“பாரத் மாதா கி ஜே”.. பேச்சை நிறுத்திய திமுக எம்பி! எல்.முருகன் இருந்தபோதே பாஜகவினர் மீது “டென்சன்”
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி. கல்யாணசுந்தரம், எல்.முருகன் பெயரை சொன்னவுடன் விழாவில் கலந்துகொண்ட பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்று கூச்சலிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவில் ரயில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டன. சில மாதங்கள் கழித்து கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கும் வாபஸ் பெறப்பட்டது.

பாபநாசம் ரயில் நிலையம்
இதனை தொடர்ந்து மீண்டும் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டன. இவ்வாறு இயக்கப்பட்ட திருச்செந்தூர் - சென்னை விரைவு ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது. மீண்டும் தங்கள் பகுதியில் ரயிலை நிறுத்தி செல்ல வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

தெற்கு ரயில்வே
இதனை தொடர்ந்து இப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாபநாசம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி செல்ல வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது தெற்கு ரயில்வே.

நின்று சென்ற ரயில்
அதில், டிசம்பர் 3 ஆம் தேதி முதல் மீண்டும் பாபநாசம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலும், சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று திருச்செந்தூர் சென்ற ரயில் பாபநாசத்தில் நின்று சென்றது.

எல்.முருகன்
இதனை வரவேற்க பாபநாசம் ரயில் நிலையத்தில் மக்களோடு மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் காத்திருந்து பச்சை கொடி காட்டி வரவேற்று வழியனுப்பி வைத்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட எல்.முருகன், "நம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் ரயில்வே துறையில் நவீன கட்டமைப்புகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் நிகழ்வின் ஒருபகுதியாக எழும்பூர் - திருச்செந்தூர் வரை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்:16105/16106) சேவையை பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்றார்.

பச்சைக்கொடி
அப்பகுதியில் ரயில் நிறுத்தத்தை கொடியசைத்து துவக்கி வைத்தேன். இந்நிகழ்வில் திருச்சி பகுதியின் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கல்யாண சுந்தரம் அவர்கள், பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்." என்றார்.

திமுக எம்பி கல்யாணசுந்தரம்
இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், "ஒன்றிய அமைச்சரான எல்.முருகன் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்பது பிற்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கும். அவரால் தமிழ்நாட்டிற்கு முடிந்ததை செய்தால் அவர் பெயர் நிலைத்து நிற்கும்." என்றார்.

பாஜகவினர் முழக்கம்
எல்.முருகன் பெயரை கேட்டவுடன் அங்கிருந்த பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்று முழக்கம். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்பி, இப்பகுதி வளர்ச்சி பற்றி அமைச்சரின் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இடையூறாக ஏன் கத்துகிறீர்கள்?." என்று கூறினார். இதனால் அந்த விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications