கேரள சபாநாயகர் திடீர் ராஜினாமா.. காரணம் என்ன? பரபரப்பாகும் கேரள அரசியல்!
திருவனந்தபுரம்: கேரள மாநில சபாநாயகராக இருந்துவந்த ராஜேஷ் திடீரென தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமாரிடம் சமர்பித்துள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த கோடியேரி பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனால், புதிய மாநில செயலாளராக கலால் துறை அமைச்சராக இருந்த கோவிந்தன் நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அரசுப்பதவி, கட்சிப்பணி இரண்டிலும் ஒரேநபர் இருக்க முடியாது என்னும் மார்க்சிஸ்ட் கட்சியின் விதிப்படி அமைச்சர் பதவியை கோவிந்தன் ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கேரள அமைச்சரவை
இதேபோல் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த சஜி செரியன், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால் அவர் சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கேரள அமைச்சரவையில் இரு அமைச்சர் பதவியிடங்கள் காலியாக உள்ளது.

சபாநாயகர் ராஜினாமா
இந்த நிலையில் கேரள மாநில சபாநாயகராக இருந்துவந்த ராஜேஷ் திடீரென தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமாரிடம் சமர்பித்தார். கேரள அமைச்சரவை மாற்றிய அமைக்கப்படுவதால் சபாநாயகர் ராஜேஷ்-க்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறது. இதற்காகவே அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதிய சபாநாயகர்
தலச்சேரி தொகுதியின் எம்.எல்.ஏ ஷம்ஷீரை புதிய சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதேநேரம் ராஜேஷின் இலாகா இதுவரை அறிவிக்கப்படவில்லை. சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ராஜேஷ் கூறுகையில், கடந்த 15 மாதங்களாக சபாநாயகராக இருந்தது என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம். கட்சி எனக்கு கொடுத்த பணியை நேர்மையுடன் செய்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அமைச்சரவையில் யார்?
சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் ராஜேஷ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளராகவும் இருந்தவர். கேரளத்தை உலுக்கிய எண்டோசல்பான் நச்சு உரத்தூவலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்குத் தொடர்ந்து களத்தில் நின்றவர். அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் கலாச்சாரத்துறை அமைச்சர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்ககள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் 6ம் தேதி புதிய சபாநாயகராக தலச்சேரி தொகுதியின் எம்.எல்.ஏ ஷம்ஷீர் சபாநாயகராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications