For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்கள் போராட்டம் முற்றுகிறது: 6 லட்சம் பேர் கைது - இன்று முதல் காத்திருப்பு போராட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் தமிழக அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.

Taminadu govt employees, teachers continue indefinite strike

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்கிழமையன்று சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் கைதாகி சிறை சென்றனர். 8வது நாளான நேற்று சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபை நடைபெறும் இந்த நேரத்தில் அரசு ஊழியர்களின் போராட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 லட்சம் அரசு ஊழியர்களுடன் 2 லட்சம் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் அரசு துறை பணிகள் கடுமையாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த் துறை, வளர்ச்சித்துறை, வணிக வரித்துறை போன்ற துறைகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. நேற்று முதல் மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகிறார்கள்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டப்படி டிஎம்எஸ் வளாகம் முழுவதும் பேரணியாக சென்றனர்.

Taminadu govt employees, teachers continue indefinite strike

சென்னையில் போராட்டம்

அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்ததால் டிஎம்எஸ் வளாகத்தின் நுழைவுவாயிலை மூடி 2 அடுக்குகளாக பேரிகாட் அமைத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புகாக நின்றனர். இதையடுத்து, பேரணியாக வந்த அரசு ஊழியர்கள் அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட டிஎம்எஸ் நுழைவு வாயில் வரை வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

தடுக்கும் போலீஸ்

அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார் தயார் நிலையில் இருந்த பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.

6 லட்சம் பேர் கைது

தமிழகம் முழுவதும் நேற்று 100 தாலுகா அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் என 6 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதே போல், நீதித்துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட சுமார் 12 ஆயிரம் பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மதுரை, தேனி

மதுரை பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேனி பேருந்து நிலையம் அருகில் தேனி மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் முகம்மது அலி ஜின்னா, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் பழனிராஜ், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுருளிப்பட்டி சிவாஜி உள்பட நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் சாலையில் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மோதல், கைகலப்பு

இவர்கள் அரசு ஊழியர்களுடன் இணைந்து நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பல இடங்களில் போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே கை கலப்பும், மோதலும் ஏற்பட்டது.

கொந்தளிப்பு

மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு வழக்கம்போல, இந்த போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.6, 500 கோடி பாதிப்பு

வணிக வரித்துறை ஊழியர்கள் தொடர்ந்து 15 நாட்களாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொடர் போராட்டத்தால் அரசுக்கு சுமார் ரூ. 6,500 கோடி வரிவசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இழுத்து மூடும் போராட்டம்

இந்தநிலையில், அரசு தரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் முறையாக வரி செலுத்தியுள்ளதா என்று ஆய்வு செய்யும் 30க்கும் மேற்பட்ட சோதனை சாவடி மற்றும் சோதனை நிலையங்களை இழுத்து மூடும் போராட்டத்தில் இன்று ஈடுபட போவதாக வணிக வரித்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

காத்திருப்பு போராட்டம்

திருவல்லிக்கேணியில் உள்ள சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி, வியாழக்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அரசுக்கு நெருக்கடி

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது ஓரிரு தினங்களில் நிறைவேற்றுவதாக கூறினார்கள். அவர்கள் கூறி ஒரு வாரத்திற்கு மேலாகிறது. ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. எங்களுடைய கோரிக்கைகளை அரசாணையாக வெளியிடும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அரசு ஊழியர்கள் கூறியுள்ளதால் அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.

English summary
The government employees affiliated to Tamil Nadu Government Employees’ Association continued with their indefinite strike. The agitators assembled at the Collectorate and expressed disappointment over the non-announcement of their demands being met in the ongoing Assembly session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X