For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவின் பால் கலப்படத்தை அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது: விஜயகாந்த்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் பால் கலப்படத்தில் தமிழக அரசு குற்றவாளியை பெயரளவிற்கு வழக்கு போட்டு கைது செய்துள்ளது என்றும், இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், அதிமுக அரசு இதை மூடி மறைக்கப் பார்க்கிறது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலை திருடிய நபர்கள் மீது மட்டுமல்ல, இதற்கு துணை போன அதிகாரிகள் மீதும், வாய்மொழி உத்தரவிட்டதாக சொல்லப்படும் பதவி இழந்த அமைச்சர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் 24.09.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை வழங்குவதாகவும், பால் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சொல்லி வருகிறது. ஆனால் உண்மை நிலை என்ன. நிர்வாக சீர்கேட்டாலும், பல்வேறு முறைகேடுகளாலும் இலாபத்தில் இயங்க வேண்டிய ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயக்குவதாக சொல்லப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு லிட்டர் பாலுக்கு ஆறு ரூபாய் இருபத்தைந்து பைசா உயர்த்தி, ஒரு லிட்டர் ஆவின் பாலை ரூபாய் 24க்கு விற்பனை செய்ய உத்தரவிட்டார்.

குழந்தைகள் முதல், முதியர்கள் வரை எல்லா வயதினரும் தினந்தோறும் பால் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, பால் கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்திற்கு அளிப்பதால் எந்த வகையில் கலப்படம் என்பதே இருக்காது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தமிழக அரசின் ஆவின் பாலை வாங்கி வந்தனர்.

மேலும் தனியார் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பால் தரமானதாக இருக்காது என்று எண்ணியும், பொதுமக்கள் ஆவின் பாலையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தமிழக அரசோ பொதுமக்களின் இந்த நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது.

டேங்கர் லாரி உரிமையாளர்

டேங்கர் லாரி உரிமையாளர்

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு பாலை எடுத்து வருகின்ற டேங்கர் லாரிகளின் உரிமையாளராகவும், ஆவின் பால் லாரி ஒப்பந்ததாரராகவும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் வலம் வந்த அதிமுகவை சார்ந்த வைத்தியநாதன் பல ஆண்டு காலமாக இத்தொழிலை செய்து வருகிறார்.

பல ஆயிரம் கோடி கொள்ளை

பல ஆயிரம் கோடி கொள்ளை

பால் லாரி ஒப்பந்ததாரராக இருந்த வைத்தியநாதன் ஆவின் பால் நிறுவனத்தை அவரது சொந்த நிறுவனம் போல் நடத்தி வந்ததாகவும், அங்கே அவர் வைத்ததுதான் சட்டம் என்பது போலவும் ஆவின் நிறுவனத்தின் அதிகாரிகளெல்லாம் அவரின் கட்டளைக்கு கீழ்படித்துதான் நடப்பார்கள் என்றெல்லாம் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் பல ஆண்டு காலமாக இந்த கலப்பட திருட்டு தொழில் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு பால் எடுத்து வரும் டேங்கர் லாரிகளை தனி இடத்தில் வைத்து, பல ஆயிரம் லிட்டர் பாலை தினந்தோறும் திருடிக்கொண்டு, அதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றி அந்த கலப்பட பால் ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

ரசாயனங்கள் கலப்பு

ரசாயனங்கள் கலப்பு

மேலும் தண்ணீர் அதிகளவில் கலந்துள்ளதை மறைந்திட பல்வேறு ரசாயன பொருட்களை கலந்து தரமற்ற பாலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது. அருந்துவோருக்கு சத்துள்ள உணவாக மாறவேண்டிய பால், எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடாதா.

பால் கலப்படம்

பால் கலப்படம்

ஆளும் கட்சியியான அதிமுகவில் இருக்கிறோம் என்ற தைரியம் தான் வைத்தியநாதனை இதுபோன்ற பால் கலப்படதிருட்டு தொழிலை செய்ய தூண்டுகோலாபக இருந்தது என்றும், அதனால்தான் பொதுமக்கள், குழந்தைகளுக்காகவும், முதியவர்களுக்காகவும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் வாங்கும் பாலில் கலப்படம் செய்கின்ற தைரியம் இந்த நபருக்கு வந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

கண்துடைப்பு நாடகம்

கண்துடைப்பு நாடகம்

தமிழக அரசு பெயரளவிற்கு வழக்கு போட்டு கைது செய்துள்ளது என்றும், இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், அதிமுக அரசு இதை மூடி மறைக்கப் பார்க்கிறது என்றும், பொதுமக்கள் பேசுகிறார்கள். திருடிய நபர்கள் மீது மட்டுமல்ல, இதற்கு துணை போன அதிகாரிகள் மீதும், வாய்மொழி உத்தரவிட்டதாக சொல்லப்படும் பதவி இழந்த அமைச்சர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும்.

நேர்மையான அதிகாரி தலைமையில்

நேர்மையான அதிகாரி தலைமையில்

தமிழக அரசின் நடவடிக்கையில் நம்பிக்கை இல்லாமல்தானே கனிமவள கொள்ளை குறித்த உண்மைகளை வெளிக்கொணர, சென்னை உயர்நீதிமன்றமே ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதுபோல இலஞ்சம், இலாவண்யம் அற்ற நேர்மையான அதிகாரி தலைமையில் குழு அமைத்து ஆவின் பால் திருட்டு மற்றும் கலப்படம் சம்மந்தமாக விசாரணை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற முறைகேடுகள் இனியும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்

குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்

தற்பொழுது நடைபெற்று வரும் காவல் துறையின் விசாரணை திருப்திகரமாகவும் இல்லை. சரியான போக்கில் செல்வதாகவும் தெரியவில்லை. இதனால் குற்றவாளிகள் தப்பிவிடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்து பால் திருட்டிலும், கலப்படத்தின் மூலமும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMDK leader Vijayakanth has charged that the govt is trying to hide the facts in the Aavin milk scandal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X