For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16. பொறை உடைமை

By Staff
Google Oneindia Tamil News

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

(151)

விளக்கம்:

தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும்.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

(152)

விளக்கம்:

அளவுகடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனினும் நன்மையாகும்.


இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

(153)

விளக்கம்:

வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்.


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

(154)

விளக்கம்:

நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கொள்ள வேண்டும்.


ஒறுத்தாரை ஒன்றாக வைப்பாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

(155)

விளக்கம்:

தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார். ஆனால், பொறுத்தவர்களைப் பொன் போல் பொதித்து வைப்பார்கள்.


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

(156)

விளக்கம்:

தீங்கு செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு அனறு ஒரு நாளே இன்பம் ; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்வரை புகழ் உண்டு.


திறனல்ல தற்பிற் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

(157)

விளக்கம்:

தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நன்று.


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

(158)

விளக்கம்:

செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்றுவிட வேண்டும்.


துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்.

(159)

விளக்கம்:

எல்லைமீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையானர் ஆவர்.


உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

(160)

விளக்கம்:

உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலேதான் பெரியவர்ஆவர்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X