிருப்பதைப் பார்த்தால், இந்த பருவ மழை காலத்திலும் முறையான, உருப்படியான பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு விரும்பவில்லை என்பதும், மக்களின் பாதுகாப்பு எப்படிப் போனால் நமக்கு என்ன என்ற அக்கறையற்ற தன்மையும் அதிமுக அரசுக்கு ஏற்பட்டிருப்பதும் வெளியாகி வேதனையை ஏற்படுத்துகிறது.

கடந்த பருவ மழையின் போது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள், மீனவர்களுக்கு நேர்ந்த பேரிழப்புகள் என்று எதைப் பற்றியும் அதிமுக அரசு கவலைப்படவில்லை. வெற்று அறிவிப்புகளும், அரசு பணத்தில் விளம்பரங்களும் மட்டுமே ஆட்சி செய்யும் முறை என்ற மனப்பான்மையில் அதிமுக அரசு செயல்படுகிறது. ஆகவே, வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை செய்ய மறுக்கும் அதிமுக அரசின் செயலுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்நீதிமன்றம் போடும் உத்தரவுகளுக்கு எல்லாம் "வாய்தா" வாங்குவதிலேயே வழக்கம் போல் நேரத்தைக் கழிக்காமல், "பேரிடர் மேலாண்மைத் திட்டப் பணிகளில்" உரிய கவனம் செலுத்தி, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
The leader of opposition M.K. Stalin demanded to form Advisory Panel on disaster management.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X