• search

எங்கே போகிறது இளைய தலைமுறை?

By Hema Vandana
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   சிறுமியை பலாத்காரம் செய்த கயவர்களை கைது செய்யாமல் இருப்பது ஏன்?- வீடியோ

   - வந்தனா ரவீந்திரதாஸ்

   தமிழகத்தில் இம்மாத துவக்கத்திலிருந்து நம்மை சுற்றி நிகழ்ந்த சில சம்பவங்கள் நம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கின்றன. இந்த சம்பவங்கள் ஆங்காங்கே தனித்தனியாக நடந்தாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக இணைத்துப் பார்த்தால்தான் அதன் பயங்கரம் புரியும். நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.

   சென்னையின் பிரபல தாதா தனது பிறந்த நாளை பூந்தமல்லியில் கோலாகலமாக கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 72 ரவுடிகளை சினிமா பாணியில் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், சாலையில் சென்ற மேனகா என்ற பெண்ணிடம் கழுத்திலிருந்த செயினைப் பறிக்க முயன்றதுடன், அப்பெண்ணை தரதரவென்று சாலையில் மிருகத்தனமாக இழுத்துச் சென்றனர்.

   சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் கணவருடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது, பின்புறமாக வந்த மர்மநபர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர். சென்னை ஈசிஆர் சாலையில், ஆந்திர மாநில ஐ.டி. பெண் ஊழியரை இரும்பு கம்பியால் தாக்க, அவரிடமிருந்து 15 சவரன் தங்கநகை, விலைமதிப்புள்ள ஐ-போன் பறிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான அப்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

   விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று 8 வயது தலித் சிறுவனை படுகொலை செய்ததுடன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வன்மம் அரங்கேறியுள்ளது. இத்தகைய சம்பவங்களில் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இந்த கொடுமைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பெரும்பாலோர் இளைஞர்களே என்பதுதான் இங்கு நாம் உற்று நோக்க வேண்டியதாகும்.

   பாழ்படும் பண்புக் கூறுகள்

   பாழ்படும் பண்புக் கூறுகள்

   ஒருபுறம் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து, வாழ்க்கையை அதிநவீனமாக மாற்றி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மனிதனின் பண்புக்கூறுகள் பாழ்பட்டு வருகின்றன. இவர்களது இதயம் இவ்வளவு கெட்டித்துப்போக காரணம் என்ன? இரக்கமற்ற மனசுக்கும் - துணிச்சலான செயல்களுக்கும் காரணமாக இருப்பவை எவை? தன்னை சுற்றிலும் சுயநலம், சுகபோகத்தில் நாட்டம், உழைக்காமல் பணம் திரட்ட வேண்டும் என்ற பேராசை, சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக வரும் மன அழுத்தம், மற்றவர்களுடைய உயிரை துச்சமாக நினைக்கும் மனப்பான்மையே இத்தகைய இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது. நாடே தறிகெட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள் பின்பற்றி வாழக்கூடிய அளவிற்கு சான்றோர் பெருமக்கள் யாரும் தற்போது இல்லை. அன்று அரசியலில் காந்தி, தியாகத்திற்கு பகத்சிங் முதல் நேதாஜி வரை, இலக்கியத்தில் சரத்சந்திரர் முதல் வ.வே.சு அய்யர் வரை, லஞ்ச ஊழற்ற நேரு முதல் காமராஜர் வரை இருந்தார்கள். எனவே அனைத்து தரப்பு மக்களும் இவர்களை சிலாகித்து போற்றினார்கள். தங்கள் வழிகாட்டிகளாக வரித்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ?

   பின்பற்ற தலைவர்களே இல்லை

   பின்பற்ற தலைவர்களே இல்லை

   இளைஞர்கள் தங்களை ஆரோக்கியமாக வார்ப்பித்துக்கொள்ள யாரை பின்பற்றுவது? எந்தத் துறையிலாவது அத்தகைய ரோல் மாடல்கள் என்று சொல்லக்கூடிய உதாரண புருஷர்கள் இப்போது உண்டா? யாரிடம் நற்குணங்களையும், மனித நேய பண்புகளையும் பெறுவது? கலை, இலக்கியம், அரசியல் ஏன்? ஆன்மீகத்திலாகிலும் உண்டா? கொலை வழக்கிலும், பாலியல் புகாரிலும், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் துறவிகளும், சாமியார்களுமே இன்று சிறைச்சாலைகளில் வாசம் கொண்டிருக்கிறபோது இவர்களில் யாரை இளைஞர்கள் பின்பற்றுவது? இன்றைய இளைஞர்கள் ஒருபக்கம் கட்டுப்பாடே இல்லாமலும், இன்னொரு பக்கம் அதிகமான கட்டுப்பாட்டோடும் வளருகிறார்கள். பெற்றோரோ, ஆசிரியர்களோ உண்மையில் மாணவர்களை வளர்ப்பதில்லை. ஊடகங்களும், சினிமாக்களும்தான் அவர்களை வளர்க்கின்றன. தொலைக்காட்சியில் வக்கரித்துப்போன ரசனைகள் உருவாகும் தொடர்களும், செல்போனில் ஏராளமாக வலம் வரும் ஆபாச இணையதளங்களுமே இளைஞர்களை பாழ்படுத்தியுள்ளன. இதனாலேயே இன்றைய சமூகம் சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது. ஆற்றுவாரும் தேற்றுவாரும் யாரும் இல்லை. வழிகாட்ட ஒருவரும் இல்லை.

   மனப்பாடப் புழுக்கள்

   மனப்பாடப் புழுக்கள்

   கல்வித் துறையோ எல்லாவற்றையும் விட மோசம். புத்தகப் புழுக்களையும், மனப்பாட எந்திரங்களையும், மதிப்பெண் அடிமைகளையும்தான் இந்தக் கல்வி முறை உருவாக்குகிறது. மனித மதிப்பீடுகள், மனித மாண்புகள் எல்லாம் பயனற்றுப் போயின. மனித நேயம் என்பதும், ஆரோக்கியமான சிந்தனை என்பதும் இளமைப் பருவத்திலிருந்தே காணாமல் போய்விடுகின்றன. 30 வருடங்களுக்கு முன்பு பள்ளிகளில் நீதிபோதனைக்கு ஒரு வகுப்பு உண்டு. அதற்குரிய பாடத்திட்டமும் உண்டு. இதில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த அனுபவத்தையும் கூடுதல் தகவல்களையும் சேர்த்து போதிப்பார்கள். அந்த காலத்து அன்னையர் தன் மழலையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிலாவையும் நட்சத்திரங்களையும் காட்டி சிறந்த கற்பனைக் கதைகளைக் கூறி உள்ளத்தையும் உணர்வுகளையும் பக்குவப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளில் ஆரோக்கியமான சிந்தனைகளை இளம் நெஞ்சில் பதிய வைப்பார்கள்.

   வன்முறை உணர்வோடு வளரும் பிள்ளைகள்

   வன்முறை உணர்வோடு வளரும் பிள்ளைகள்

   இன்றைய பெரும்பாலான அன்னையரால் இல்லப்பணி, அலுவலகப் பணி சுமை காரணமாக அது சாத்தியமில்லாமல் போகிறது,. இதற்கிடையே படி படி என்று நிர்பந்தித்து மதிப்பெண்களை மட்டுமே பிரதானமாக வைத்து நச்சரித்தால் எப்படி அந்தக் குழந்தை முழு மனிதனாக பரிணமிக்க முடியும்? வாழ்க்கைக்கு தேவையான நல்லியல்புகளையும், பண்புகளையும் அந்தக் குழந்தை எப்படிக் கற்றுக்கொள்ளும்? இப்படி தான்தோன்றித்தனமாக வளரும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் வன்முறை உணர்வோடு வளர்கிறார்கள், கிரிமினல்களாக மாறுகிறார்கள், சமூக விரோதிகளாக உருவாகிறார்கள். எனவே இன்றைய தலைமுறை இப்படி சீர்கெட்டுப் போனதற்கு இன்றைய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், ஊடகங்கள், பெற்றோர் ஆகியவையே பிரதான காரணமாகும் என்பது ஆணித்தரமான உண்மை.

   புத்தரும், வள்ளலாரும் வாழ்ந்த பூமியா இது

   புத்தரும், வள்ளலாரும் வாழ்ந்த பூமியா இது

   புத்தரும், வள்ளலாரும் வாழ்ந்த புண்ணிய பூமியில், இதுபோன்ற வன்முறை, கற்பழிப்பு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது நமது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெட்கக் கேடு...

   பூச்சி புழுக்களும்

   சீச்சீ என்றுமிழ்ந்திட

   ஆச்சு நம் வாழ்வு தோழனே...

   என்ற மறைந்த தியாகச்செம்மல் ஜீவாவின் கவிதைதான் தற்போது நினைவுக்கு வருகிறது,

   "தமிழன் என்றொரு இனமுண்டு

   தனியே அதற்க்கொரு குணமுண்டு"

   என்ற பழமொழி பொய்த்துப்போனது. தமிழனுக்கென்று எந்த ஒரு தனி குணமுமில்லை. தந்தை பெரியார் பாஷையில் சொல்வதானால் ஒரு வெங்காயமுமில்லை... எல்லாமே வாய்ச்சவடால்... சட்டமும், நீதியும், சமூக தர்மமும் வெறும் அலங்காரச் சொற்களே தவிர அது ஒரு அடிப்படை நியதியாகவோ - உண்மையின் உறைவிடமாகவோ இல்லை என்பது தமிழகத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது.

   இதற்கு என்னதான் தீர்வு?

   இதற்கு என்னதான் தீர்வு?

   இதன் தீர்வுதான் என்ன?

   இளைஞர்கள் தங்கள் விளம்பர மோகத்தை - வக்கிர உணர்வை கைவிட்டு மனித நேயத்தை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். போலிகளைக் கண்டு ஏமாறாமல் - நகல்களை நம்பி மோசம் போகாமல் - நிஜங்களைத் தேடும் பயணத்தை துவக்க வேண்டும்.

   காலத்தின் அருமையையும்...

   உயிர்களின் மதிப்பையும்...

   வாழ்க்கையின் அர்த்தத்தையும்...

   உண்மையின் உன்னதத்தையும்...

   இதயப்பூர்வமான அன்பையும்...

   கனிந்த நட்பையும்...

   புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்போதுதான் எதிர்கால சந்ததியினராவது ஆரோக்கியமான சமூக சூழலில் வாழ்க்கையை மனிதத்துடன் மகிழ்ச்சியாக பயணிக்க முடியும்.

   கவலைப்படுவோம்

   கவலைப்படுவோம்

   அதேபோல, அரசும், நிர்வாகமும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மக்களை பற்றி இனியாகிலும் கவலைப்பட வேண்டும். ஊடகங்களை கட்டுப்படுத்தி.... நெறிப்படுத்த வேண்டியது உடனடி கடமையாகும். இலவசம் என்ற பெயரால் மக்களை இழிவுபடுத்தி... சும்மா கிடப்பதே சுகம் என்று சோம்பேறிகளாக்காமல், உழைத்து வாழும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்... வன்முறைகளை தடுக்கவும், அவற்றை கண்காணிக்கவும், அதன் நடவடிக்கைகளை விசாரிக்கவும், தமிழகத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, இதுபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் இந்த ஜனநாயகத்தை நாம் இழக்க நேரிடும். மீண்டும் அதை வென்றெடுக்க எகிப்திய மக்களைப்போல் நமது வருங்கால தலைமுறையும் ரத்தம் சிந்த நேரிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்!!!

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   Crimes are on rise in Tamil Nadu. Murders for gain, murders duging rape are in increasing state. It creates a panic among the minds of the People. Here is an analysis.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more