For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புறா.. கடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... அடுத்து?

By Shankar
Google Oneindia Tamil News

Email
-கிரி

மின்னஞ்சல் (Electronic Mail (a) Email) என்பது நமது தின வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மற்றவர்களுடன் வேகமாக தொடர்பு கொள்ள செலவில்லாத ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது.

துவக்கத்தில் மின்னஞ்சல் என்றால் அனைவருக்கும் தெரிந்தது ஹாட்மெயில் தான். முதலில் துவங்கப்பட்ட மின்னஞ்சல் சேவையும் இது தான். இந்த மின்னஞ்சல் சேவையை இந்தியரான சபீர் பாட்டியா தனது நண்பர் ஜாக் ஸ்மித்துடன் துவங்கினார் (ஜூலை 4, 1996) என்பது நமக்கு பெருமையளிக்கும் விஷயம். தகவல்களை பகிர்ந்திட எளிமையாகவும் வேகமாகவும் இருந்ததால் அனைவரிடமும் விரைவில் வரவேற்ப்பை பெற்றது. இதனுடைய வளர்ச்சியைப் பார்த்து பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை USD 400 மில்லியனுக்கு (டிசம்பர் 1997) வாங்கிக்கொண்டது!

ஹாட்மெயில் உடன் வந்த இன்னொரு மின்னஞ்சல் சேவை "ராக்கெட் மெயில்". இதுதான் பின்னாளில் "யாஹூ"வாக மாறியது. இன்று வரை மின்னஞ்சல் சேவையில் முன்னணியில் இருப்பது ஹாட்மெயில்... அடுத்தது யாஹூ. தொடர்ந்து ஜிமெயில் சேவை. நம்மிடையே தற்போது ஜிமெயில் பிரபலமாக இருந்தாலும் மின்னஞ்சல் ரேங்கிங்கில் மூன்றாவது இடத்திலேயே உள்ளது.

துவக்கத்தில் மிகக் குறைவான அளவிலேயே சேமிப்பு அளவு கொடுத்தார்கள். 2 MB அளவுக்குதான் இருந்தது. ஜிமெயில் 1 GB என்று அதிரடியாக இடம் கொடுத்த பிறகு அரண்டு போன மைக்ரோசாப்ட் யாஹூ நிறுவனங்கள், பின் தங்களின் அளவையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. ஜிமெயில் வந்த பிறகு ஹாட்மெயில், யாஹூ மின்னஞ்சல்களுக்கு இறங்கு முகமாகவே உள்ளது. இன்று வரை பயனாளர்களை அதிகளவில் கொண்டு மின்னஞ்சல் சேவையில் முதல் இரண்டு இடங்களில் ஹாட்மெயில், யாஹூ இருந்தாலும் வளர்ச்சியின் அடிப்படையில் ஜிமெயில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத்தளங்கள் பிரபலமான பிறகு பலரும் தங்கள் தகவல்களை இதிலேயே பரிமாறிக் கொள்வதால் மின்னஞ்சல் பயன்பாடு குறைந்து வருவதாக பேசப்பட்டது. இதற்கு சிகரம் வைத்தது போல ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவையை துவங்கியது இது 'Messaging Service' என்று அழைக்கப்பட்டது. ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவை என்பது வழக்கமான மின்னஞ்சல் சேவை போல இல்லாமல் Email, IM, SMS ஆகியவற்றை உள்ளடக்கி அமைத்து இருந்தது. இது "Gmail Killer" என்று அழைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போல எதுவும் நடக்காமல் புஸ்ஸாகிவிட்டது!

ஃபேஸ்புக் மின்னஞ்சல், ஜிமெயிலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு சேவை வந்தது என்றே பலருக்கு தெரியவில்லை.

இவை இப்படி இருந்தாலும் பலர் மின்னஞ்சலை பயன்படுத்தாமல் ஃபேஸ்புக் ட்விட்டரிலியே பேசிக்கொள்வது அதிகரித்துக் கொண்டு வருவது உண்மை. நீங்கள் அதிகம் சமூகத்தளங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் மின்னஞ்சலில் உங்கள் நண்பர்களை தொடர்பு கொள்வதை விட சமூகத்தளங்களில் தொடர்பு வைத்திருப்பதே அதிகமாக இருக்கும். யோசித்துப் பார்த்தீர்களென்றால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அனுப்பும், பெறும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் இப்போது குறைந்திருக்கும். குழும மின்னஞ்சல்கள் (Group Mails), அறிவிப்பு மின்னஞ்சல்கள் போன்றவை இந்தக்கணக்கில் வராது.

மின்னஞ்சலில் இருப்பது போல சமூகத் தளங்களிலும் நமக்கு தேவையானவர்களை பிரித்து தகவல்களை தெரிவிக்க முடியும். அதாவது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நமது தகவலை தெரிவிக்க முடியும். சமூகத் தளங்களில் Bubble notification என்ற அற்புதமான வசதியின் மூலம் நம்மால் மின்னஞ்சலைப் பார்க்காமலே நமக்கு வந்திருக்கும் தகவலை உடனடியாக அறிய முடியும். இணைய தொலைபேசிகளில் Push notification என்ற முறையில் விரைவாக அறிய முடியும்.

ஃபேஸ்புக் சமீபத்தில் நமக்கு வரும் தகவல்கள் அறிவிப்பு முறையில் மின்னஞ்சல் முறையை மாற்றி Bubble notification முறையை ஊக்குவித்துள்ளது. நமக்கு மின்னஞ்சல் வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம். முன்பு நமக்கு வந்த தகவலை அறிய அனைவரும் மின்னஞ்சலையே ஃபேஸ்புக்கில் பயன்படுத்திக்கொண்டு இருந்தோம். தற்போது Bubble notification எளிதாக இருக்கிறது. அதோடு மின்னஞ்சல்களின் எண்ணிக்கையையும் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. கூகுள் + ம் இதே முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

@ சிம்பல் மூலம் நாம் விரும்பும் நபரின் பெயரை கொடுத்து உடனடியாக அவரது கவனத்தைப் பெற முடியும். இதைப்போல எளிதான வசதி இருக்கும் போது மின்னஞ்சல் அனுப்புவது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது. இதை எளிதாக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் + ல் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் + பயனாளர்கள் இந்த முறையையே பின்பற்றுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒருவரைப் பற்றிய தகவலை ஃபேஸ்புக், கூகுள் + ல் பதிகிறோம் என்றால் நாம் @ கொடுத்து உடனே அவரது கவனத்தை ஈர்க்கலாம் அதாவது "நான் உங்கள் தொடர்புள்ள செய்தியை இங்கே கூறி இருக்கிறேன் இங்கே வாருங்கள்" என்பதாகும். இதன் மூலம் அந்த நபர் உடனடியாக தன்னைப்பற்றிய தகவலுக்கு பதில் தர முடியும் அந்த செய்தியை தாமாக கவனிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

உலகளவில் அதிகம் பார்வையிடும் தளமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தன்னுடைய முதல் இடத்தை ஃபேஸ்புக் தக்க வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சமூகத்தளங்கள் வளர்ச்சியைக் கண்டு மிரண்ட கூகுள் இதன் காரணமாகத் தான் கூகுள் + சமூகத் தளத்தை துவங்கியது. எதிர்காலத்தில் சமூகத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அனைவரும் கூறுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சமூகத்தளங்கள் மூலம் பல நாடுகளின் தலை எழுத்தே மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு உதாரணமாக துனீசியா, எகிப்து, லிபியா என்று கூறிக்கொண்டே போகலாம். இந்தியாவில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு பெரிதும் துணையாக இருந்தது சமூகத் தளங்களே என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும்.

இது போல போராட்டங்களின் செய்தியை மக்களிடம் வேகமாக கொண்டு செல்ல பயன்பட்டவை சமூகத் தளங்களே! இதற்கு யாரும் மின்னஞ்சலை முக்கிய தகவல் பரிமாற்ற சாதனமாக பயன்படுத்தவில்லை என்பதை இங்கே நாம் உணர வேண்டும். பரபரப்பு செய்தி என்றால் ட்விட்டரில் காட்டுத்தீயாக சில நிமிடங்களில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் தற்போதைய தலைமுறையின் துவக்கமே சமூகத் தளங்களோடு உள்ளது அவர்கள் மின்னஞ்சலை குறைவாகவே பயன்படுத்தி இருப்பார்கள். இந்த நிலையில் எதிர் வரும் தலைமுறையினர் மின்னஞ்சல் என்ற வசதிக்கே போகாமல் சமூகத் தளங்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். இதனால் படிப்படியாக மின்னஞ்சல் பயன்பாடு குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.

கடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... இனி சோஷியல் நெட்வொர்க்!

எளிமையாகக் கூற வேண்டும் என்றால் முன்பு கடிதம் பிரபலமாக இருந்தது. தற்போதைய தலைமுறையினர் நேராக மின்னஞ்சல், தொலைபேசிக்கு வந்து விட்டார்கள் அதாவது கடிதப் பயன்பாடு என்ற ஒன்றை தொடாமலே!

அதே போல அடுத்த தலைமுறையினர் மின்னனஞ்சலுக்கு செல்லாமலே நேராக சமூகத்தளங்களுக்கு வந்து விடுவார்கள். அவர்கள் மின்னஞ்சலை முக்கிய சேவையாக பயன்படுத்த வேண்டிய தேவையே இருக்காது அல்லது அவர்களுக்கு பயன்படுத்த அதிகம் வாய்ப்பு அமையாது.

இதனாலே நிபுணர்கள் மின்னஞ்சலுக்கு சிறப்பான எதிர்காலம் இல்லை என்கிறார்கள்.

'இல்ல இல்ல.... அவ்வளவு சீக்கிரம் அழியாது'

எப்போதுமே எந்த ஒரு விஷயத்திற்கும் மாற்றுக்கருத்து நிச்சயம் இருக்கும். அப்படி மின்னஞ்சல் சமாச்சாரத்தில் மாற்றுக்கருத்து சிலவற்றை பார்ப்போம்.

நிறுவனங்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மின்னஞ்சலையே பயன்படுத்த முடியும். சமூகத்தளங்களை பயன்படுத்த முடியாது.

சமூகத் தளங்கள் சீனா போன்ற பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த முடியாது. இது போல சமயங்களில் நமக்கு அங்கே நண்பர்கள் இருந்தால் இதில் தொடர்பு கொள்ள முடியாது. இதற்கு மின்னஞ்சல்தான் மாற்று தகவல் பரிமாற்ற சாதனம்.

அலுவலகங்களில் சமூகத் தளங்களுக்கு தடை உள்ளது. எனவே இதில் தகவல்களை பார்க்க முடியாது. இதற்கு அந்த சமயங்களில் நமது இணைய தொலைபேசி போன்ற சில மாற்று வசதிகள் இருந்தாலும் உடனடி பயன்பாட்டிற்கு சிரமமாகவே இருக்கும்.

உலகில் இன்னும் பெரும்பான்மையானோர் மின்னஞ்சலையே பயன்படுத்துக்கிறார்கள். அதோடு நம் நண்பர்கள் அனைவரும் சமூகத்தளங்களில் உறுப்பினராக இருப்பார்கள் என்று கருத முடியாது.

நாம் செய்யும் சிறு தவறு கூட பெரிய அபாயத்தில் முடியலாம். எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஹாலிவுட் நடிகரான Charlie Sheen பிரபல பாடகரான Justine Bieber க்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பவதாக நினைத்து தனது தொலைபேசி எண்ணை அவரை ட்விட்டரில் பின் தொடரும் 5 மில்லியன் நபர்களுக்கும் அனுப்பி விட்டார்.

சமூகத் தளங்கள் மூலம் நாம் நண்பர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அதையே தொழில் அலுவலக பணி சம்பந்தப்பட்ட நிலை என்று வரும் போது இதை பயன்படுத்துவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. அது சில நேரங்களில் சாத்தியமும் இல்லை. இதைப்போல சமயங்களில் மின்னஞ்சலையே பயன்படுத்த வேண்டி இருக்கும்.

மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் சமீபமாக இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விசயமாக உள்ளது. இது பற்றி எழுதாத தொழில்நுட்பத் தளங்களே இல்லை என்கிற அளவிற்கு இது பற்றி அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள். முடிவாக தகவல் பரிமாற்றத்துக்கு துவக்கத்தில் புறா, ஓலை அனுப்பினார்கள் பின் கடித முறை வந்தது. அது மெதுவாக உள்ளது என்று மின்னஞ்சல் பிரபலமானது. தற்போது அதுவும் மெதுவாக உள்ளது என்று சமூகத்தளங்களுக்கு மாறியுள்ளனர்... நாளை இதை விட வேகமாக இன்னொரு சேவை வரும். அப்போது... தலைப்பு மாறும். அவ்ளோதான்!!

(கட்டுரையாளர் ஒரு வலைப்பதிவர். இணைய உலகில் 'கிரிபிளாக்' எனும் வலைப்பூ மூலம் நிறைய தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதி வருகிறார்)

English summary
The recent talk in cyber world is the threat to email service due to the fast raising social networks. According to experts, the next generation will be prefers only social networks instead of mail service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X