மூக்கை துளைத்த வாசனை..! ஆசையை அடக்க முடியாமல் 'கை' வைத்த போலீஸ் எஸ்.ஐ - இப்போ மானம் போச்சே!
திருவனந்தபுரம்: மாம்பழங்களை திருடி வசமாக மாட்டிக் கொண்ட சப் - இன்ஸ்பெக்டர் தான் கேரளாவில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளார்.
மேலும், அவர் மாம்பழங்களை திருடிய சிசிடிவி காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருட்டு சம்பவங்களை தடுக்க வேண்டிய போலீஸ்காரரே இப்படியொரு செயலில் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்த விஷயம் பூதாகரமானதை அடுத்து, அந்த சப் - இன்ஸ்பெக்டரை கேரள காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமல்லாமல் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்
நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது, இந்த உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் ஆசிரியர் ஓட்டம்; மகளையே பலாத்காரம் செய்த தந்தை; வங்கிக் கொள்ளையில் போலீஸ்காரருக்கு தொடர்பு என்பன போன்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 'வேலியே பயிரை மேயலாமா..' என்ற பழமொழிதான் மேற்கூறிய சம்பவங்களுக்கு பொருந்துகிறது. தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

போலீஸ் எஸ்.ஐ. ஷிகாப்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டக்காயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிகாப் (38). இவர் இடுக்கி மாவட்ட ஆயுதப்படையில் இவர் சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த இரண்டு வார காலமாக கோட்டயம் அரசு மருத்துவமனையில் இவருக்கு இரவுப் பணி போடப்பட்டிருந்தது. இதனால் இரவு 9 மணிக்கு பணிக்குச் சென்றுவிட்டு, அதிகாலை 4 மணிக்கு அவர் வீடு திரும்பி வந்தார்.

மயக்கிய மாம்பழ வாசனை..
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இவர் வழக்கம் போல கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு இரவுப் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அதிகாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பரதோடு என்ற இடத்தை கடக்கும்போது மாம்பழ வாசனை அவர் மூக்கை துளைத்திருக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பார்த்தபோது, அங்குள்ள நடைபாதையில் வியாபாரிகள் சிலர் கூடை கூடையாக மாம்பழங்களை வைத்திருந்தது தெரியவந்தது. மாம்பழ வாசனையால் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் தவித்த எஸ்.ஐ. ஷிகாப், மாம்பழங்களை திருடுவதென முடிவு செய்தார்.

மாம்பழ திருட்டு..
அதன்படி, நைஸாக மோட்டார் சைக்கிளை மாம்பழக் கூடைகளுக்கு அருகே கொண்டு வந்த அவர், விறுவிறுவென அங்கிருந்த மாம்பழங்களை திருடி பைக்கின் சீட்டுக்கு அடியில் போட்டார். இவ்வாறு சுமார் 10 கிலோ மாம்பழங்களை திருடிய அவர், நிறைந்த மனதோடு வீடு திரும்பினார். இந்நிலையில், காலையில் வந்து பார்த்த வியாபாரிகள், மாம்பழங்கள் திருடுபோனது குறித்து போலீஸுக்கு புகார் அளித்தனர். இதன்பேரில் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது போலீஸ் எஸ்.ஐ. ஷிகாப் தான் மாம்பழங்களை திருடியது தெரியவந்தது. மேலும், இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களிலும் தீயாகப் பரவியது. இதன் தொடர்ச்சியாக, மாம்பழங்களை திருடிய குற்றத்துக்காக எஸ்.ஐ. ஷிகாப்பை இடுக்கி எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications