அதிகார விளக்கம்: உண்மையான அன்பின்றி சுயநலத்திற்காக மட்டும் பழகும் போலி நட்பை அறிந்து விலக வேண்டும். வெளிப்புற அன்பையும் உண்மையான நட்பையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்வது மனக்காயங்களையும் இழப்புகளையும் தவிர்க்க உதவும்.
| எண் | குறள் |
|---|---|
| 821 |
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு பொருள்: மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
|
| 822 |
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் பொருள்: வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.
|
| 823 |
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது பொருள்: மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
|
| 824 |
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் பொருள்: நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.
|
| 825 |
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று பொருள்: மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
|
| 826 |
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் பொருள்: நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
|
| 827 |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் பொருள்: வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
|
| 828 |
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து பொருள்: பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
|
| 829 |
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று பொருள்: வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.
|
| 830 |
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல் பொருள்: நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
|