வடஇந்திய ராம லீலா: நீங்கள் ராவணனை எரித்தால் நாங்கள் ராமனை எரிப்போம்- 68 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி
சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு வட இந்தியாவில் ராமலீலா என்ற பெயரில் ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சிகள் நடப்படுகின்றன. இதற்காக பல அடி உயரமான ராவணன் உருவபொம்மைகள் தயாரிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் நாட்டின் முதன்மை அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆனால் வட இந்தியாவின் ராமலீலா என்பது தென்னிந்தியர்கள்-தமிழர்களின் மன்னனாகிய ராவணனை எரித்து கொண்டாடுவது; இது தென்னிந்தியர்கள்- தமிழர்கள்- திராவிடர்களை அவமதிக்கிற செயல்; ஆகையால் ராவணனை எரித்தால் ராமனை எரிப்போம் நாங்கள் என்கிற குரல் தமிழ்நாட்டில் 70 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடருகிறது.

தமிழகத்தில் ராமலீலா எதிர்ப்பு வரலாறு கடந்து வந்த பாதை ஒரு மேலோட்ட பார்வை:
கடந்த சில தினங்களுக்குமுன் டில்லி மாநகரில் ராம லீலா கொண்டாடினராம் - வைதீகர்கள்; இராவணனையும் அவன் சந்ததிகளையும் அழித்த ராமனின் திருநாளாம் அது. இந்திய சர்க்காரின் செய்தி இலாகா அந்தக் கோலாகலத்தை திரைப்படமாக்கி சினிமா கொட்டகையில் திரையிட்டனர். திரையிலே காட்சி பக்கத்திலேயிருந்த நண்பர் கருணாநிதி கேட்டார். நாம் ராமன் உருவம் செய்து கொளுத்தினால் என்ன? - அண்ணா, திராவிட நாடு 28.10.1951.
நாம் அறுதியிட்டுக் கூற முடியும். புராணம் திரும்பியே தீரும். இராம-இராவண யுத்தத்தில் ஜெயிக்கப் போவது திராவிடத்து வீரன் இராவணன். தென்னாட்டிலும் ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும். மூக்காஜி என்ற பெயரில் முரசொலி' நாளேட்டில் 1954 ஆம் ஆண்டில் கருணாநிதி எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன் தொடரில்.. (முரசொலி 8.10.1954)
பெரியார், 1973 டிசம்பர் 8, 9-இல் சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் ராமன் உருவத்தை கொளுத்தும் ராவணலீலாவை நடத்த திட்டமிட்டிருந்தார்.
17.10.1974, தி.க.வின் அப்போதைய பொதுச்செயலாளர் கி.வீரமணி, அப்போதைய பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில், இந்திய அரசு இராமலீலா விழாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கியமானவர்கள் அதில் கலந்து கொள்ளக்கூடாது.மீறி நடந்தால் வருந்தத்தக்க நடவடிக்கைகளை நாங்களும் மேற்கொள்ள வேண்டிவரும் என குறிப்பிட்டார். 30
.10.1974 இல் அன்போடும் உரிமையோடும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் வெளியிட்ட அறிக்கையில், "எனது உடல்நிலை பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. தலைவர் அருமைத் தந்தையின் நினைவு நாளையொட்டி நமது இயக்கத் தோழர்கள், பகுத்தறிவுவாதிகள் இவர்களை கூட்டி மாபெரும் இன எழுச்சிப் பெருவிழாவாக "இராவணலீலா" நடத்தி அதில் நாம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்தே தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம். என அறிவித்தார்.
04.11.1974 இல் பிரதமர் இந்திராகாந்திக்கு மணியம்மையாருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், இராமலீலா குறுகிய இனப்பிரச்சனையோ, பிராந்தியப் பிரச்சனையோ இல்லை; மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது இல்லை; கடவுள் மதத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் அவர்களது நம்பிக்கையை வலியுறுத்துவதற்கும் உரிமை உண்டு என சுட்டிக்காட்டினார்.
28.11.1974-ல் பெரியார் நினைவு நாளுக்கு மறுநாளான டிசம்பர் 25-ல் இராவணலீலா நடக்கும் என்று மணியம்மையார் அறிவித்தார். மணியம்மையார் அறிவித்த ராவணலீலா போராட்டத்துக்கு உ.பி.யிலிருந்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் சம்மேளன நிறுவனர் ஜி.எல்.சாகு, நந்தலால்சிங் யாதவ், சாலிக்ராம் குரீல், சந்திரசேகர், கான்பூரிலிருந்து இராம் நாராயண்மாலி, டாக்டர் ஜலிஸ்வர் பிரகாஷ் ஆகியோர் தமிழகம் வருகை தந்தனர். கோவாவின் . கோவாவில் சத்திய சோதக் சமாஜம், மணியம்மையாரின் ராவண லீலா போராட்டத்துக்கு ஆதரவு அளித்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகர் அம்பேத்கர் இளைஞர் கழகத்தின் தலைவர் பி.டி.ஷந்தத் ஆதரவு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தநாயகி உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியிடம் ராவணலீலாவை தடை செய்ய வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த முதல்வராக இருந்த கருணாநிதி, முதல்வர் கருணாநிதி இராவணலீலா பக்தர்கள் மனதை புண்படுத்தும் என்றால் இராமலீலா பகுத்தறிவாளர்கள் மனதை புண்படுத்தாதா? என பதிலடி கொடுத்தார். மேலும் சட்டசபையில் ராவணலீலாவை தடை செய்யக் கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
வட இந்தியாவில் பிரேம் சந்த்குப்தா தலைமையிலான இராவண லீலா எதிர்ப்பு குழு, பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து முறையிட்டது. அகில இந்திய ராம்நாத் சம்பிரதாயா தலைவர் மகத்வைஷ்ணவதாஸ், ஜனாதிபதியிடம், மணியம்மையார் நடத்தும் ராவண லீலாவை தடை செய்ய கோரினார்.
24.12.1974 பெரியார் நினைவு நாளில் கி.வீரமணி, திருவாரூர் தங்கராசு, தோலி.ஆர் சுப்ரமணியன், தஞ்சை க.மா.குப்புசாமி, பொத்தனூர் சண்முகம், திருப்பத்தூர் ஏ.டி.கோபால், திருச்சி என்.செல்வேந்திரன், கோவை இராமகிருட்டிணன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
25.12.1974 அன்று பெரியார் திடலில் 18 அடி உயர இராமர், 17 அடி உயர இலட்சுமணர், 16 அடி உயர சீதை உருவங்களுக்கு மணியம்மையார் தீ வைக்க தி.க.வினர் தொடர்ந்து எரித்தனர். அப்போது தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மணியம்மையாருடன் நீடாமங்கலம் அ.ஆறுமுகம், தஞ்சை இராஜகோபால், குடந்தை ஆர்.பி.ஸ்டாலின், சேலம் சித்தையன், பெண்ணாகரம் பி.கே.இராமமூர்த்தி, வழக்கறிஞர். எஸ்.துரைசாமி, கரூர் வீரண்ணன், கரூர் கே.கே.பொன்னப்பா, திருச்சி து.மா.பெரியசாமி, திருவண்ணாமலை எஸ்.கண்ணன், வில்லிவாக்கம் ஏ.தியாகராஜன், பெரியகுளம் ச.வே.அழகிரி,, அரூர் வி.ஆர்.வேங்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
1996-ல் பெரியார் திராவிடர் கழகம் இயக்கத்தினரால் சென்னையில் ராவண லீலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2016-ல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ராவண லீலா போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் மன்னனாக ராவணன் போற்றப்படுகிறார். இதனால்தான் புலவர் குழந்தை, ராவண காவியம் நூலையே படைத்தார். இலங்கையில் விடுதலைப் புலிகள் நிர்வாகம் செய்த போது ஓராண்டுக்கும் மேல் ராவண காவியத்தை ஒலிச் சித்திரமாக புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்ப செய்தார் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன. இதுதான் வட இந்திய ராம லீலாவுக்கு எதிரான தமிழகத்தின் ராவண லீலாவின் வரலாறு.