For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் ஓராண்டு ஆட்சி.. “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி”.. வேதனை மாறும் என ஸ்டாலின் உறுதி

அதிமுகவின் ஓராண்டு ஆட்சியில் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று மக்கள் குமுறுவதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் என்றும் ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கண்டெய்னர் பணம்

கண்டெய்னர் பணம்

கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட இலஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் ‘புலப்படாமல்' போனதால் கடந்த ஓராண்டுக்கு முன்- 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அப்படியும்கூட தி.மு.கழகத்தின் வாக்குகளையும், பெருகி வந்த ஆதரவையும் ஆளுந்தரப்பின் அதிகாரக் கரங்களால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை. இதயத்தின் கட்டளையை ஏற்று, மக்களின் விரல்கள் அளித்த தீர்ப்பின்படி தி.மு.கழகம் தனிப்பட்ட முறையில் 89 இடங்களிலும் தோழமைக் கட்சிகளுடன் சேர்த்து 98 இடங்களிலும் வெற்றி பெற்று, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை காணாத வலிமைமிக்க எதிர்க்கட்சியாகத் தனது கடமைகளைச் செய்து வருகிறது.

அதிமுகவின் அதிர்ச்சி வெற்றி

அதிமுகவின் அதிர்ச்சி வெற்றி

அதிகார பலத்தால் வென்ற அ.தி.மு.க.வுக்கும், அநியாயமாக வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1% தான். அதனால்தான், மக்களின் தீர்ப்புக்கு எதிரான ஜனநாயக முடிவு என்று அப்போதே நாம் குறிப்பிட்டோம். ஏன் வாக்களித்த மக்களே கூட எப்படி அதிமுக வெற்றி பெற்றது என்று அதிர்ச்சியடைந்து போனார்கள்.

5 ஆண்டின் அவலம்

5 ஆண்டின் அவலம்

அ.தி.மு.க.வினர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டு மே 22 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடத்தில் மூன்று முதலமைச்சர்கள். ஒரு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது என்றாலும், இரு முதல்வர்கள் மாற்றம் ‘அதிகாரவெறி' யால் ஏற்பட்ட மாற்றம். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் கடைசி இடம் என்பதும், முன்னிலை பெற்றிருந்த துறைகளிலும் இமாலய ஊழல் என்பதுமே இந்த ஆட்சியின் வேதனைமிகுந்த சாதனையாக இருக்கிறது. இது இந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்ததல்ல, ஜெயலலிதா அம்மையார் ஆட்சி செய்த 5 ஆண்டுகளிலும் இதே அவல நிலைதான்.

கஜனா காலி

கஜனா காலி

அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழக அரசின் நேரடி கடன் சுமை 3 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதுபோக, மின்துறை உள்ளிட்ட பிற துறைகளின் மறைமுக கடன் சுமைகளையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி என்கிற அளவிற்கு, தமிழ்நாடே திவாலாகும் நிலையில்தான் அரசாங்கத்தின் கஜானா காலியாகி உள்ளது. எவ்விதத் திறனுமற்ற நிர்வாகத்தின் இயல்பான விளைவுதான் இது என்பது எளிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. மதுபான வருமானத்திற்காக எந்த அவமானத்தையும் ஏற்கும் மதிமயக்கமும் மனோபாவமும் கொண்ட அரசுதான் 6 ஆண்டுகாலமாக நம்மை ஆட்சி செய்து வருகிறது.

பட்டினிக் கொடுமை

பட்டினிக் கொடுமை

வாக்களித்த மக்களின் அடிப்படைத் தேவை உணவும் குடிநீரும்தான். அதைக்கூட உறுதி செய்ய முடியாத கையாலாகாத ஆட்சியை தமிழகம் சந்தித்துச் சகித்துக் கொண்டிருக்கிறது. பொதுவிநியோகத் திட்டம் என்றால் தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று தி.மு.கழக ஆட்சியின்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆனால் இன்று அந்தத் திட்டம் சீரழிக்கப்பட்டு, நியாய விலைக்கடைகளில் பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை, சர்க்கரை இல்லை, தரமான அரிசி இல்லை என்கிற நிலை உருவாகி, ஏழை மக்களை பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

குடிநீர் திட்டம்

குடிநீர் திட்டம்

ஒவ்வொரு வீட்டுக்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம் என்று 2011ல் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. ஆள்வோரின் அலட்சியப் போக்கினால், தமிழகம் முழுவதும் காலிக் குடங்களுடன் பெண்கள் ஆவேசத்துடன் வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலையைக் காண்கிறோம். தவித்த வாய்க்குத் தண்ணீர் தரமுடியாத அரசாக அ.தி.மு.க அரசு இருக்கிறது. ஒரு மெகா குடிநீர் திட்டத்தைக் கூட உருப்படியாக நிறைவேற்றாமல், கழக அரசு கொண்டு வந்த நதி நீர் திட்டங்களையும் முடக்கி வைத்து இன்றைக்கு தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள்.

தாதுமணல் கொள்ளை

தாதுமணல் கொள்ளை

ஆற்று மணலில் தொடங்கி தாது மணல், சவுடு மணல், கிரானைட் உள்பட அனைத்து கனிமவளங்களும் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளை அடிக்கப்படுவதை நீதிமன்றமே பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது, அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் இந்த ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. புதிய தாதுமணல் கொள்கை வகுக்கப் போகிறோம் என்றவர்கள் இப்போது அதை வசதியாக மறந்துவிட்டு, தாது மணல் கொள்ளை குறித்த விசாரணை அறிக்கையையும் கிடப்பில் போட்டு விட்டார்கள்.

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை

இயற்கை வளங்கள் கொள்ளை போனதால் விவசாயிகளின் வாழ்வு தரிசு நிலமாக மாறிவிட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனம் வெதும்பி, தற்கொலையாலும் அதிர்ச்சி மரணங்களாலும் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களின் உயிரிழப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் கூட கொச்சைப்படுத்திய இரக்கமற்ற ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஹிட்லரிசத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது. நிர்வாக செயலற்ற - மக்கள் விரோத கொடுங்கோல் அ.தி.மு.க. அரசிடம் முறையிட்டுப் பயனில்லை என்ற நிலையில், தமிழக விவசாயிகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை நடத்தி, நிர்வாணமாக ஓட வேண்டிய அவலத்திற்குள்ளானதை மறக்கமுடியுமா? உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கும் அநீதி அதிமுக ஆட்சியில் நிலவுகிறது.

படுபாதாளம்

படுபாதாளம்

விவசாயிகள் மட்டுமல்ல, போக்குவரத்தும் தொழிலாளர்கள் தொடங்கி அனைத்துவகைத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வுடனும் இந்த அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது தொழில் முதலீடுகள். ஆனால் 6 ஆண்டுகாலமாக தமிழகத்தின் தொழில்முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளன. வர விரும்பிய தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்குத் திரும்பி விட்டன. இருந்த தொழிற்சாலைகள் "விட்டால் போதும்" என்று வேகமாக வெளியேறி விட்டன.

ஏட்டுத் சுரைக்காய்

ஏட்டுத் சுரைக்காய்

அம்மையார் ஜெயலலிதா விஷன் 2023 எனும் தொலைநோக்குத் திட்டத்திற்கான கையேட்டினை வெளியிட்டார். அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது. அதுபோல அவர் காலதாமதமாக நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 42ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் 10% முதலீடு கூட தமிழகத்திற்கு வரவில்லை. எவ்வித உள்கட்டமைப்பு வசதியையும் உருவாக்கித் தராத அ.தி.மு.க அரசை நம்பி தமிழகத்திற்கு வருவதற்கு உள்நாட்டு - வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை.

வேலைவாய்ப்பில்லை

வேலைவாய்ப்பில்லை

தி.மு.கழக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்காகத் தமிழகத்தில் காட்டப்பட்ட அக்கறையை நம்பி வரக்கூடிய ஒன்றிரண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கேட்கும் லஞ்சத் தொகையைக் கண்டு மிரண்டு, அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் எடுக்கக்கூடிய மோசமான நிலையில்தான தமிழகம் இருக்கிறது. கியா மோட்டார் தொழிற்சாலையும் சிண்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுகள். ஆகவே புதிய முதலீடுகளும் இல்லை. புதிய தொழிற்சாலைகளும் வரவில்லை: புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை என்ற நிலையில் இன்றைய அதிமுக அரசு ஆட்சி செய்கிறது.

வக்கற்ற அரசாங்கம்

வக்கற்ற அரசாங்கம்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று புகழப்பட்ட தமிழகத்தில் தற்போது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களும் துணைவேந்தர்களின் கையெழுத்தின்றி நடைபெறக்கூடிய அவலத்தில் உள்ளது. மூன்று பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி வருடக் கணக்கில் காலியாக இருக்கிறது. உயர்கல்வியிலிருந்து பள்ளிக்கல்வி வரை அனைத்திலும் ஊழல் முடைநாற்றம் வீசுகிறது. தமிழகத்தின் கிராமப்புற, ஏழை மாணவர்களைப் பாதிக்கக்கூடிய நீட் தேர்விலிருந்து அவர்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசாங்கம் நடைபெறுகிறது.

ஆசிரியர் நியமனத்தில் லஞ்சம்

ஆசிரியர் நியமனத்தில் லஞ்சம்

ஆசிரியர் நியமனங்களில் லஞ்சம் விளையாடுகிறது. அரசுப் பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கான உறுப்பினர்கள் நியமனத்திலேயே ஆளுங்கட்சி எந்தளவு நேர்மையற்ற முறையில் செயல்பட்டது என்பதை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டி அந்த நியமனங்களை ரத்து செய்திருப்பது இந்த ஆட்சியின் லட்சணத்தை எடுத்துக்காட்டும் சான்றிதழாகும். திருந்தாத அரசு திரும்பவும் அரசு தேர்வாணையத்தை அதிமுக தலைமைக் கழகமாக மாற்றவே துடிக்கிறது. மின்வாரிய ஊழியர் நியமனத்திற்கானத் தேர்வினை நட்சத்திர ஓட்டலில் நடத்தி, லஞ்ச பேரத்தை வெளிப்படையாக நடத்தியது அ.தி.மு.க அரசு.

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

கடந்த ஆறாண்டுகளாக தமிழகத்தில் வழிப்பறி தொடங்கி கொலை - கொள்ளை - பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே உள்ளன. குறிப்பாக, வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் - முதியோர் ஆகியோரின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் பெண்களையும் இளைஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி, கைது செய்யும் ஏவல்துறையாக மாறியுள்ளது. ஆறு வருடமாக மாலுமி இல்லாத கப்பலாக தமிழக காவல்துறை தரை தட்டி நிற்கிறது.

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாத காரணத்தினால், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்நிலையில், அமைச்சர்களும் ஆளுங்கட்சியினரும் ஊழல் விளையாட்டில் புகுந்து போட்டிப்போட்டுக் கொண்டு விளையாடுவது குறித்து வெளிப்படையான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஊழலை ஓழிக்கும் 'லோக் அயுக்தா' அமைப்பைக் கொண்டு வர அஞ்சி நடுங்குகிறார்கள். வருமானவரித்துறையின் சோதனைக்குப் பதவியில் இருக்கும் அமைச்சர்களே ஆளாகின்றனர். அதைவிடக் கேவலமாக, தமிழகத்தின் தலைமைச் செயலகத்திலேயே துணை ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

காட்சிப் பொருள்

காட்சிப் பொருள்

மாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலித்த மண்ணில், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப பொம்மைகளாக ஆடுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள். மடியில் கனம் இருப்பதால் அவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு தமிழக நலன்கள் பாதிக்கப்படுகிறது. வெள்ளம், வர்தா புயல், வறட்சி என எதற்கும் மத்திய அரசிடம் கேட்ட நிதியைப் பெற முடியாத கையாலாகாத ஆட்சி ஒரு 'காட்சிப் பொருளாகவே' இருக்கிறது.

கல்நெஞ்சம் கொண்ட ஆட்சி

கல்நெஞ்சம் கொண்ட ஆட்சி

2011, 2016 ஆகிய இரு அதிமுக தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, இல்லத்தரசிகளுக்குக் கைபேசி, நதிகள் இணைப்பு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை பெருக்குவது போன்ற 'வாக்குறுதிகள்' இன்று அதிமுக ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 110 அறிவிப்புகள் தூசுபடிந்து தூங்குகின்றன. நிதி நிலை அறிவிப்புகள் நிம்மதியாக குறட்டை விட்டு படுத்திருக்கின்றன. மான்யக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெற சட்டமன்றத்தைக் கூட கூட்டாமல் ஜனநாயகத்தின் குரல்வளையில் காலை வைத்து மிதிக்கும் கல்நெஞ்சம் கொண்ட ஆட்சி நடக்கிறது.

சரணாகதி

சரணாகதி

ஊழல் நாற்றம் வீசும் செயலற்ற - சரணாகதி அரசின் பிடியில் தமிழகம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கப்போகிறது என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் ஒலிக்கிறது. ஓராண்டுக்கு முன் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களும் கூட, தமிழகத்தில் எப்போது ஆட்சிமாற்றம் வரும் என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் படும் இன்னல்களை நீக்க மனச்சாட்சி இல்லாமல் இருக்கிறது அதிமுக ஆட்சி.

நம் இனம் நம் மக்கள்

நம் இனம் நம் மக்கள்

அதனால்தான் வலிமைமிகுந்த எதிர்க்கட்சியான தி.மு.கழகம் களத்தில் இறங்கி மக்களின் துணையுடன் நீர்நிலைகளைப் பராமரித்தல், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல், அரசுப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆய்வு செய்து விரைவுபடுத்துதல் என மக்களின் உற்ற நண்பனாகச் செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி செய்ய மறந்ததை ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது. "நம் மக்கள். நம் இனம்" என்ற உணர்வுடன் தமிழக மக்களுக்கான இந்தப் பணிகள் தொடர வேண்டும்.

சோதனை

சோதனை

ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும். ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். எம் மக்களுடன் இணைந்து நின்று தி.மு.கழகம் எத்திசையிலும் வெல்லும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
The regime in Tamil Nadu will change soon, says The opposition leader M K Stalin today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X