For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன்? கல்பாக்கம் வ.வேம்பையன்

Google Oneindia Tamil News

(ஆசிரியர் குறிப்பு: தை 1-ம் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை வலியுறுத்தும் விவரங்கள் அடங்கிய அட்டையை தன் வாழ்நாள் முழுவதும் பரப்பிய தமிழறிஞர் கல்பாக்கம் வ.வேம்பையன். சென்னையில் எங்கு தமிழ் சார்ந்த கூட்டம் நடந்தாலும் இந்த அட்டைகளை கைகளில் ஏந்தி ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்ப்பதை வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தவர்)

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம் மற்றவை மானமும், உயிரும் !. குமுகாயம், ஊர், நகர், நாடு, உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.

'நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்'

என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60 நாழி கையை ஒரு நாளாகவும், ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துனைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைத் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக் கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்ற வில்லை என்பது வியப்பாக இருக்கிறது; வருத்தம் அளிக்கிறது.

தலைநகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு, அரசர்கள் முடி சூட்டிக் கொண்ட ஆண்டுத் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் மூலம் தெரிகின்றன.

Why Thai-1 is Tamil New Year?

நாட்டுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமை யாமையை அரசர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துக் கூறியதாகவும் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக்கிடந்த கடவுள், மதம், சாதி, மூடநம்பிக்கைச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுமுறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

"ஆபாச 60 ஆண்டுப் பெயர்களும் சித்திரைப் புத்தாண்டும் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி.78இல் எற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வட மொழிப் பெயர்களாய் உள்ளன." (ஆதாரம்:-பக்கம் 7 தி ஹிந்து 10.03.1940)

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. 60 ஆண்டுகளின் பெயர்கள், கிருஷ்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்ற பிள்ளைகள் என்ற கதையை மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எனவே, ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நமச் சிவாயர் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர்; அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.

முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள், தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சா. நமச்சிவாயனார் ஆகியோர் ஆவார்கள்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப் பட்டன என்று முத்தமிழ்க் காவலர் அவர்களை வினவினேன். 'மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள்; போதும்' என்று விளக்கம் தந்தார்.

திருக்குறாளர், தமிழ் மறைக் காவலர் வீ. முனிசாமி அவர்களிடம் இந்த நான்கு முடிவுகள் பற்றிக் கேட்டேன். 'தமிழக்கடல் மறைமலை அடிகள் சொல்வதே ஆதாரம்' என்று கூறினார்.
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது; பின்னர் தொல்காப்பியர் காலத்தில் ஆவணியில் தொடங்கி ஆடியில் முடியும் ஆண்டு நாள்காட்டி வழக்கில் இருந்தது. ஆரிய ஆதிக்கத்தில் சித்திரை 60 ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. நாம் புதிதாக எதையும் புகுத்த வில்லை. இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்பதை மீட்டு எடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

'வானநூல் பொருத்தமும் வயல் விளைச்சல் பொருத்தமும் ஒருங்கே அமையப்பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர்தம் ஆண்டுத் தொடக்கமாகப் பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என்னெனக் கூறி வியப்போம்' என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்சான்றாகும்.

முன்னாளில் தமிழ் ஆண்டு தை முதல் மாதத்தில்தான் இருந்தது என்பது கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கருத்தாகும்.

'சிந்துவெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல்நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் ஆயிற்று' என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து அவர்கள்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

'முன்காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்த தில்லை ; தை முதல் நாள் தான் வருடப்பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்' - மூதறிஞர் மு. வரதராசனார்

'தைப் பொங்கல் திருநாள் தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும்' - அறிஞர் நாரண துரைக்கண்ணன்

'தை முதல்நாள் தைப்புத்தாண்டின் தொடக்க நாள் என்பது தெள்ளிதின் புலனாகும். அறிவியல் அடிப்படையில் இது ஏற்கத்தக்கதுமாகும்' - டாக்டர் மெ. சுந்தரம்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை 1935ஆம் ஆண்டில் திருச்சியில் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழர் மாநாட்டில் தந்தை பெரியார் ஏற்றுக்கொண்டார்.

'தை முதல் தமிழினத்தின் ஆண்டு முதல் நாள்' - பேராசிரியர் செல்வி பாகீரதி

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் - நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - குறுந்தொகை
தைஇத் திங்கள் தண்கயம் போல் - புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போல் - ஐங்குறுநூறு
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ - கலித்தொகை

'தை முதல் நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளும் இதுவே. தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை நாம் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்' - தலைவர் கலைஞர் மு. கருணாநிதி

சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை ஏற்பதற்கு எந்தச் சான்றும் இதுவரை எவரும் தரவில்லை. புராணிகச் சார்பை வைத்துக் கொண்டு ஒரு புத்தாண்டைக் கைக் கொள்வது தமிழர்களுக்கு இழுக்குத் தருவதாகும்.

'தை முதல் நாளில் தொடக்கமாகும் திருவள்ளுவர் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடுவதுதான் முறை' - முனைவர் மு. தமிழ்க் குடிமகன்

'ஆண்டுப் பிறப்பு (வரு­ப் பிறப்பு) என்பதன் பொருளே அது நாரதர் குழந்தை என்ற கதை மரபால்தான். மற்றபடி ஆண்டுத் தொடக்கம் என்பதுதான் தமிழர் மரபு' - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம் மூன்றும் இணைந்து மலேசியாவில் இயங்கும் மேலும் 15 தோழமை இயக்கங்கள் மற்றும் உலகளாவிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் 06.01.2001ஆம் நாள் மலேசியா, கோலாலம்பூரில் நடத்திய உலகப் பரந்துரை மாநாட்டில் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என இன்று முதல் (06.01.2001) உலகப் பரந்துரை செய்கின்றோம் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த மாநாட்டில் திருக்குறள் மணி இறைக்குருவனாரும் (தென் மொழி ஆசிரியர்), நானும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினோம்.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதற்குத் தமிழ் நாடு அரசு ஆட்சி அங்கீகாரம் அளித்தல் வேண்டும் என்பது தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள், தமிழ்மொழி, இன உணர்வாளர்கள் ஆகியோர்களின் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும்.

திராவிடர் கழக மாநாடுகளிலும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களிலும் மற்ற கழக நிகழ்ச்சிகளிலும் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதைத் தமிழக அரசு ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடாமுயற்சி வெற்றி தரும்; கூட்டு முயற்சி ஈட்டும் வளர்ச்சி என்பதற்கு ஏற்பத் தலைவர் கலைஞர் அவர்கள் அனைவரின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஏற்று 2008இல் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்று சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தினார்.

2011 மே மாதம்ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசின் முதலமைச்சாராக 16.05.2011இல் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றார். அன்றே முதல் வேலையாக விடுதலை நாளிதழை நூலகங்களிலிருந்து அகற்றி ஆணையிட்டார். தலைவர் கலைஞர் அவர்களின் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள் என்ற சட்டத்தை ரத்து செய்து, சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டம் இயற்றினார்.

இவை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைக்கு எதிரானவை. தமிழ்மொழி, இன உணர்வாளர்கள், அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள், பகுத்தறிவாளர்கள் முதலியவர்களின் வெறுப்புணர்வும் பகையுணர்வும் முதல்வர் மீது ஏற்பட்டுள்ளன.

திராவிட என்பதையும், அண்ணா என்பதையும் கட்சிப் பெயரில் வைத்துக் கொண்டும், அண்ணா உருவம் தாங்கிய கொடியைத் தங்கள் கொடியாக ஏற்றுக்கொண்டும் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராகச் செயலாற்றுவது பகையுணர்வை வளர்க்கவே பயன்படும்.

ஈரடியில் பொய்யா மொழி
ஈரோட்டு அய்யா மொழி
அறிஞர் அண்ணாவின் அறிவுவழி
அனைத்துமே தமிழர் உய்யும் வழி

என்பதை உணர்ந்து தெளிந்த தமிழர்கள் தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்றுக் கொண்டாடுவார்கள்; பார் முழுதும் பரப்புவார்கள்.

English summary
Here is an article on Thai-1 is Tamil New Year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X