For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடை கொடு எங்கள் நாடே... புலம் பெயர் தமிழரின் மனதுக்கு ஆறுதல் தந்த எம்எஸ்வி குரல்!

By Shankar
Google Oneindia Tamil News

எம்எஸ்வியின் குரலுக்கு தனி மகத்துவமும் ஈர்ப்பும் உண்டு. யாரும் அத்தனை சுலபத்தில் தொட்டுவிட முடியாத உச்சஸ்தாயியில் பாடக்கூடிய வல்லமை பெற்றவர் எம்எஸ்வி.

அவர் பாடிய சில பாடல்களை, வேறு தொழில் முறைப் பாடகர்களால் கூட அத்தனை லகுவாகப் பாட முடியாது.

ஆனால் ஆரம்ப நாட்களில் பாடுவதில் அவர் நாட்டம் காட்டவில்லை. அவரது குரலின் வல்லமையைக் கண்ட டிகே ராமமூர்த்தி, பாடச் சொல்லி உற்சாகப்படுத்துவாராம்.

"எம்.எஸ்.விக்கு மைக் வாய்ஸ் உண்டு. அதனால் அவரை நான் உற்சாகப்படுத்தி பாட வைப்பேன். என்னையும் பாடு என்பார். எனக்கு மைக் வாய்ஸ் கிடையாது... அது எனக்கே தெரியும். அதனால் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்வேன்," என்று ஒரு முறை கூறியுள்ளார் டிகே ராமமூர்த்தி.

எம்எஸ்வி பாடிய அனைத்துப் பாடல்களுமே அந்தச் சூழலை முன்னிறுத்திப் பாடப்பட்டவைதான்.

அப்படி வந்த சில பாடல்கள்...

பயணம் பயணம்.. (பயணம்)

பயணம் பயணம்.. (பயணம்)

பயணம் பயணம்
பத்து மாத சித்திரமொன்று ஜனனம்.. என்று பிறப்பில் ஆரம்பிக்கும் அந்த பாடல் வரிகள், மனித வாழ்க்கையை முழுமையாகச் சொல்லும்.

இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ... என்பது அந்தப் பாடலின் அடிநாதமாக ஒலிக்கும். இறைவனை எவர் வெல்லுவார்!

கண்டதைச் சொல்லுகிறேன்... (சில நேரங்களில் சில மனிதர்கள்)

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் படமானபோது, அதில் இடம்பெற்ற பாடல் இது. அந்த கதைச் சூழலை அற்புதமாகக் குரலில் கொண்டு வந்திருப்பார்.

எதற்கும் ஒரு காலம் உண்டு... (சிவகாமியின் செல்வன்)

எதற்கும் ஒரு காலம் உண்டு... (சிவகாமியின் செல்வன்)

இந்தியில் வெளியான ஆராதனா படத்தின் தமிழ் ரீமேக்கான சிவகாமியின் செல்வனில் இடம்பெற்ற இணையற்ற பாடல் இது. ஒருமுறை கேட்டு முடித்ததும் நம் மனதின் பாரத்தை கடவுளிடம் கொண்டு போய்ச் சேர்த்திருப்பார்கள் கவியரசரும் இசையரசரும்!

ஆராதனாவில் இதே சூழலுக்கு எஸ்டி பர்மன் பாடியிருப்பார். அந்தப் பாடலுக்கு சிறந்த பாடகருக்கான விருது அவருக்குக் கிடைத்தது. ஆனால் அதற்கு நிகரான இந்த தமிழ்ப் பாடலை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

நீ நினைத்தால் இந்நேரத்திலே.. (நிலவே நீ சாட்சி)

இது ஒரு லிப்டில் நடக்கும் நெருக்கமான காதல் காட்சிக்கான பாடல் (ஜெய்சங்கர் - கே ஆர் விஜயா). எம்எஸ்வியும் எல் ஆர் ஈஸ்வரியும் குரலில் நம்மை மயக்குவார்கள்.

நீ இல்லாத இடமே இல்லை (முகமது பின் துக்ளக்)

நீ இல்லாத இடமே இல்லை (முகமது பின் துக்ளக்)

சோ எழுதி இயக்கிய முகமது பின் துக்ளக் படத்தில் இடம்பெறும் டைட்டில் பாடல் இது. கவிஞர் வாலி எழுதிய பாடல். இந்துக்களும் கிறித்தவர்களும் கூட உருக்கமாக அனுபவித்த இஸ்லாமிய பாடல் இது.

சொல்லத்தான் நினைக்கிறேன்... (சொல்லத்தான் நினைக்கிறேன்)

சொல்லத்தான் நினைக்கிறேன்... (சொல்லத்தான் நினைக்கிறேன்)

கே பாலச்சந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கிறேன்.. பாடலை எஸ் ஜானகியுடன் பாடியிருப்பார் எம்எஸ்வி. கேட்பவர்களை கிறங்கடிக்க வைக்கும் பாடல். எழுபதுகளில் மிகப் பெரிய ஹிட் இது.

உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)

உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை...

ஜெமினி கணேசன் நடித்த இந்தப் பாடல், முதுமையை எதிர்நோக்கும் ஒவ்வொருவருக்கும் ஆறுதல் சொல்லும் பாடல். இந்தப் படத்துக்கு இசை வி குமார். ஆனால் இந்தப் பாடலுக்கு எம்எஸ்வி குரல் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டுக் கேட்டதால் பாடிக் கொடுத்தார் மெல்லிசை மன்னர்.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை.. (அக்கரைப் பச்சை)

கடல் நீரில் விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்....
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா
காலமிட்ட கட்டளையை மீறுவது எளிதா!!

மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாய்
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்
அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடர்க்கு அக்கரையும் இச்சை

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை...

கண்ணதாசன் எழுதியதை எம்எஸ்வி குரலில் கேட்கும் பரவசத்துக்கு இணையாகுமா!

குடும்பம் ஒரு கதம்பம்... (குடும்பம் ஒரு கதம்பம்)

விசு படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் நடுத்தர, கீழ் நடுத்தர குடும்பங்களின் கதையைச் சொல்லும் அருமையான பாடல்.

எனகொரு காதலி இருக்கின்றாள்... (முத்தான முத்தல்லவோ)

எனக்கொரு காதலி இருக்கின்றாள்.. என்று எம்எஸ்வி தொடங்கும் இந்தப் பாடலை எஸ்பிபி தொடர்வார். ஆனால் எம்எஸ்வி ஆரம்பிக்கும் விதம்... அட்டகாசம். மூன்று சரணங்கள் கொண்ட இந்தப் பாடலில் இரண்டு சரணங்களை எம்எஸ்வி பாடியிருப்பார். அத்தனை இனிமையாக இருக்கும் இந்த காம்பினேஷன்!

மழைத்துளி மழைத்துளி.. (சங்கமம்)

இந்தப் பாடல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் எம்எஸ்வி பாடியது. ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா... என்று கம்பீரமாக ஆரம்பிக்கும்போதே கட்டிப் போடும் எம்எஸ்வி குரல். மகனே வா.. என அவர் அழைக்கும் அந்த பாசக் குரலைக் கேட்பவர்கள் உருகாமல் இருக்க முடியாது.

விடை கொடு எங்கள் நாடே... (கன்னத்தில் முத்தமிட்டால்)

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?

- இந்தப் பாடலைக் கேட்டு கலங்காத உருகாத ஏங்காத தமிழன் யாருமிருக்க முடியாது. அந்தப் பாடலின் சூழல் புரிந்தவர்கள், அனுபவித்தவர்களின் சோகத்தையெல்லாம் குரல் வழியாகக் கொட்டியிருப்பார் எம்எஸ்வி.

மறுமுறை ஒரு முறை பார்போமா?

English summary
Here are some of the unforgettable songs rendered by late MS Viswanathan in the past.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X